பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லால்குடி, பிப்.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம். “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2026 முதல் 18.02.2026 வரை நொச்சியம் மாதவபெருமாள் கோயில் விஜயா நகர் பகுதியில் தொடர்ந்து ஒருவாரகாலம் நடை பெற்றது. இச்சிறப்பு முகாமின் துவக்க விழா 12.02.2026 அன்று மாலை 6:00 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் வரவேற்புரையாற்றினார். திருச்சி மண்ணச்சநல்லூர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.செல்வி தமது வாழ்த்துரையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்களை நேரில் காணும் வாய்ப்பை பெற்றதனையும், முகாமில் பங்கேற்கும் மாணவர்களும் பேராசிரியர்களும் மனிதநேயத்தோடு முழு ஈடுபாட்டுடன் மக்கள் நலப்பணிகளை செய்வதாகவும் பாராட்டினார்.

இத்தகைய எண்ணமும், செயல்பாடுகளும் தந்தை பெரியார் பெயர் தாங்கிய மருந்தியல் கல்லூரியில் பயில்வதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மானுடப் பற்று ஒன்றை மட்டுமே வாழ்வின் இலட்சியமாக கொண்ட அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டற வாழ்வினை கொள்கை நெறியாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் இலால்குடி சுற்றியுள்ள பல கிராமங்களில் நாட்டு நலப்பணித்திட்ட பணிகளை கடந்த 12 வருடங்களாக சிறப்பாக செய்து வருகின்றது. அதற்கு முழு ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, இலால்குடி மாவட்ட கழக செயலாளர் அங்கமுத்து மற்றும் நகர செயலாளர் பாலசந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமிற்காக இல்லத்தினை வழங்கியவருமான இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.பாலசுப்ரமணியன் நாட்டு நலப்பணித்திட்டத்தினை இலால்குடி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடத்தி வரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் முதல்வர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட குழுக்களுக்கும் தம்முடைய நன்றியை முதலில் தெரிவித்து, “நம்மால் முடியும்” என்ற தமிழர் தலைவரின் சிந்தனைக்கேற்ப நாட்டு நலப்பணித்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நலவாழ்வுப் பணியினை செய்வோம் என்று சிறப்புரையாற்றினார்.

நன்கொடை வழங்கல்

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பெ.பெரியசாமி, நகரத் தலைவர் சிவசங்கரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சை மணி மற்றும் கூத்தூர் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். பேராசிரியர் ரா.தினேஷ் நன்றி கூற துவக்கவிழா நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. தமது பணியினை முடித்து நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வில் பங்கெடுப்பதற்காக விரைந்த இலால்குடி மாவட்ட கழகத் தலைவர் வீ.அன்புராஜா முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையிடம் நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடி ரூ. 5000  நன்கொடையாக வழங்கி சிறப்பித்தார்.

தடுப்பூசியும், அதன் முக்கியத்துவமும்!

நாட்டு நலப்பணித்திட்டத்தின் இரண்டாம் நாளான 13.02.2026 அன்று காலை முதல் மாதவ பெருமாள் பகுதியிலுள்ள அங்கன்வாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தூய்மைப் பணியினை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் “தடுப்பூசியும் அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் பேராசிரியர் உமாதேவி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து முனைவர் விஜயலெட்சுமி “உணவே மருந்து” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். மூன்றாம் நானான 14.02.2026 அன்று காலை 9 மணியளவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. அன்றைய நாள் மாலை 6 மணியளவில் முனைவர் இராஜகோபாலன் “ஒன்றிணைவோம் நெகிழி பயன்பாட்டை ஒழிப்போம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “மக்களை அச்சுறுத்தும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள்” என்ற தலைப்பில் முனைவர் கற்பகம் குமர சுந்தரி கருத்துரையாற்றினார்.

இலவச மருத்துவ முகாம்!

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக 15.02.2026 அன்று காலை 9 மணியளவில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பத்மநாபன் மற்றும் கவுன்சிலர் கோபி ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையின் மேனாள் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மரு. ஆ.கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. சு.முனவர் சுல்தானா ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 25 ஆண்கள் மற்றும் 45 பெண்கள் என மொத்தம் 70 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமில் செவிலியர்கள் காமாட்சி, ஹேமமாலினி, செவிலிய உதவியாளர் சுல்தான் பீவி ஆகியோர் பொதுமக்களுக்கு உடல் எடை குருதிச் (இரத்தச்) சர்க்கரை மற்றும் குருதிக் (இரத்தக்) கொதிப்பு போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

சுய மருத்துவத்தின் பாதிப்புகள்!

மருத்துவப் பயனாளிகளுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. ஜெசிமா பேகம், பேரா ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி, பேரா தினேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்கி முகாமினை ஒருங்கிணைத்தனர். அன்றைய நாள் மாலை 6 மணியளவில் “சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்” குறித்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. ஜெசிமா பேகம் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடை பெற்றன.

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல்

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அய்ந்தாம் நாளான 16.02.2025 அன்று காலை 9 மணியளவில் மாணவர்கள் களப்பணி மேற்கொண்டதுடன் விஜயா நகர் பகுதிவாழ் குடும்ப உறுப்பினர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் சார்ந்த கணக்கெடுப்பினை மேற்கொண்டனர். மாலை 6 மணியளவில் யோககுரு சின்னையனின் யோகா குறித்த செயல்முறை விளக்கம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து “போதையின் பிடியில் இளைய சமுதாயம்” என்ற தலைப்பில் பேராசிரியர் சக்திவேல் சிறப்புரையாற்றினார். ஆறாம் நாளான 17.02.2026 அன்று காலை 9 மணியளவில் மாதவ பெருமாள் கோயில் ஊர் பொதுவிடங்கள், சாலையோரங்கள் மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது. மாலை 6 மணியளவில் திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் கனகசபாபதி பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை நடத்தினார். அதனைத் தொடர்ந்து “உடல் நலமும் மனநலமும்” என்னும் தலைப்பில் முனைவர் ஷகிலா பானு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

முகாம் அறிக்கை

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாளான 18.02.2026 அன்று காலை 9 மணியளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முக்கிய ஊர் பொதுவிடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இச்சிறப்பு முகாமின் நிறைவுநாள் விழா 18.02.2026 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில், பேராசிரியர் ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி வரவேற்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவி ப.கிருத்திகா ஒருவார காலம் நடைபெற்ற சமுதாயப் பணிகளை முகாம் அறிக்கையாக வாசித்தார்.

வாழ்த்துரை

அதனைத் தொடர்ந்து இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.அன்புராஜா, செயலாளர் அங்கமுத்து, தொழிலதிபர் செல்லபாண்டியன், மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பத்மநாபன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் பாலசந்தர், சினேகா மற்றும் கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் மாணவருமான திருச்சி மகாத்மா காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மேனாள் மருந்து கிடங்கு அலுவலர் எம்.சித்ரா பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் 41 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மாணவியாக இருந்து தற்போது கல்லூரியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என் தாய்வீட்டு நிகழ்ச்சியில் பங்கெடுப்பது போன்ற உணர்வை தருவதாகவும் கிராம மக்களின் கருத்துகளையும் பள்ளி மாணவர்களின் எழுச்சியையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி நிறைந்த கிராமத் திருவிழாவில் கலந்து கொள்வது போல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலப்பணிகளை…

மேலும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுநர்களாக உள்ள 80 பேரில் 40க்கும் மேற்பட்டவர்கள் நம்முடைய பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் என்றும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் பெற்றதால் மக்கள் நலப்பணிகளை இக்கட்டான காலத்திலும் தற்போது நிகழ்ந்த கரோனா காலகட்டத்திலும் தொய்வின்றி தொடர முடிந்தது. மனிதனின் நலம் என்பது உடல் நலமும் மன நலமும் இணைந்த ஒன்று என்றும் உடல் நலம் பெற அதிவேக உணவு முறைகளை தவிர்த்து பழங்கள், பச்சைக்காய்கறிகள் நிறைந்த சத்தான சரிவிகித உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி சரியான தூக்கம், உடற்பயிற்சி, எல்லாவற்றிற்கும் மேலாக சுய ஒழுக்கத்தினை இளைய சமுதாயம் கடைபிடிக்க வேண்டும்.

புற்றுநோய் தடுப்பூசி

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதுடன் முதலில் தோல்வி அடைந்தால் அதிலிருந்து வெளிவர பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். எந்த சிறு தோல்வியையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இக்காலத் தலைமுறைகளுக்கு இல்லை. அதனால்தான் நாட்டில் பல்வேறு உயிரிழப்புக்கள், வன்முறைகள் நடக்கின்றன என்பதனை சிறப்பாக எடுத்துரைத்து கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி, சிறு பிள்ளைகளைகளுக்கு ஏற்படும் காதுகேளாமை அதற்கான அறுவை சிகிச்சை Cochlear implant surgery மற்றும் கருவிகள் அரசு பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் வசதிகள் குறித்தும் பொதுமக்களிடத்தில் உரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பெ.பெரியசாமி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பங்கெடுத்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மேலும் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தரை விரிப்பு ஒன்றும் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

அர்ப்பணிப்பு உணர்வுடனும்…

பொதுமக்கள் தமது கருத்துகளை பதிவு செய்கையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பெயரளவிற்கு எந்தப்பணியினையும் செய்யாமல் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மனிதநேயத்துடனும் ஒரு வாரத்தில் மிகச்சிறப்பான களப்பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். அதைவிட அவர்களின் ஒழுக்கம் நிறைந்த அணுகுமுறை, பள்ளி மாணவர்களை வழிநடத்திய விதம் அனைத்தும் பொதுமக்களை கவர்ந்தவையாக இருந்தது என்றும் கூறினர். மேலும் மருத்துவ முகாம்கள், கருத்தரங்குகள் போன்றவை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்றும் தங்களது உள்ளார்ந்த கருத்துகளை சிறப்பாக பதிவு செய்து, நிர்வாகத்திற்கும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களுக்கும் தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. ஜெசிமா பேகம் நன்றி கூற நாட்டு நலப்பணித்திட்டம். இனிதே நிறைவடைந்தது.

திராவிடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட் அவர்களின் முழு ஒத்துழைப்புடனும் இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.அன்புராஜா, செயலாளர் அங்கமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்  பிச்சை மணி, நகர செயலாளர் பாலசந்தர், நகரத் தலைவர் சிவசங்கரன், இலால்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன்,  வே.அசோகன், கூத்தூர் மாவட்ட செயலாளர் பாபு மற்றும் திராவிடர் கழக தோழர்கள் அனைவரின் உறுதுணையுனும் இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  பாலசுப்ரமணியன் அவர்களின் இல்லத்தில் அவரது வாழ்விணையர் பானுமதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மாதவ பெருமாள் கோயில் ஊர்ப்பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்பாக நடை பெற்றது. மேலும் ஊர்ப்பொதுமக்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *