சிவகங்கை எஸ். இராமச்சந்திரன்
மறைந்த நாள் இன்று! (26.2.1933)
சுயமரியாதை இயக்க வரலாற்றில் சிவகங்கை வழக்குரைஞர் எஸ்.இராமச்சந்திரனார் அவர்கள் ஒரு சிறந்த சுயமரியாதை இயக்க வீரராவார். இவர் வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.
தன் பணிக்காலத்தில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், தாலுகா போர்டு (Taluk Board) தலைவராகவும் பதவி வகித்தவர்.
அவர் தாலுகா போர்டு (Taluk Board) தலைவராக இருந்த காலத்தில் ‘‘என்னுடைய பதவி காலத்தில் இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்குக்கூட உத்தியோகம் கொடுக்க மாட்டேன்’’ என்று பொது மேடையிலேயே பறைசாற்றிய பெருமைக்குரியவர்.
செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் ஜாதிப் பட்டம் பெயருக்கு பின்னிருப்பதை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்று, தன் பெயருக்கு பின்னிருந்த ‘சேர்வை’ என்ற ஜாதிப் பட்டத்தை நீக்கிய பெரியாரின் படைத் தளபதிகளில் ஒருவர்தான் சிவகங்கை இராமச்சந்திரனார்.
இவரது செல்வாக்கைக் கண்டு காங்கிரசில் இவரைச் சேர்க்க விரும்பிய மதுரை வைத்தியநாத அய்யரிடம் மனித ஏற்றத் தாழ்வை பிரதிபலிக்கும் சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றினால் காங்கிரசில் நாள் சேரத் தயார் என்று ஆரியத்தை அலறடித்த தந்தை பெரியார் அவர்களின் சீடர்தான் ராமச்சந்திரனார். அவரது 93ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (26.2.1933).
வாழ்க இராமச்சந்திரனார் புகழ்!
ஜஸ்டிஸ் ஆங்கில இதழ் தொடங்கப்பட்ட
நாள் இன்று! (26.02.1917)
‘ஜஸ்டிஸ்’ நாளிதழ் பிப்ரவரி 26, 1917 அன்று நீதிக்கட்சி சார்பில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் முக்கியத் தலைவர்களால் இது தொடங்கப்பட்டது.
டாக்டர் டி.எம். நாயர்: இந்த இதழின் முதல் ஆசிரியராகவும், முதன்மை நிறுவனராகவும் பணியாற்றினார்.பிட்டி தியாகராய செட்டியார் மற்றும் டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோர் இந்த நாளிதழை நிறுவுவதில் மிக முக்கியப் பங்காற்றினர்.
109 ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழ் தொடங்கப்பட்ட நாள் இன்று (26.2.2026).
