தஞ்சை மகளிர் மற்றும் பாசறை மாநாட்டின் பயன் எது தெரியுமா?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடந்த 21.2.2026 சனியன்று தஞ்சாவூரில் முற்பகலில் நடைபெற்ற மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திராவிடர் கழகத்திற்கே உரித்தான  முத்திரை பதித்தவையாகும்.

1928 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாடு, 1929 செங்கற்பட்டு முதல் மாகாண மாநாடு தொடங்கி நமது இயக்கம் நடத்திய மாநாடுகளின் தனிச் சிறப்பும், தனிக் குணமும் தீர்மானங்களே! பெரும் வரவேற்பையும்  – சர்ச்சைகளையும் கிளப்பியவை அவை!

சர்ச்சை என்று சொல்லுவது – வேறு ஒன்றுமில்லை! நெடுங்காலமாக இருந்து வந்த மூடத்தனங்கள், பார்ப்பன  ஆதிபத்தியங்களை எதிர்க்கக் கூடிய முற்போக்குத் தன்மை கொண்ட – புரட்சிப் பாதையில் அடி எடுத்து வைப்பவை அவை. ஆதலால் சர்ச்சைகள் கிளம்பியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பார்ப்பனர்கள் மட்டுமல்ல; பார்ப்பனியத்திற்கு அடிமையான பார்ப்பனரல்லாத மக்களும் அந்த சர்ச்சைப் பட்டியலில் அடங்குவார்கள்.

அவற்றை எல்லாம் சந்தித்து, கடந்து அந்தத் தீர்மானங்கள் மக்கள் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தியதோடு அல்லாமல், அரசு சட்டங்களாகி, பார்ப்பனரல்லாத மக்கள் அவற்றின் முழுப் பயனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாகப் பெண்கள் பற்றிய தீர்மானங்கள் காலத்தைக் கடந்து வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவை.

இப்பொழுது அடுத்த கட்டம்! பெண்கள் சந்திக்க வேண்டிய சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் வாழ்கிறோம்.

பெண்கள் கல்வி கற்று, அரசுத் துறைகளிலும், தனியார்த் துறைகளிலும் பணிபுரிந்து பொருளாதாரத்திலும் வளர்ந்து வந்தாலும், ஆண் ஆதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதாக இவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றார்கள் இல்லை.

பணியாற்றும் இடங்களிலும் பாலியல் தொல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டால் ஆணவக் கொலைகள் என்பவை எல்லாம் இந்த 2026லும் நடப்பது வெட்கக் கேடானது!

‘‘பதிவுத் திருமணம் செய்து கொள்ளவரும் மணமக்கள் பெற்றோர்களின் சம்மதத்தோடு வர வேண்டும்’’ என்று பிஜேபி ஆளும் குஜராத்தில் நிபந்தனை விதிப்பது எந்த வகையில் சரி?

சட்டப் பேரவை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு வழங்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட 106ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தம் எந்தக் கால நிர்ணய வரையறையும் நிர்ணயிக்கப்படாததால், இன்னமும் செயல்பாட்டுக்கு வராதது குறித்தும், நடைபெற்ற தஞ்சை மாநாட்டுத் தீர்மானம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெண்களுக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், ஏன் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; தொகுதி மறுவரையறை கணக்கெடுப்பான அடிப்படையில், தொகுதிகள் மறுசீரமைப்பு அமைக்கப்பட்ட பிறகே, இந்த ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வரும் என்பது எல்லாம் ஒன்றிய பிஜேபி அரசின் அசல் சாக்குப் போக்கேயாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதன் அதிகாரத்துக்கு உட்பட்ட தன்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைக்கும் வந்து விட்டது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய முற்போக்குச் சட்டங்களும், திட்டங்களும் முன்னேராக இருப்பதற்குக் காரணமே – தந்தை பெரியாரும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கத் தத்துவமும், திராவிட இயக்க செயல்பாடுகளும் – திராவிடர் கழகத்தின் தொடர் பணிகளுமேயாகும்.

இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், பெண்கள் வளர்ச்சிக்கான அலை அலையான சட்டங்களும், திட்டங்களும் அசாதாரணமானவை.

கல்வி வளர்ச்சியிலும் பொருளாதார பலத்திலும் பெண்கள் முன்னேறினால்தான் ஒரு நாடு வளர்ச்சி அடைந்ததாகப் பொருள்படும்.

‘பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு’ என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்துகொண்டே வருகின்றது. (‘குடிஅரசு’ 16.6.1935).

இது எவ்வளவு ஆழமான கருத்து! அதே நேரத்திலும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய அதே ஆண்டில் (1925)தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தோன்றியது. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் என்ன சொல்லுகிறார்?

‘‘பெண் தன் கணவனைவிட அதிகம் படித்து, அதிக சம்பளம் வாங்குவதால் கணவன் சொல்லுக்குக் கட்டுப்படுவதில்லை. அத்தகைய பெண்களை விவாகரத்து செய்ய வேண்டும்’’ என்று பேசினாரே!

(ஆதாரம்: அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் 16.2.2020 அன்று பேசியது)

தந்தை பெரியாரின் தத்துவமும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகளும் அடித்தளம் அமைத்துக் கொடுக்க, அதன்மீது கட்டப்பட்டுள்ள ‘திராவிட மாடல்’ அரசால் ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை.

அதனால்தான் நடைபெறும் தேர்தல்கூட ஒரு சித்தாந்தப் போராட்டம் என்று திராவிடர் கழகமும், திராவிட மாடல் அரசும் வெளிப்படையாகக் கூறுகின்றன.

இந்திய அளவில் திராவிடர் கழகத்தில் மகளிர் அணி, மகளிர்ப் பாசறை என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, விழிப்புணர்வை உண்டாக்குவது போல வேறு எந்த அமைப்பும் கிடையாது.

தஞ்சையில் நடைபெற்ற (21.2.2026) திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டுத் தீர்மானங்களே இதற்கு எடுத்துக்காட்டு!

இந்த இரு அணியினரும் கல்விக் கூடங்களில், கல்லூரிகளில், பல்லைக் கழகங்களில் மாணவிகள் மத்தியில் தந்தை பெரியாரின்  கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும்; மாநாட்டில் வெளியிடப்பட்ட ‘பெண்கள் முன் னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்ததென்ன?’ என்ற நூலை கொண்டு சொல்வீர்! அதுதான் மாநாட்டின் பயனாக அமையும்!

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *