கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* எந்த அமைப்பில் இருந்தாலும், எந்த அரங்கமாக இருந்தாலும், ஆண் ஆதிக்கம் விடுவதில்லை; அவர்கள் அத்தனைப் பேரும் முன்வரிசையிலே வந்து உட்கார்ந்து விடுவார்கள்!
*நம்முடைய உழைப்பாளர்களாக இருக்கக்கூடிய மகளிர் எங்கேயோ கடைசியிலே தள்ளப்படுவார்கள் அல்லது ஒதுக்கப்படுவார்கள்!
ஆனால், நம் கழக மாநாட்டில், பெண்கள் அனைவரும் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்!

சென்னை, பிப். 26 எல்லா இடங்களிலும், எந்த அரங்கத்திலே இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தா லும் – ஆண் ஆதிக்கம் விடுவதில்லை. அவர்கள் அத்தனை பேரும் முன்வரிசையிலே வந்து உட்கார்ந்து விடுவார்கள். நம்முடைய உழைப்பாளர்களாக இருக்கக்கூடிய மகளிர் எங்கேயோ கடைசியிலே தள்ளப்படுவார்கள் அல்லது ஒதுக்கப்படுவார்கள். ஆனால், இந்த இடத்தில், பெண்கள் அனைவரும் முன்னாலே அமர்ந்திருக்கிறார்கள். வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலே, பெண் இருப்பார் என்று சொல்வார்கள். வெற்றிகரமான ஆணுக்குப் பின் பெண் பின்னால் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் முன்னாலேதான் இருக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சை: திராவிடர் கழக மகளிரணி,
மகளிர் பாசறை மாநில மாநாடு

21.2.2026 அன்று காலை தஞ்சையில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகக் குறுகிய காலத்தில் அறிவித்தாலும்,
சிறப்பான ஏற்பாடுகள்!

திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி, மகளிர் பாசறை அணிகளின் மாநில மாநாடு – இந்தத் தஞ்சை  மாநகரிலே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மிகக் குறுகிய காலத்தில்

அறிவித்தாலும், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பான வகையிலே நடந்து கொண்டிருக்கிற இந்த மாநாட்டின் தலைவர் மாநில மகளிரணி செயலாளர் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களே, வரவேற்புரை ஆற்றிய மாவட்ட மகளிரணியினுடைய தலைவர் தோழர் கலைச்செல்வி அவர்களே, கழகக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றிய லால்குடி மாவட்ட மகளிரணி தலைவர் தோழர் குழந்தை தெரசா அவர்களே,  மாநில மாநாடாகிய இந்த மாநாட்டை சிறப்பாகத் திறந்து வைத்து உரையாற்றிய கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் தோழர் மதிவதனி அவர்களே, தீர்மான அரங்கத் தலைவர் வழக்குரைஞர் தோழர் வீரமர்த்தினி அவர்களே, ஒருங்கிணைப்பு பணியாற்றிய மத்தூர் இந்திராகாந்தி அவர்களே, சூளுரை அரங்கம் என்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய இளைய தலைமுறை தோழர்கள் இரா.அன்புமதி, தேவ.நர்மதா, யாழினி, பகுத்தறிவு, அருணா ஆகிய தோழர்களே, இணைப்புரை ஆற்றிக் கொண்டிருக்கக்கூடிய மாநில மகளிரணி துணைச் செயலாளர் தோழர் குடியாத்தம் தேன்மொழி அவர்களே, அன்னை நாகம்மையார் அவர்களுடைய படத்திறப்பினை நடத்தி வைத்து உரையாற்றிய தோழர் இறைவி அவர்களே, அன்னை மணியம்மையார் அவர்களுடைய படத்திறப்பை சிறப்பாகச் செய்த தோழர் பெரியார் செல்வி அவர்களே,

‘பெண் ஏன் அடிமையானாள்?’
– 50 ஆவது பதிப்பு!

‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்று சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னாலே அய்யா அவர்களின் அந்தக் கட்டுரைகள் புத்தகமாகி 50 ஆவது பதிப்பு என்ற ஒரு பெரிய பொன்விழா பதிப்பு என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்தப் பதிப்பு நூலை சிறப்பாக வெளியிட்டு, அதனுடைய தேவைகளை விளக்கி இருக்கக்கூடிய அருமை தோழர் வழக்குரைஞர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்களே,

அதேபோல பேரறிஞர் அண்ணா அவர்கள் கடைசியாக எழுதிய மிக முக்கியமான ஓர் எழுத்தோவியம். அதைப் படிக்கின்ற நேரத்தில் நமக்கெல்லாம் மிகப்பெரிய அளவிலே துன்பமும், துயரமும் வரக்கூடிய அளவிலே இருக்கும். அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, அந்தத் துன்பமும், பதவியும் அவருக்கு எவ்வளவு சங்கடத்தைக் கொடுத்தன என்பதை எல்லாம் மனம் திறந்து எழுதி இருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய கொள்கை உயில் மாதிரி, இந்தப் புத்தகம். ஆகவே, இதனைப் பலரிடையேயும் பரப்ப வேண்டும்.

மாநில சுயாட்சி – மாநிலங்களுடைய உரி மைகள் என்பதற்கான குரல், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் காரணமாக இந்தியா முழுவதும் இன்றைக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டது.

மாநில சுயாட்சிக் குரலை வலுப்படுத்திய டாக்டர் ராஜமன்னார் குழு அறிக்கையைத் தாண்டி, இப்போது புதிதாக நேற்று முன்தினம் சட்டமன்றத்திலே உரிமையோடு மாநில சுயாட்சியின் அவசியத்தை எடுத்து உரையாற்றியிருக்கிறார்கள். ஆகவே, அது எப்படிப்பட்ட ஓர் அருமையானது, தேவையானது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டுமானால், இந்தப் புத்தகம் அறிஞர் அண்ணா அவர்களுடைய கடைசிக் கடிதம் என்று அவர் உருக்கமாக எழுதியிருக்கிற, அந்தப் புத்தகத்தை வெளியிட்டு சிறப்பாக உரையாற்றிய ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத் தலைவர் தோழர் அனிச்சம் கனிமொழி அவர்களே, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே

நம்முடைய ஜெயகுமார் அவர்களுடைய தலைமையில் – தஞ்சைத் தோழர்கள் வித்தியாசம் இல்லாமல், மாவட்டத் தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பங்களிப்பை அளித்து, வரலாறு காணாத வெற்றி என்று சொல்லக்கூடிய அளவிலே, இந்த மாநாட்டை  சில நாட்களிலே ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஒரு சில வாரங்களுக்கு இடையேதான் மாநட்டை அறிவித்தோம்.

பெண்கள் அனைவரும்
முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்!

ஆனால், திராவிடர் கழகத்தினுடைய மகளிருக்காக மட்டுமே உரிய மாநில மாநாடு அல்ல; மாறாக, முதலில் மகளிரணி, அந்த மகளிரணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். நிச்சயமாக இந்த அரங்கம் முழுவதும் பார்த்தீர்களேயானால் மகளிர்தான், மகளிர் மட்டுமே என்று சொன்னது நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், மகளிர் முன்னாலே அமர்ந்திருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும், எந்த அரங்கத்திலே இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும் – ஆண் ஆதிக்கம் விடுவதில்லை. அவர்கள் அத்தனை பேரும் முன்வரிசையிலே வந்து உட்கார்ந்து விடுவார்கள். நம்முடைய உழைப்பாளர்களாக இருக்கக்கூடிய மகளிர் எங்கேயோ கடைசியிலே தள்ளப்படுவார்கள் அல்லது ஒதுக்கப்படுவார்கள். ஆனால், இந்த இடத்தில், பெண்கள் அனைவரும் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.

எங்களை அனுமதித்ததற்காக
முதற்கண் உங்களுக்கு நன்றி!

வெற்றிகரமான ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாலே, பெண் இருப்பார் என்று சொல்வார்கள். வெற்றிகரமான ஆணுக்குப் பின் பெண் பின்னால் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் முன்னாலேதான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே சிறப்பாக இவ்வளவு பேர் இந்த அரங்கம் முழுவதும் மகளிர், மகளிர், மகளிர் என்ற அளவில் இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்காக நாங்கள் இரண்டு பேரும் தான் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். நானும், கவிஞர் அவர்களும் இருக்கிறோம். ஏதோ அவர்கள் பார்த்து ரொம்ப கருணையோடு எங்களை அனுமதித்திருக்கிறார்கள். அதுவும் எதற்காக என்றால், ‘‘எங்களுக்காகப் பேசு வதற்கு, எழுதுவதற்கு ஆள் தேவை’’ என்பதற்காக அனுமதித்திருக்கிறார்கள். நீங்கள், எங்களை அனு மதித்ததற்காக முதற்கண் உங்களுக்கு நன்றி!

என்னுடைய நெஞ்சம் நிறைந்த
பாராட்டுகள்!

