முந்தைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறீவைகுண்டத்தில் வாழ்ந்து வந்த நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் இராமசாமி கருப்பாயி இணையருக்கு மூன்றாவது குழந்தையாக 1925 டிசம்பர் 26 பிறந்தவர் தோழர் இரா.நல்லகண்ணு.
இவருடன் பிறந்த
சகோதர, சகோதரிகள்
- இரா.முத்துராமலிங்கம் (அண்ணன்),
- இரா.சேது அம்மாள் (அக்கா),
- இரா.நல்லகண்ணு,
- இரா.வைகுண்டத்தம்மாள் (தங்கை),
- இரா.சேது வைகுண்டராமன் (தம்பி),
- இரா.முத்தம்மாள் (தங்கை),
- இரா.இருளப்பன் (தம்பி),
- இரா.லட்சுமி (தங்கை),
- கமலம் (தங்கை),
- ஜானகி (தங்கை)
என பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.
நல்லகண்ணுவின் பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரையும் படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் கருத்தாக இருந்துள்ளனர். அதனால் அனைவரும் உயர் கல்வி பெற்றுள்ளனர்.
1942–1944 காலகட்டத்தில் தேச விடுதலைப் போராட்ட வீரர் அண்ணாச்சி சண்முகம் அவர்களிடம் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் நூல்களை வாங்கி படித்து, தத்துவக் கண்ணோட்டம் பெற்றவர். அவரது பள்ளி ஆசிரியர் பலவேசம் அவர்களிடமும் இடதுசாரி கருத்துக்களை பெற்று, களப்பணி ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர்.
சிறீவைகுண்டத்தில் வாலிபர் சங்கம் அமைத்து, அதில் இணைந்து செயல்படத் தொடங்கியதில் இவரது அமைப்பு சார்ந்த பொது வாழ்க்கை தொடங்குகிறது.
கம்யூனிஸ்டு கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய வி.எஸ்.காந்தி வாலிபர் சங்க செயலாளராக செயல்பட்ட அமைப்பின் முன்னோடி உறுப்பினராக இருந்த இரா.நல்லகண்ணு “வாலிபர் சங்கம் தான் எனது அரசியல் ஆரம்பப் பள்ளி” என்கிறார். இவருடன் சக தோழராக இணைந்து செயல்பட்ட என்.டி.வானமாமலை பின் நாட்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாடறிந்த முன்னணி வழக்குரைஞராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்குநேரி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் நா.வானமாமலை, நெல்லை மாவட்ட கட்சிப் பணிக்காக சென்ற தோழர் ப.மாணிக்கம், மீனாட்சிநாதன், கே.பாலதண்டாயுதம் போன்றவர்கள் தோழர் இரா.நல்லகண்ணு அரசியல் வாழ்க்கையின் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
நான்குநேரி வட்டாரத்தில் விவசாயிகளை திரட்டி சங்கம் அமைத்து போராடுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்த நல்லகண்ணுவை நேரில் கண்ட விடுதலைப் போராட்ட வீரர், பி.சீனிவாசராவ் “கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்ட, கிராமத்து விவசாயிகளின் சாயலில் உள்ள வாலிபர் நல்லகண்ணு, எதிர் காலத்தில் நல்ல ஊழியராக வருவார்” என 1950களில் தொலை நோக்குப் பார்வையுடன் மதிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் போராட்ட காலத்தில் தீவிரமாக செயல்பட்ட இரா.நல்லகண்ணு, திருநெல்வேலி சதி வழக்கில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்குள்ளானர். இவர் ஒன்பதரை வருடங்கள் சிறை வாழ்க்கை அனுபவமும் சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை அனுபவமும் பெற்றுள்ளார்.
தமிழ்மொழி மீது தளராத பற்றுக் கொண்டவர். புலவர் பட்டம் பயின்றவர். தொன்மை இலக்கியங்களை கற்பதில் ஆர்வம் காட்டியவர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்துடன் எப்போதும் உறவில் இருந்து வந்தவர்.
திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்த இரா.நல்லகண்ணு, கட்சி தலைமையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு கட்சி தகவல் மய்யப் பொறுப்பாளராக செயல்பட்டார். பின்னர் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு 1992 வரையிலும் அப்பொறுப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, சங்க அமைப்பை விரிவு படுத்தி, புதிய ஊழியர்களையும் கண்டறிந்து சங்கப் பணிகளில் இணைத்துக் கொண்டவர்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு 1992 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் எனும் உயர்ந்த வடிவம் பெற்றவர்.
1996 ஆம் ஆண்டில் அரசியல் களம் கடுமையான நெருக்கடியை எதிர் கொண்ட போது திமுகழகம், தமிழ்மாநில காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைவதில் முக்கியப் பங்காற்றிவர். தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 1996 ஆண்டு தேர்தல் முடிவு புதிய அரசியல் திசை வழியை உருவாக்கியது.
வகுப்புவாத சக்திகள் ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றி, ஆட்சியில் அமர்ந்த ஆரம்ப நிலையில் இருந்து, அதற்கு எதிராக தமிழ்நாட்டில் அரசியல் அணிச்சேர்க்கையை உருவாக்கி எதிர்கொண்டவர்.
1982 ஆம் ஆண்டில் மீனாட்சிபுரத்தை மய்யமாகக் கொண்டு, மதவெறி சக்திகள் கலவரத்தை உருவாக்கிய போதும் 1993 1998 காலகட்டங்களில் ஜாதி கலவரங்கள் வெடித்து மக்கள் பெருந்துயரத்துக்கு ஆளான போதும், தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட பெரும் பங்களித்தவர்.
சமூக அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் முனைப்புடன் பணியாற்றிய இரா.நல்லகண்ணுவின் மாமனார் அண்ணாசாமி மருதன் வாழ்வு கிராமத்தில் ஜாதி வெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்காக அரசு தரப்பில் வழங்கிய வெகுமதிகளை ஜாதி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பில் இருந்த காலத்தில், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், நிலவுரிமைக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய செயலாளராகவும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். ஜெர்மன், சீனா உள்ளிட்டவெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
தாமரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அய்ந்தாண்டுகள் தடை உத்தவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் இரா.நல்லகண்ணுவின் பொதுச் சேவையைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி சிறப்பு செய்துள்ளன. தமிழ்நாடு அரசு 2007இல் டாக்டர் அம்பேத்கர் விருதும், 2022ல் தகைசால் தமிழர் விருதும் வழங்கி சிறப்பித்துள்ளன. விருது தொகைகளை இயக்க வளர்ச்சிக்கும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் வழங்கிய பெருமைக்குரியவர்.
தோழர் இரா.நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு உறுப்பினராக இருந்த மருதன் வாழ்வு கிராமத்தை சேர்ந்த அண்ணாசாமியின் மகள் இரஞ்சிதம் அம்மையாரை வாழ்விணையராக பெற்றவர். இவர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவர் தோழர் இரா.நல்லகண்ணுவின் கட்சிப் பணிகளுக்கு அடித்தளமாக இருந்தவர். கடுமையான அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்ட போது குடும்ப சுமைகளை முழுமையாக ஏற்று உறவுகளை பாராமரித்து வந்தவர். குழந்தைகளை உயர்ந்த நிலைக்கு சிறப்பாக வளர்த்தெடுத்தவர். திருமதி இரஞ்சிதம் அம்மையார் 2016ஆம் ஆண்டில் காலமானார்.
இவர்களுக்கு ந.காசிபாரதி (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) டாக்டர் ந.ஆண்டாள் (ஓய்வு) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மருமகன் வழக்குரைஞர் எஸ்.அழகுமுத்துபாண்டியன் கட்சி மற்றும் தொழிற்சங்க அரங்கில் முழுநேர ஊழியராக செயல்பட்டவர். தூத்துக்குடி மாவட்ட கட்சி செயலாளராகவும் பணியாற்றியவர். இரண்டாவது மருமகன் டாக்டர் என்.பழனி மருத்துவராக பணியாற்றியவர். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டனர். இவர்களுக்கு சதிஷ் என்கிற பேரனும், ரஞ்சனி கண்ணம்மா, பிரியா ஆகிய இரண்டு பேத்திகளும் உள்ளனர். தோழர் இரா.நல்லகண்ணு தமிழ்நாடு அரசு வழங்கிய வீட்டில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
