ஜெயங்கொண்டம், பிப்.26– 21.2.2026 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 3 மணி அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பிரியா விடை விழா பள்ளியின் தாளாளர் அவர்களின் வழி காட்டுதலின்படி பள்ளியின் முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளால் பிரியாவிடை விழா நடத்தப் பட்டது. நடனம், பாடல், நாடகம், சிறு விளையாட்டுகள் ஆகியவற்றை வழங்கி மாணவர்களை மனம் மகிழ வைத்தனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், இந்த பள்ளியின் வாசலை விட்டு புதிய உலகத்திற்குப் பயணிக்க உள்ளோம். இந்தத் தருணம் எங்களுக்கு மகிழ்ச்சியும், அதே நேரத்தில் சோகமும் கலந்த ஒன்றாக உள்ளது. இந்தப் பள்ளியில் கழித்த ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாக மாறிவிட்டன.
புத்தக அறிவு
– வாழ்க்கை அறிவு
முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு புத்தக அறிவை மட்டும் அல்லாமல், வாழ்க்கை அறிவையும் கற்றுக் கொடுத்து தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தியதற்கும், எங்களை ஊக்குவித்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்த சிரிப்புகள், சிறிய சண்டைகள், போட்டிகள், விழாக்கள் – இவை அனைத்தும் எங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். பள்ளி வாழ்க்கை என்பது ஒருபோதும் திரும்ப வராத பொன்னான காலம். இன்று நாம் இந்த பள்ளியை விட்டு பிரிந்தாலும், இங்கு கற்ற நெறிமுறைகள் மற்றும் நல்லொழுக்கங்கள் எங்களை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தும். எங்கள் வெற்றிக்கான அடித்தளம் இந்தப் பள்ளிதான் என்று தங்களுடைய நினைவுகளை உணர்வுபூர்வமாக கூறினார்கள்.
நினைவுப் பரிசு
மேலும் தங்களின் நினைவாக பள்ளிக்கு இரும்பு அலமாரி மற்றும் மின்னணு கடிகாரம் பரிசாக வழங்கி மகிழ்ந்தனர். பள்ளி முதல்வர் இரா.கீதா அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பள்ளியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களின் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
எதிர்காலத்தை…
பள்ளியின் முதல்வர் தன்னுடைய உரையில் பள்ளி என்பது பாட புத்தக அறிவை மட்டுமல்ல; ஒழுக்கம், பொறுப்பு, மனிதநேயம் போன்ற வாழ்க்கை மதிப்புகளை கற்றுக் கொடுக்கும் தாயகம். இங்கு நீங்கள் கற்றுக் கொண்ட ஒவ்வொரு பாடமும் உங்கள் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் விளக்காக இருக்கும். இப்போது நீங்கள் புதிய உலகை நோக்கி செல்ல உள்ளீர்கள் — உயர்கல்வி, தொழில், சமூகப் பொறுப்புகள் என பல வாய்ப்புகள் உங்கள் முன் காத்திருக்கின்றன.
எந்த பாதையைத் தேர்வு செய்தாலும், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றை உங்கள் துணை யாகக் கொள்ளுங்கள். “உயர்வு என்பது உயர்ந்த எண்ணங் களிலிருந்து பிறக்கும்” என்பதைக் கவனத்தில் கொண்டு, உங்கள் கனவுகளை தைரியமாக நோக்கி முன்னேறுங்கள்.
உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் ஒளிப்படத்துடன் கூடிய சாவி சங்கிலி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது மாணவர்கள் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர். விழாவில் இறுதியாக மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
