சென்னை, பிப்.26 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான மக்கள் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், தனது 101-ஆவது வயதில் சென்னையில் மறைவுற்றார்.
எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த அவரது மறைவு, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மருத்துவக் கல்விக்காக உடற்கொடை
மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல், அவரது இறுதி விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப்படுகிறது. உயிருடன் இருந்தபோது மக்களுக்காக வாழ்ந்தவர், மறைவிற்குப் பின்பும் பயன்பட வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர்களின் இரங்கல்
நல்லகண்ணுவின் மறைவையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்:
கனிமொழி (திமுக நாடாளுமன்ற உறுப்பினர்): “விடுதலைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுக்காக நின்றவர். அவரது தியாக வாழ்வு தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.”
மு.வீரபாண்டியன் (சிபிஅய் மாநில செயலாளர்): “உழைப்பாளிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்வை தியாகம் செய்த பேரன்புத் தோழர் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டார். கொள்கையில் சமரசமின்றி வாழ்ந்த அவருக்குச் செவ்வணக்கம்.
“செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): “தமிழ்நாடு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. சமூகநீதிக்கான போராட்டங்களில் அவரது நினைவு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்.
“பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச் செயலாளர்): “ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதி. கம்யூனிஸ்ட் கட்சியின் தூணாக விளங்கிய அவரது எளிமையும் சேவையும் என்றும் நினைவு கூரப்படும்.
இவ்வாறு தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
