வல்லம், பிப்.26- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 04.02.2026 மற்றும் 05.02.2026 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப கட்டுரை வாசித்தலில் (Technical Paper Presentation) கட்டட எழிற்கலைத் துறை மாணவிகள் எம்.ஆஷிகா சுல்தானா, ஜெ.ஜெனிஃபர் “Suitable and Green Building Solutions” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர். மேலும் திட்ட விளக்க காட்சியில் (Project Presentation) என்ற போட்டியில் கணினியியல் துறை மாணவர்கள் ஆர்.நவீன்குமார், எம்.சரவணன் ஆகியோர் “Surveillance Car” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர். கட்டட எழிற்கலைத் துறை மாணவி ஜெ.ஜெனிஃபர் “CAD Modeling” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இயந்திரவியல் துறை மாணவர் ஆர்.கோகுல கிருஷ்ணா “Technical Photography” என்ற போட்டியில் மூன்றாம் பரிசை வென்றுள்ளார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர்கள் ஆர்.தருண் பாலாஜி,
எஸ்.அரவிந்த் ஆகியோர் “Electro Fix“ என்ற போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளனர். இக்கல்லூரியின் சார்பாக இயந்திரவியல் துறை பேராசிரியர் பெ.மாதவன் மற்றும் கட்டட எழிற்கலைத் துறை பேராசிரியை ஆர்.சவுமியா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.
பாராட்டுச் சான்றிதழ்களும் மற்றும் ரொக்கப்பரிசுகளும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன் மற்றும் துறைத்தலைவர்கள் பாராட்டினார்கள்.