ஆகவே, இனிமேல் காலங்காலமாக பின்னால் இருந்தவர்கள், முன்னுக்கு வரவேண்டும். ஆதிக்கம் காரணமாக முன்னால் இருந்தவர்கள், உரிய இடத்தை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு பின்னால் செல்ல வேண்டும். அதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எல்லோருக்கும் சமவாய்ப்பு! எல்லோரும் சமத்துவமானவர்கள்! அதைத்தான் இந்த இயக்கத்திலே சொல்லுகிறோம். அதற்குரிய அருமையான மாநாடாக இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்காக உழைத்திருக்கின்ற தஞ்சை மாநகரத் தோழர்கள், தஞ்சையைச் சுற்றி இருக்கக்கூடிய மாவட்ட கழக தோழர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனை வருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டு களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் அணியில் இருந்து மகளிரும் இங்கே சிறப்பாக வந்திருக்கிறீர்கள். அதற்கு அடுத்து நண்பர்களே, மிக முக்கியமான செய்தி!

மகளிர்  மாநாட்டில்  மூன்று புத்தகங்கள்  வெளியி டப்படவிருக்கின்றன. தந்தை பெரியார் அவர்களுடைய காலத்தில் ஒரு மாநாடு நடத்தினால்,, அந்த மாநாட்டுக்கு முத்திரையாக புத்தகங்கள் வெளியிடப்படும். அந்தப் புத்தகங்களை ஒவ்வொருவரும் வாங்கிச் சென்று பரப்புவார்கள்; அப்படித்தான் நூறாண்டு கண்ட இந்த இயக்கம் வளர்ந்து வந்தது.

பணம் முக்கியமல்ல,
கொள்கை மிக முக்கியமானது!

இந்த மூன்று புத்தகங்களும் வெறும் காகிதங்கள் அல்ல நண்பர்களே, அறிவு ஆயுதங்கள்! இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகங்களில் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ புத்தகம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே பெண்ணுரிமையைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள்  48. ஆனால், மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும்;  பணம் முக்கியமல்ல, கொள்கை மிக முக்கியமானது. அதை மகளிர் பரப்ப வேண்டும் என்பதற்காகத்தான், இந்தப் புத்தகம் 50 ஆவது மதிப்பு என்று சொல்லுகின்ற நேரத்தில், வெறும் 20 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இருந்தாலும் 20 ரூபாய் கொடுத்து, உங்களுக்காக மட்டும் வந்து வாங்கினால் போதாது; ஒவ்வொருவரும் அவரவருடைய வசதிக்கேற்ப கட்டுக்கட்டாக வாங்க வேண்டும். அப்படி வாங்குவது வீட்டுக்குள்ளே வைப்பதற்கு அல்ல; மகளிர் நாள் என்று சொல்லக்கூடிய நாளிலே, அந்த நாள் நம்மைப் பொறுத்தவரையில் அன்னை மணியம்மையாருடைய பிறந்த நாளாகவும் இருக்கலாம். அல்லது பன்னாட்டு மகளிர் நாளாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும், அன்றைய தினம், முதல் திட்டம், நம்முடைய மகளிர் எந்த ஊரிலே இருந்து வந்து இருந்தாலும், எந்தப் பகுதியில் இருந்து வந்திருந்தாலும், பல பகுதிகளில் இருந்து நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். எல்லோரும் வீடுதோறும் சென்று, மகளிர் உரிமை, பெண்ணுரிமை என்பதை நீங்கள் முன் எடுத்து இந்த புத்தகங்களை பரப்ப வேண்டும்.

அதற்கு அடுத்தபடியாக ‘‘பெண்கள் முன்னேற் றத்துக்கு தந்தை பெரியார் செய்தது என்ன?’’ என்கின்ற புத்தகம்.

இந்தப் புத்தகம் ஓர் அடையாளம்!

அதாவது வேகமாக பேருந்தில் போறீங்க, ரயில் பயணம் செய்வார்கள், கொஞ்சம் இடைவெளி கிடைக்கும்; பெரிய புத்தகத்தைப் படிக்க முடியாது. அப்போது இந்தப் புத்தகத்தைக் கொடுக்கலாம்.  அதற்காகத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் சின்ன குளிகை (கேப்சூல்ஸ்) மாதிரி தொகுத்து 100 விஷயங்களை மிக முக்கியமாகக் கொடுத்திருக்கின்றோம். அதே மாதிரி பார்த்தீர்களேயானால், இந்த புத்தகம் வெறும் 10 ரூபாய். தேநீர் கூட அதிகமான விலை. ஆனால், அதைவிட விலை குறைவானது; ஆகவே, நீங்கள் வாங்கினால் மட்டும் போதாது; இந்த இரண்டு புத்தகங்களையும் வாங்கி மகளிர்க்குக் கொடுக்க வேண்டும். இதை செய்தால்தான் இந்த ஆட்சி இன்றைக்கு எப்படிப்பட்ட புரட்சியைச் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகம் ஓர் அடையாளம்.

(தொடரும்)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *