ஆரியத்தின் வஞ்சகத்தை, சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் பின்புலமாக ‘பெரியார்’ என்ற தத்துவம் இருக்கிறது! தமிழ்நாட்டைக் காக்க எந்தக் களப் பலிக்கும் சித்தமாக இருப்போம்!

13 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில்
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., முழக்கம்!

தஞ்சை, பிப். 25 ஆரியத்தின் வஞ்சகத்தை, சூழ்ச்சியை முறியடிப்பதற்குப் பின்புலமாக பெரியார் என்ற தத்துவம் இருக்கிறது! தமிழ்நாட்டைக் காக்க எந்தக் களப் பலிக்கும் சித்தமாக இருப்போம்! என்றார்  தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. அவர்கள்.

தஞ்சை: திராவிட மாணவர் கழக –
இளைஞரணி மாநில மாநாடு

21.2.2026 அன்று மாலை தஞ்சையில் உள்ள திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

தஞ்சைத் தரணியில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகத்தினுடைய மாநில மாநாட்டிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தில் எத்த னையோ நிகழ்ச்சிகளுக்கு என்னை ஆசிரியர் அழைத்திருக்கின்றார். அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திராவிடர் கழகத்தினுடைய தாய்க்கழகத்தினுடைய தோழர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்.

ஆனால், அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி, ஒரு புல்லரிப்பு இந்த மேடையில் ஏற்படுவதற்குக் காரணம், இந்த அணியில்தான், நான் மாணவனாக இருந்தபோது இருந்தேன் என்கின்ற அந்த உணர்வைப் பெறுகின்றேன்.

நான், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முசிறியினுடைய தமிழ்ப் பேரவையின் செயலாளராக இருந்தபோதுதான், ‘‘அண்ணா நினைவு நாள் சொற்பொழிவு’’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தச் சொற்பொழிவிற்கு, ஆசிரியரை அழைத்துப் போய், அங்கே அவர் ஒரு மணிநேரம் ஆற்றிய உரை இன்னமும் என் நெஞ்சத்தில் நிறைந்தி ருக்கிறது.

எனவே, வெவ்வேறு மேடைகளில் பேசியி ருந்தாலும்கூட, இதே திராவிடர் கழக மாநாட்டிலே பேசியிருந்தாலும்கூட, நான் எந்த மாணவரணியில் பணியாற்றினேனோ, அந்த மாணவர் கழக மாநில மாநாட்டில் பங்கேற்று, பணியாற்றுவது, சிறப்புக்கெல்லாம் சிறப்பு என்கின்ற விதத்தில், என்னை நானே பெருமிதத்தோடு பார்த்துக் கொள்கின்றேன். இந்த வாய்ப்பினை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அருமைத் தம்பி முரசொலி அவர்களும், சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் துரை.சந்திரசேகரன் அவர்களும் ஆசிரியரைப்பற்றி நிறைவாக நிறைய பேசினார்கள். நான் ஆசிரியரைப் புகழ்வது என்பது, பிள்ளை, தாயைப் புகழ்வதைப்போல! ஆனால், ஒன்றைச் சொல்லி முடிக்கவேண்டும்.

‘வந்தே மாதரம்’ தொடர்பான உரை

அவர் யார் என்பதற்கு ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் மீதான விவாதத்தைக் கொண்டு வந்தார்கள். எப்போதும் சங்கிகள் அரைகுறைகள்.

‘வந்தே மாதரம்’ பாடலுக்குப் பின்னால் இருந்த வரலாறு தெரியாமல், அது சார்ந்திருக்கின்ற மத வெறியை மட்டுமே ஊட்டவேண்டும் என்பதற்காகத் தீர்மானத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால், அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பாடலை எழுதியவர் யார்? எழுதியவருக்கு என்ன பின்புலம்? அப்படிப் பாடல் எழுதும்போது மகிழ்ந்தவர்கள் எல்லாம் யார்?அதற்குப் பிறகு எதிர்ப்பு எங்கிருந்து வந்தது? அந்த எதிர்ப்புக்கு காரணம் என்ன?

நான் இன்னுங்கூட அந்தப் பாடலைப் பாடுவதில் என்ன பிரச்சினை என்று இங்கே வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம் உண்டு.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக, வெள்ளைக்கா ரர்களுக்கு எதிராக, ‘சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை’ என்று அப்போது சொன்னார்களே, அப்போது இளைஞர்கள் திரண்டு, ஆயுதம் ஏந்தலாம் என்று முடிவெடுத்து, ஆயுதம் ஏந்தியபோது, 10 இஸ்லாமிய இளைஞர்கள், ‘‘எங்களையும் இந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்‘‘ என்று சொன்னார்கள்.

‘‘உங்களைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம்; ஏனென்றால், நாங்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடு கிறவர்கள். அந்தப் பாடலில், உங்களுக்கு இடமில்லை. எனவே, இந்தத் தேச விடுதலைக்கும் – உங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தத் தேசத்திற்கும், உங்களுக்கும் சம்மந்தமில்லை’’ என்று 1905 ஆம் ஆண்டு சொன்னார்கள்.

இந்தத் தேசம் பிளவுபட்டதற்கு  யார், யாரோ காரணம்! ஆனால், எல்லாவற்றிற்கும் மூலம், வந்தே மாதரம் பாடல்தான் காரணம்.

எனவே, அந்தப் பாடல் மீது நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருகின்றபோது, அதிலே உரையாற்றவேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய நாயகர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘‘இராசா பேசட்டும்’’ என்று சொன்னபோது, நான் பல புத்தகங்களைத் தேடினேன். அப்படி தேடிய பிறகு, ஆசிரியரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பேசினேன். ஆசிரியர் சில புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார். கிடைக்காத புத்தகங்களை எல்லாம் கொடுத்தனுப்பினார்.

நான், 5, 6 ஆவதாகப் பேசவேண்டும். எனக்கு முன் பேசவேண்டியவர்கள் பி.ஜே.பி., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவ் இவ்வளவு பேரும் பேசிய பிறகுதான், நான் பேசவேண்டும். அவர்கள் எல்லோரும் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிடுவார்களோ என்று நான் நினைத்தேன். ஆனால், அவர்கள் கொஞ்சம், கொஞ்சம்தான் தொட்டார்கள். அப்போதுதான் நான் திருப்தியடைந்தேன், நம்மிடம் பேசுவதற்கு நிறைய சரக்கு இருக்கிறது என்று.

தேசிய கீதமா? தேசியப் பாடலா?

பேசினேன், இந்தப் பாடல்தான் இந்தத் தேசம் பிளவுபட்டதற்குக் காரணம். ஒரு நாட்டிற்கு, தேசிய கீதம் என்று இருக்கும்போது, தேசியப் பாடல் என்பது ஒன்று ஏன் வேண்டும்?

தேசிய கீதம் என்று ஒரு பாடல்; தேசியப் பாடல் என்று ஒரு பாடல். National Song & National Anthem. Anthem என்றால் என்ன? Song என்றால் என்ன? வித்தியாசம் தெரியவில்லை.

தேசிய கீதம், நாடாளுமன்ற அமைச்சரவையில் வைக்கப்பட்டு, இதுதான் இந்தியாவின் தேசிய கீதம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், வந்தே மாதரம் பாடல் வைக்கப்படவில்லை. ஆனால், அது தேசியப் பாடல். அதற்கு என்ன காரணம்? அரசு ஆணை ஒன்று கூட இல்லை. ஒரு சுற்றறிக்கை!

இதற்குப் பின்னால் இருக்கின்ற எல்லா சங்கதி களையும் தோண்டித் தோண்டி எடுத்தால், அது எங்கெங்கெல்லாம் போகிறது என்றால், ஆர்.எஸ்.எஸ்.சுக்குப் போகிறது, ஹிந்து மத வெறியர்களுக்குப் போகிறது. இந்தத் தேசத்தை ஹிந்து தேசமாக என்றைக்காவது அறிவிக்கவேண்டும் என்றால், இந்தப் பாடல்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியவர்களின் கனவு அதில் இருக்கிறது.

ஆசிரியர் என்ற புத்தகம்!

அந்தக் கனவுகளையெல்லாம் எப்படி முறியடித்தார்கள் காந்தியும், நேருவும், அம்பேத்கரும் அன்றைக்கு இருந்த மதச்சார்பற்ற தலைவர்கள் எல்லாம்! அந்தப் புத்தகங்கள் நமக்குக் காட்டின. அந்தப் புத்தகங்கள் எது என்று கேட்டார்கள். அவர்கள் நினைத்துக் கொண்டார்கள், ஒரே ஒரு புத்தகம் இருக்கிறது போலிருக்கிறது – இராசா அந்தப் புத்தகத்தைத் தேடிப் படித்துவிட்டார் என்று!

நான் சொன்னேன், ‘‘ஆசிரியர் வீரமணி என்ற புத்தகம் தமிழ்நாட்டில் இருக்கிறது; அந்த ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டால் போதும், நீங்கள் வீசுகின்ற எந்த ஆயுதங்களையும் எங்களால் தடுப்பது மட்டுமல்ல! அதே ஆயுதத்தால், உங்களை வீழ்த்த முடியும்!’’ என்று சொன்னேன்.

எனவே, அப்படிப்பட்ட ஆசிரியர், இந்த வயதில், இந்த இயக்கத்தை இவ்வளவு கட்டமைப்போடு நடத்திக் கொண்டிருக்கின்றார்.

கலைஞர் சொல்வார், ‘‘ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, என்னை விஷம் தீண்டி விட்டால், (விஷம் என்றால், பாம்பு விஷமல்ல; பாம்பு மாதிரி இருக்கின்ற மனிதர்கள் தீண்டி விட்டால்) அந்த விஷத்தை முறிப்பதற்காக நான் போகின்ற இடம், திராவிடர் கழகம். கீரிக்கும் – பாம்புக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பினால் ஏற்படும் காயத்திற்கு மருந்தாக கீரி உருளும் மூலிகையைப் போன்று, திராவிடர் கழகத்தில் இருக்கும் மூலிகையைத் தேடிச் செல்வேன்’’ என்று சொல்வார்.

அது எவ்வளவு பெரிய உண்மை!

இன்னமும் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு மூலி கையாக  ஆசிரியரும், திராவிடர் கழகம்தான் திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இப்போது திடீரென்று சிலர் கிளம்பிவிட்டார்கள். நம்முடைய கவனத்தையெல்லாம் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பெரியாரை நேரடியாக அடிப்பது!

‘‘பெரியார்தான் கிழித்தாரா? பெரியார்தான் மண்’’ என்று.

பெரியாரைச் சுருக்கிவிட முடியாது!

இதற்கு என்ன காரணம் என்றால், நம்முடைய சக்தியையெல்லாம் அதற்காகச் செலவிடுவோம் என்கிற சூழ்ச்சியோடு அதைச் செய்கிறார்கள்.

பெரியாரை யாரும் இழிவுபடுத்த முடியாது. பெரியாரை யாரும் சுருக்கிவிட முடியாது.

15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியரை வைத்துக் கொண்டு சொன்னேன், ‘‘இந்த மண்ணில், ஹிந்துத்து வாவாதிகளோ, ஹிந்து மதமோ அல்லது பார்ப்பனர்களோ பொட்டலம் கட்ட முடியாத ஒரு நெருப்பு இருக்கிறது என்றால், அது பெரியார்தான்!’’ என்று.

அம்பேத்கரையேகூட அவர்கள் பொட்டலம் கட்ட முயற்சிக்கிறார்கள். என்ன காரணம் என்றால், அவர் பவுத்தத்திற்குப் போனார் என்று. பவுத்தம், ஹிந்து மதத்தின் ஒரு பகுதி என்று நிறுவிவிட்டார்கள். அதை சட்டத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள்.

யாரெல்லாம் ஹிந்து என்று சொன்னால், யார் யாரெல்லாம் இஸ்லாமியர்கள் இல்லையோ, யார் யாரெல்லாம் கிறித்தவர்கள் இல்லையோ, யார் யாரெல்லாம் அவர்கள் இல்லையோ, இவர்கள் இல்லையோ, அவர்கள் எல்லாம் ஹிந்து. ஆனால், பவுத்தமும், ஜைனமும் இன்னமும் ஹிந்து மதத்தில் வைத்திருக்கிறார்கள்.

‘பெரியார்’ எனும் பெருநெருப்பு!

எனவே, அப்படிப்பட்ட ஒரு பெரு நெருப்பு, இந்த மண்ணிலே தத்துவமாக இருந்து, அந்தத் தத்துவம் இன்றைக்கு நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்களுக்கு என்ன பிரச்சினை?

பழைய வரலாறு அவர்களுக்குத் தெரியவில்லை. அதை அவர்கள் படிக்கவில்லை.

ஜாதியா? இப்போது என்ன ஜாதி? இப்போது என்ன தமிழ் மொழிக்கு ஆபத்து? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இன்றைக்கு வடிவங்கள் மாறியிருக்கின்றன. கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் – இங்கே நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு தீர்மானத்தைப் படித்தார். எந்தெந்தத் துறைகளில் நாம் முன்னேறியிருக்கின்றோம் என்று சொன்னார்.

அந்த முன்னேற்றத்திற்கெல்லாம் இந்த மண்ணில், ஆன்மிகமோ, கடவுளோ காரணம் அல்ல! பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், திராவிட இயக்கமும், அவர்களுக்கு முன்னோடிகளாக இருந்த தத்துவங்கள்தான் காரணம்.

அந்தத் தத்துவங்களை நீங்கள் படிக்காவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால், அந்தத் தத்துவம் இன்றைக்கு எப்படி உருமாறியிருக்கிறது?

தொகுதி சீரமைப்பு என்ற ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்களே, அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறது தெரியுமா?

தொகுதி மறுசீரமைப்பு என்ற வஞ்சகம்!

புதிய நாடாளுமன்றத்தைக் கட்டினார்கள். 542 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். 545 இருக்கைகள்கூட போடுங்கள். ஆனால், 850 இருக்கைகளைப் போட்டி ருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம்?

தொகுதி மறுவரை என்பதை மக்கள் தொகை அடிப்படையில், நாங்கள் அதிகப்படுத்துவோம். தமிழ்நாட்டிற்கும் அதிக இடங்கள் கிடைக்கும். இது எவ்வளவு வஞ்சகமான வார்த்தை.

தமிழ்நாட்டிற்கு 4, 5 இடங்கள் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், உத்தரப்பிரதேசத்திற்கு 80 இடங்கள் அதிகமாகக் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலேயேயும் கணக்குப் போட்டால், அவர்கள் எங்கே வந்து நிற்கிறார்கள் தெரியுமா?

மறைமுகமாகப் பெரியாரிடத்திலும், திராவிடத்திலும் வந்து நிற்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம்?

இந்த மண்ணில், இரண்டு தத்துவங்கள், இரண்டு பண்பாடு. இரண்டு பண்பாடுகளும் புவிசார்ந்த பண்பாடுகள். ஒன்று, ஆரியம் சமஸ்கிருதத்தை அடிப்ப டையாகக் கொண்டது. ஒப்புக்கொள்கிறோம், இல்லை என்று சொல்லவில்லை.

திராவிடம் வேறு; ஆரியம் வேறு!

ஆரியக் கலாச்சாரம் அங்கே இருந்தது. திராவி டத் தத்துவம் என்ற ஒன்று இருந்தது. அந்தத் தத்து வத்தினுடைய தலைமை மொழியாகத் தமிழ் இருந்தது. அதற்குப் பிறகு, ‘‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தவை’’ என்று திராவிடமாக இருக்கிறது.

திராவிடம் சொன்ன இலக்கியம் வேறு; திராவிடம் சொன்ன வாழ்வியல் கூறு வேறு. திராவிடம் சொன்ன நீதி போதனைகள் வேறு.

நீங்கள் (ஆரியர்கள்) சொன்ன வாழ்வியல் கூறு, நீதி போதனைகள் வேறு.

வேறு, வேறு என்பது மட்டுமல்ல, எதிரானவை என்பதை நிறுவிய இயக்கம்தான் இந்த இயக்கம்.

அதனால்தான், “I belong to the Dravidian stock” என்று அன்றைக்கு அண்ணா சொன்னார்.

அண்ணா அன்றைக்குச் சொன்னார், ‘‘I belong to the Dravidian stock’’. திராவிட நாடு பிரிவினை கேட்டார் பெரியார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சொன்னார் பெரியார்.

இன்றைக்கு அந்த முழக்கம் மாநில சுயாட்சியாக மாறியிருக்கிறது. வடிவங்கள் மாறியிருக்கின்றன.

பிரிவினை செய்வோர் யார்?

ஆனால், இப்போது என்ன சொல்கிறார்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் நாடாளு மன்றத்தில்கூட பிரிவினையைப் பேசுகிறார்கள். என்னு டைய உதகைத் தொகுதிக்கு வந்து நட்டா சொல்கிறார், ‘‘நாங்கள் எவ்வளவோ செய்து பார்க்கிறோம்; தமிழ்நாடு தனியாகவே இருக்கிறது’’ என்று.

இதுவரை, தமிழ்நாட்டை நாங்கள் பிரிப்பதாகச் சொன்னார்கள். இப்போது அவர்கள் சொல்கிறார்கள், ‘‘தமிழ்நாடு தனியாக இருக்கிறது’’ என்று.

அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு விசித்தி ரத்தைச் சொல்கிறேன், பெரியாருடைய வெற்றிக்குக் காரணம்.

இந்தத் தத்துவம், இந்தத் திராவிடம் எங்களை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது தெரியுமா?

ஒரு காலத்தில், தமிழ்நாடு கேட்டால், தவறு என்று சொன்னார்கள். நாங்கள் அதை விட்டுவிட்டோம். ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேறுகின்றன. என்ன சட்டம்?

நீட்டிற்கு ஒரு சட்டம்.

நாடாளுமன்றம் என்றால் என்ன? இந்தியாவில் இருக்கின்ற 140 கோடி மக்களுடைய உணர்வை, நாடாளுமன்றத்தில் பிரதிபலித்து, அந்தப் பிரதி பலிப்புதான் சட்டமாக மாறுகிறது.

சரி, சட்டம் கொண்டு வந்துவிட்டீர்கள்.

EWS பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று சொல்லி, 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.

நாடாளுமன்றம், சட்டம் இயற்றியது. அரசிய லமைப்புச் சட்டத்தைத் திருத்தினார்கள். ஆனால், நீங்கள் கொண்டுவந்த சட்டத்தைத் தமிழ்நாடும், தமிழ்நாடு சட்டமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லையே! நாங்கள் பிரிந்து கிடக்கிறோமா, நீங்கள் பிரித்து வைத்திருக்கிறீர்களா?

எந்தச் சூழ்ச்சியையும்
புரிந்துகொள்வது எப்படி?

தொகுதி சீரமைப்பைக் கொண்டு வந்தீர்கள், எந்த மாநிலமும் விழித்துக் கொள்ளவில்லை. நாங்கள் விழித்துக் கொண்டோம். ஏன்? எங்களுடைய உரிமை பறிபோகும்.

தென்னகம் இல்லாமலேயே, இந்தியாவில் எந்த சட்டத்தையும் நிறைவேற்றக் கூடிய அளவிற்கு, நாடாளுமன்றத்திலே மிகப்பெரிய வலிமையை, மிருகத் தன்மையைப் பெற்றுவிடுவீர்கள்.

இப்போதே எங்களை இரண்டாந்தரக் குடிமக்க ளாக நடத்துகிறீர்களே, அப்படி ஒரு வடிவம் நாடாளு மன்றத்திற்கு வந்துவிட்டால், நாங்கள் என்ன செய்வது? என்பதைச் சிந்தித்த ஓர் இயக்கம், ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவனும், இந்தத் திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும்! அதனால்தான் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

எதை செய்தாலும் புரிந்துகொள்கிறார்கள், தெரிந்து கொள்கிறார்கள். வஞ்சகத்தை சூழ்ச்சியை முறிய டிக்கிறார்கள். இது தனி மனித சாத்தியமா? ஸ்டாலின் என்கின்ற ஒரு மனிதன் செய்கிறாரா? என்று கூர்ந்து பார்க்கிறார்கள்.

அப்படித் தெரியவில்லை!

ஒருவேளை அவருக்குப் பின்னால், ஆசிரியர் வீரமணி என்கின்ற ஒரு சக்தி இருக்கிறதே, அந்தக் காரணமா?

அப்படியும் தெரியவில்லையே!

பிறகுதான் தெரிகிறது.

பெரியார் என்னும் தத்துவம்!

இந்தத் 93 ம், 73 ம், வெறும் மனிதர்கள் அல்ல. அவர்களுக்குப் பின்னால், பெரியார் என்ற ஒரு தத்துவம் இருக்கின்ற காரணத்தினால், நம்மால் வீழ்த்த முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

எனவே, அப்படிப்பட்ட தத்துவத்தைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துச் செல்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், வற்றாத ஜீவ ஊற்றாக தாய்க்கழகம் இன்னமும் எங்களை இயக்கிக் கொண்டிருப்பதால்தான் என்பதை, நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

எனவேதான், இங்கே வந்திருக்கின்ற இளை ஞர்களுக்குச் சொல்கிறேன். அன்றைக்கு நடந்த போராட்டங்கள் வேறு.

‘தோள் சீலைப் போராட்டம்’ என்று சொன்னால், ‘இப்போது எங்கே இருக்கிறது?’ என்று கேட்பீர்கள்.

‘தெருவிலே நடக்கவிட்டார்களா?’ என்று கேட்டால், ‘ஆமாம், அதெல்லாம் முடிந்து போன கதை’ என்று சொல்வார்கள்.

‘பெண்களுக்குச் சொத்திலே பங்கு இருந்ததா?’ என்று கேட்டால், ‘அதுதான் வந்துவிட்டதே’ என்று சொல்வார்கள்.

ஆனால், அப்போதிருந்த அடக்குமுறையினுடைய வடிவங்கள், இப்போது வேறு வேறு முறையில். மிக அமர்க்களாக, வேறு விதத்திலே தெரியாமல் இருக்கின்றன. நியாயப்படுத்துகின்ற வித்திலே, இதி லென்ன தவறு என்று சொல்லும் விதத்திலே வந்து கொண்டிருக்கின்றது.

இரண்டு தலைவர்கள்

அந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் வீழ்த்துவதற்குப் பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார். பெரியார் என்றைக்கும் தேவைப்படுவார்.

அந்தத் தேவையைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற இரண்டு தலைவர்கள் வாழுகின்ற காலத்தில், நாங்கள் வாழுகிறோம் என்பது எங்களுக்குப் பெருமை!

93 ம், 73 ம்  இருக்கின்ற வரையில், நான் பெரம்பலூர் கூட்டத்திலேயே சொன்னேன், ‘‘எல்லோரும் ஊர்ப் பெருமையாகச் சொன்னார்கள், நான் ஒன்று படித்தேன், 1929 ஆம் ஆண்டு முதன்முதலில், ‘‘தமிழர்களே, சூத்திரர்களே இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’’ என்று சொன்னது எங்கள் ஊரான பெரம்பலூரில்தான். பிறகுதான், அது பெரிதாக ஆயிற்று.

பெரியார், உலகம் முழுவதும் தேவை!

எல்லா ஊர்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார். தஞ்சாவூருக்கு மட்டும் கட்டம் கட்ட முடியாது.

இதை பழனிமாணிக்கம் அண்ணன் காலத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

நாங்கள் யார் தெரியுமா? நாங்கள் யார் தெரியுமா? என்று சொல்வார்கள், கனிமொழி அவர்களும் சேர்ந்து கொள்வார் நாடாளுமன்றத்தில்!

பெரியார் உலகம் மயம் என்று சொன்னவர் ஆசிரியர். தஞ்சாவூரில் முடக்கக்கூடாது.

எனவே, பெரியார் இன்றைக்கு உலகம் முழுவதும் தேவைப்படுகிறார்.

எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ, எந்த வடிவத்தில் அடக்குமுறை இருக்கிறதோ, அந்த வடிவத்திற்கெல்லாம் பெரியார் தேவைப்படுகிறார்.

பெரியார் தேவைப்படுகின்ற வரை, ஆசிரியரும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதர்களும் போற்றப்படுவார்கள், வணங்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள். அதற்காக நாம் எல்லா சிரமங்களையும் ஏற்றுக்கொள்வோம்.

எந்தக் களப் பலிக்கும் சித்தமாக இருப்போம் என்று சொல்லி, உங்கள் அனைவரையும் வணங்கி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி. உரையாற்றினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *