புதுடில்லி, பாரத் மண்டபத்தில் 2026 பிப்ரவரி 16 அன்று ‘இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்கக் கண்காட்சி’யை (ஏஅய் இம்பாக்ட் எக்ஸ்போ) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
‘விக்சித் பாரத்’ (அதாவது ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’) இலக்கை நோக்கி இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்ைட விரைவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடப்பதாக வெகு ஆடம்பரமாக அறிவித்தார்கள்.
கல்கோட்டியாஸ் என்ற தனியார் பல்கலைக் கழகம் அந்த கண்காட்சியில் அமைத்திருந்த அரங்கில் ‘ஆரியன்’ என்ற எந்திர நாய் காட்சிப்படுத்தப்பட்டது.
அதன் பேராசிரியர் நேகா சிங் என்பவர், ‘350 கோடி ரூபாய்க்கு மேல் செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்து, இத்தகைய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிற இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக் கழகம் நாங்கள்தான். அந்த ‘ஆரியனை’ப் பாருங்கள்! எவ்வளவு குறும்பாக நடந்து கொள்கிறது? கண்காணிப்பு, பாதுகாப்பு ஆகிய விஷயங்களை இது அருமையாகக் கவனித்துக் கொள்ளும்’ என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெருமை பொங்கக் கூறினார்.
ஆனால் அது, சீன நாட்டில்தயாரிக்கப்பட்ட ‘யுனிட்ரி கோ2’ என்ற இயந்திர நாய் – இந்தியாவில் 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் அது கிடைக்கிறது. இந்தியத் தயாரிப்பு எனக் கூறிய செய்தி உலகம் முழுமையும் பரவிய பின்பு, குட்டு உடைந்து விட்டது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனை, உலகம் எள்ளி நகையாடும்படி செய்ததுதான் மோடி அரசின் சாதனை!
இந்தியாவின் அறிவியல் தொழிநுட்ப வளரச்சிக்காக அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டு விடுதலைக்குப் பின்பு நிறுவப்பட்டன. அவற்றை வளர்த்தெடுத்துப் பரவலாக்குவதற்குப் பதிலாக அந்த நிறுவனங்களை ‘உயர் ஜாதியினர்’ கைகளுக்குள் அடைத்துவிட்டு, உயர்கல்வியை தனியார் கையில் ஒப்படைத்த மோடி அரசின் சாதனை இது!
இந்த கல்கோட்டியாஸ் பல்கலைக் கழகம், உத்தரப்பிரதேசம், கிரேட்டர் நொய்டா பகுதியில் இயங்குகிறது. பொறியியல் வணிகம், சட்டம் ஆகியவற்றை உயர்திறனோடு கற்பிப்பதாகவும் இங்கு படித்தால் உயர் ஊதியத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பது உறுதி என்றும் அது விளம்பரம் செய்து கொள்கிறது. லட்சக் கணக்கான ரூபாய்களை கட்டணமாகப் பெறுகிறது.
2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியான போது, அந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று அந்த அறிக்கை “தேச விரோதமானது, தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல், (முஸ்லிம்களை) தாஜா செய்யும் அரசியல்” என்றெல்லாம் முழக்கம் எழுப்பினர்.
இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் முழக்கங்கள் என்பதை இந்தியாவில் குழந்தைகளும் அறியும். இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல; உண்ைமயான அறிவியல் வளர்ச்சிக்கான உழைப்பின்றி, போலிப் பெருமைகளையும், உண்மைக்குப் புறம்பான கதைகளையும் சமூகத்தில் பரப்பும் ஒரு போக்கின் வெளிப்பாடே ஆகும்.
அறிவியல் என்பது சந்தேகம் கேட்பதும், சோதித்து நிரூபிப்பதும், தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும்.
ஆனால், இந்தியாவில் நடைபெறுவது அதற்கு நேர்மாறாக உள்ளது. “நாம் உலகத்திலேயே முன்னேறிவிட்டோம்” என்ற முழக்கங்கள். எந்தத் தரவுகளும் இல்லாமல் அரசியல் பிரச்சாரமாக ஒலிக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல், கலாச்சார நிறுவனங்கள் அறிவியல் சிந்தனைக்கு மாறான மூடநம்பிக்கைகளையும், புராணக் கதைகளையும் ‘‘பண்டைய அறிவியல்” எனப் போற்றும் மனப்பாங்கை ஊக்குவித்து வருகின்றன.
விமானங்கள், பிளாஸ்டிக் சர்ஜசி, அணுஆயுதங்கள் போன்றவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்தாக பேசப்படுவது, அதுவும் ஒரு பிரதமரே அதை முன்னெடுத்துச் செல்வது, இளைஞர்களின் அறிவியல் மனப்பான்மை மழுங்கடித்து வருகின்றன.
உண்மையான அறிவியல் ஆய்வுகளிலும், அரசின் பொறுப்பில் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களிலும் முதலீடுகளைச் செய்யாமல், வெறும் தேசிய பெருமைப் பேச்சுகள் மூலம் முன்னேற்றம் அடைந்ததாக காட்ட முயல்வது, நாட்டில் எதிர்காலத்தையே பாதிக்கும்.
குறைந்த வளங்களிலும் உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல விஞ்ஞானிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்களின் சாதனைகளை அரசியம் தேவைகளுக்காக திரித்துப் பயன்படுத்தாமல், நேர்மையாகக் கொண்டாட வேண்டும். அவர்களுக்குரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
பொய்யான பெருமைகளால் அல்ல; உண்மை யான அறிவியல் முன்னேற்றத்தால்தான் ஒரு நாடு வளர்ச்சி அடையும்.
பாசாங்கையும், புரட்டையும் கேள்வி கேட்கும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் பொறுப்பு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அதுவே இந்தி யாவை உண்மையான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்.
நன்றி: ‘ஜனசக்தி’ தலையங்கம், பிப்.22 – பிப்.28
