தஞ்சை. பிப். 25- “இன்னமும் ஆணாதிக்கம் கோலோச்சும் இந்த சமூகத்தில், எந்த அமைப்பு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அங்கு ஆண்கள் முன் வரிசையில் அமர்ந்து விடுவார்கள். ஆனால், இங்கே தான் முதல் வரிசையில் இருந்து கடைசி வரிசை வரை மகளிர் மட்டுமே இருக்கிறார்கள்” என்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

“திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை” சார்பில் மாநில மாநாடு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலையிலும், திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில், மாநில மாநாடு திலகர் திடலில் மாலையிலும், அனைத்து அணிகள் சார்பாக திராவிடர் இன எழுச்சிப் பேரணியும் 21.02.2026, சனிக்கிழமை அன்று, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாமல், தஞ்சை கழக மாவட்டத்தில் புதிய வரலாறு படைத்தது என்று சொல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திலகர் திடல் வரையிலும் இருக்கும் சாலையின் நடுவே வரிசை கட்டி நின்ற கழகக் கொடிகளும், திலகர் திடலில் மாலை மாநாட்டுக்காக 30 அடி உயர 60 இரும்பு கம்பங்களில் 15 அடி அகல நீளத்தில் பறந்த கருப்பு சிவப்புக் கொடிகளும் கண்களை கவ்வி இழுத்தன. சுவர் எழுத்துகளும், சுவரொட்டிகளும், பதாகைளும் இதுவல்லவோ மாநில மாநாடு என்பதைப் பறைசாற்றின.
திராவிட இயக்கத் தத்துவத்தை தந்த தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையும், அந்த தத்துவத்தை அரசியல் வடிவம் ஆக்கிய அறிஞர் அண்ணாவின் அமர்ந்திருக்கும் சிலையும், அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகத் தலைமையேற்று, நவீன சிற்பியாகத் தமிழ்நாட்டை கட்டி எழுப்பிய, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் முழு உருவச் சிலையும் அமைந்திருக்கும் நான்கு சாலை சந்திப்புச் சதுக்கத்தில், கழகக் கொடிகள் கண்களையும், கருத்தையும் நிறைத்தன. அதையொட்டி, பேரணி தொடங்க இருந்த, “பெரியார் பகுத்தறிவுச் சுடர்” சதுக்கமான புது ஆற்றுப் பாலம் வரையிலும் கழகக் கொடிகளும், சுவர் எழுத்துகளும், பதாகைகளும் கருஞ்சட்டை வீரர்களுக்கு மித மிஞ்சிய உற்சாகத்தையும், வீறு கொள்ளும் படியான இன எழுச்சியையும் வாரி, வாரி வழங்கிக் கொண்டிருந்தன. அது மட்டுமல்ல பொதுமக்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்திருந்தது.

அதே சாலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காலை 9 மணி அளவில் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநில மாநாடு நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தனி வாகனங்களிலும், ரயிலிலும் வந்திருந்த தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாரை, சாரையாக மாநாட்டு அரங்கத்தினுள் நுழைந்து கொண்டு இருந்தனர்.
பெரியார் சமூகக் காப்பு அணியில் பயிற்சி பெற்ற மகளிர் அரங்கத்தின் வாசலில் நின்று கொண்டு, “ஆண்களுக்கு உள்ளே அனுமதி இல்லை” என்றும், “ஆண்களுக்கென்று தனியாக இரண்டு இடங்களில் பெரிய திரைகளில் மாநாடுகளைக் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அங்கே செல்லும்படியாக அவர்களுக்கு வழிகாட்டிய காட்சி திராவிட இயக்கத்துக்கே உரித்தான ஒன்றாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. மாநாடும் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டது.

சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பார்வதி கணேசன் அவர்களின் நினைவு அரங்கமாக அமைக்கப்பட்டிருந்த மகளிரணி – மகளிர் பாசறை மாநில மாநாட்டு அரங்கத்தில், கலைமாமணி “திருத்தணி பன்னீர்செல்வம் – பாவலர் பொன்னரசு” குழுவினரின் “பெரியார் குரல்” இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம், தெற்கு நத்தம் சித்தார்த்தன், பாவலர் பொன்னரசு, கோபு பழனிவேல் உள்ளிட்ட கலைஞர்கள், “பெரியார் ஒருவர் தான் பெரியார்”, “உலகமெல்லாம் பெரியார் கொள்கை மயம்”, “போராட்டம் எங்கள் ரத்த ஓட்டம்”, “வெண்தாடி வேந்தர் வீராதி வீரர் அவர்”, “பெண்களை அடிமைப்படுத்தியது ஸநாதனம்” உள்ளிட்ட பல்வேறு கொள்கைப் பாடல்களை பாடி, மாநாட்டினை எழுச்சியாகத் தொடங்கி வைத்தனர். தொடக்க நிகழ்ச்சியாக, லால்குடி மாவட்ட கழக மகளிரணித் தலைவர் குழந்தை தெரேசா, மகளிர் அணி – மகளிர் பாசறை தோழர்கள் புடை சூழ, எழுச்சியுடன் கொள்கை ஒலி முழக்கங்கள் முழங்க, மாநாட்டு அரங்கத்தின் வாசலில் உள்ள கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றும், திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கியும், துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி மாநாட்டைத் திறந்து வைத்தும் மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் இறைவி அன்னை நாகம்மையார் படத்தை திறந்து வைத்தும், மற்றொரு மகளிரணி மாநில துணைச் செயலாளர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்தும் உரையாற்றினர்.
இ.அல்லிராணி, அ. வெண்ணிலா, சுபத்ரா உத்ராபதி, தேவி நீலகண்டன், ராஜாமணி, திரிபுரசுந்தரி, சங்கீதா நிம்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி துணை செயலாளர் குடியாத்தம் தேன்மொழி மேடை ஒருங்கிணைப்பு பகுதிகளை சிறப்பாக செய்து கொடுத்தார். மாநாட்டின் முதல் பகுதியில் ஓர் அங்கமாக தீர்மான அரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில மகளிரணி துணைச் செயலாளர் மத்தூர் இந்திரா காந்தி தீர்மான அரங்கை ஒருங்கிணைத்தார். வேலூர் கலைமணி, காஞ்சிபுரம் ரேவதி, திருச்சி ரூபிகா, அரூர் கல்பனா, தஞ்சை அபிராமி, கோபி வழக்குரைஞர் திலகவதி, மதுரை நாகராணி, சென்னை த.மரகதமணி, விருத்தாச்சலம் உஷா ஆகியோர் வரிசையாக தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
இறுதியாக, மகளிர் பாசறை – மகளிரணித் தோழர்கள் அனைவரும் அனைத்து தீர்மானங்களையும் ஒரு மனதாக வழிமொழிந்து, நிறைவேற்றித் தந்தனர். அடுத்து இளைய தலைமுறையினரின், “சூளுரை அரங்கம்” நடைபெற்றது. சுயமரியாதைச் சுடர் ஏந்துவோம் என்ற பொதுத் தலைப்பில், “சமூகக் களத்தில்” இரா..அன்புமதி, “கல்விப் புலத்தில்” க.அ. யாழினி, “அரசியல் களத்தில்” தோழர் நர்மதா, “பொருளாதாரத் தளத்தில்” தோழர் பகுத்தறிவு, “குடும்ப அமைப்பில்” தோழர் அருணா ஆகியோர் தனித்தனி தலைப்புகளில் சிறந்த கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர். இயக்கத்தின் அடுத்தடுத்த தலைமுறை எத்தகைய கொள்கைத் தெளிவுடன் உருவாகி வருகிறது என்பதற்கு அடையாளமாக இந்நிகழ்வு அமைந்தது.
சரியாக பிற்பகல் 12:10 மணியளவில் கழகத் தலைவர் மாநாட்டு அரங்கினுள் நுழைந்தார். என்றைக்கும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது. அண்ணா நூற்றாண்டு அரங்க நுழைவு வாயிலில் இருந்து மகளிரணி – மகளிர் பாசறைத் தோழர்கள் புடைசூழ, திராவிடர் இயக்க கொள்கைகள் முழங்க, முழங்க அரங்கம் அதிர, அதிர கழகக் கொடியை கம்பீரமாக ஏந்தியபடி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாநாட்டு அரங்கினுள் நுழைந்தார். அந்தக் காட்சியேகாண்பதற்கு அரியதாக இருந்தது! மயிற்கூச்செரிந்தது! நாடி நரம்புகள் எல்லாம் விடைத்துக் கொண்டன! கழகத் தலைவர் ஆசிரியர் மேடை ஏறி கழகக் கொடியை ஒப்படைத்து விட்டு, அரங்கத்தினருக்கு வணக்கம் செலுத்திய போது, உற்சாகத்தில்; ஏற்பட்ட எழுச்சியில் அரங்கமே அதிர்ந்து போனது. அந்தப் பரபரப்பு அடங்கிய சற்று நேரத்தில், மூத்த திராவிட இயக்க வீராங்கனைகளுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசின் சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருது பெற்ற இனமான நடிகை கனகா அவர்களுக்கு, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் இளங்கோவன் சால்வைக்கு பதிலாக கழகத் தலைவருக்கு ரூபாய் 500/- வழங்கினார். ஒரத்தநாடு நெடுவாக் கோட்டை ஒன்றியத் தலைவர் நேரு தனது பேரன் அமுத நிலவன் சேகரித்த உண்டியலை கழகத் தலைவரிடம் பேரனுடன் சென்று ஒப்படைத்து மகிழ்ந்தார்.
கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்
பசும்பொன் செந்தில்குமாரி ஆகியோர் சென்னை மாவட்ட மகளிர் தோழர்களுடன் இணைந்து, நன்கொடைகள் மூலமாகத் திரட்டிய நிதியாக, “பெரியார் உலகம்” வளர்ச்சிக்கு, ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினர். தொடர்ந்து, தந்தை பெரியார் வழங்கிய பெண் உரிமைச் சாசனமான, “பெண் ஏன் அடிமையானாள்?” நூற்றாண்டு சிறப்பு 50ஆம் பதிப்பு குறைந்த விலைப் பதிப்பாகக் கழகத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது. “பெண்கள் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?” எனும் புத்தகம், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களால் வெளியிடப்பட்டது. திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்கள் அம்பிகா, திலகவதி, பாக்கியலட்சுமி ஆகியோர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். ஈரோடு – பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் தலைவர், அனிச்சம் கனிமொழி அவர்கள், “அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசிக்) கடிதம்” புத்தகத்தை வெளியிட, கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி பெற்றுக் கொண்டார்.
நிறைவாக, பிற்பகல் 1:30 மணியளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். மாநாட்டு அரங்கினுள் முதல் வரிசையில் இருந்து இறுதி வரையிலும், உட்காருவதற்கு இடமில்லாமல் வாசலிலும், பக்கவாட்டிலும், மகளிரணியினரும், மகளிர் பாசறைத் தோழர்களும், கழகத் தலைவர் பேசுவதை பெரிய திரையில் பார்ப்பதைவிட, நேரில் கேட்டு விட வேண்டும் என்ற ஆவலில், ஆண் தோழர்கள் கிடைத்த சிறு சிறு இடைவெளிகளில் ரகசியமாக நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்ட கழகத் தலைவர், “எந்த அமைப்பாக இருந்தாலும், ஆணாதிக்கம் காரணமாக ஆண்கள் முன் வரிசையில் அமர்ந்து விடுவார்கள். ஆனால், இங்கேதான் முன் வரிசையில் இருந்து கடைசி வரிசை வரை மகளிர் மட்…டுமே அமர்ந்திருக்கிறார்கள்” என்று அரங்கம் அதிர, அதிர பலத்த கைதட்டல்கள் ஒலிகளுக்கிடையே தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து மாநாட்டு அரங்கத்தில் வெளியிடப்பட்ட, “பெண் ஏன் அடிமையானாள்?”, “பெண்களுக்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?” “அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசிக்) கடிதம்” ஆகிய மூன்று புத்தகங்களும் வெறும் காகிதங்கள் அல்ல; அறிவாயுதங்கள்! அவற்றை மகளிரணி – மகளிர் பாசறை தோழர்கள் வீடு வீடாக சென்று, திராவிட மாடல் அரசை மீண்டும் அரியணையில் அமத்துவதற்கான பரப்புரையை செய்ய வேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டார். மேலும் அவர், “தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு தான், இதே தஞ்சையில் மகளிர் பிரிவு தொடங்கப்பட்டது. இன்று அதே தஞ்சையில் அரங்கம் முழுவதும் மகளிர் மட்டுமே நிறைந்துள்ள அளவுக்கு மகளிர் பிரிவு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது” என்று திராவிடர் இயக்கத்தில் மகளிரின் அரிய பங்கைச் சுட்டிக்காட்டி, அதற்காக ஒன்று திரண்டுள்ள மகளிருக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
ஊர்வலத்தில் விசிறி சாமியார்!
சுமார் மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்ட மகளிர் அணியின் முன்வரிசை முழக்கங்களோடு துவங்கிய பேரணியில், தஞ்சையைச் சேர்ந்த விசிறி சாமியார் என்பவர் ஊர்வலத்தில் திராவிடர்கழகக் கொள்கையை முழக்கமிட்டவாறு வந்தது பொதுமக்களை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்க்க வைத்தது! “தான் ஆத்திகத்தில் இருந்தாலும் நாலு வயதில் பெரியாரை பார்த்ததில் இருந்து, தனக்கு பெரியார் கொள்கை மீது ஆழ்ந்த பற்றுண்டு” என விவரித்தார்.
தமிழர் தலைவர் அவர்கள் ஊர்வலத்தை பார்வையிட்ட மேடைக்கு அருகில் நின்று கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்ற தோழர்களை தன் விசிறியால் விசிறி விட்டுக் கொண்டிருந்தார். தந்தை பெரியார் என்னும் பெரும் கருந்துளை (பிளாக் ஹோல்) அனைவரையும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது!!
தொடர்ந்து அவர் நீதிக்கட்சியில் தொடங்கி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெண்களுக்காகவும், திருநங்கை – திருநம்பி உள்ளிட்டோருக்காகவும் ஆற்றிய தொண்டுகளைப் பட்டியலிட்டு, திராவிடர் இயக்கம் பாலின சமத்துவத்திற்காக எந்த அளவுக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எண்பித்தார். இங்கிலாந்தில் மனிதநேயத்திற்கான அமைப்புகள் சார்பில், மதமற்ற, மனிதம் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்காக இன்னமும் போராடிக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியும், அதன் மூலம் திராவிட இயக்கத்தின் பெருமையை விளக்கியும், “அதனால்தான் பெரியார் உலகமயமாக வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்!” என்பது வெறும் ‘சொல் நயம்’ அல்ல; ‘செயல் நயம்!’ என்பதைப் புரிய வைத்தார். நிறைவாக, மீண்டும் ஒருமுறை மாநாட்டு அரங்கத்தில் வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களையும், வீடு வீடாக சென்று மக்களுக்கு வழங்கி பிரச்சாரம் செய்யும் பணியை மேற்கொள்ளுமாறு மகளிரணி – மகளிர் பாசறைத் தோழர்களுக்கு அன்பு கட்டளையிட்டு, தனது உரையை நிறைவு செய்தார்.
