“உலகத் தமிழர் திருநாள் விழா” 17.02.2026 அன்று, சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. இப்பெரு விழாவை முனைவர் மா.கோவிந்தராசு, தம் குழுவினருடன் ஏற்பாடு செய்திருந்தார்.
1950 ஆம் ஆண்டு முதலே கோ.சாரங்கபாணி அவர்களிடத்தில் உதவியாளராகப் பணியாற்றிய தியாகராசன் “தமிழவேள் பணித் தொண்டர்” விருது பெற்றார். பல ஆண்டுகளாய் தமிழர் திருநாள் எனும் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்திய மறைந்த என்.ஆர்.கோவிந்தனுக்கு வழங்கப்பட்ட “தமிழர் திருநாள் சுடர்” விருதை சித்ரா பெற்றுக் கொண்டார்.
தமிழ்ப் பேழை எனும் தளத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய தமிழ் அகராதியை உருவாக்கியவரும், தமிழ் விக்கி மூலம் தமிழ் வளங்களை 58 ஆம் இடத்திலிருந்து, 8 ஆம் இடத்திற்கு மாற்றியவரும், 35 இலட்சம் மடிக்கணிப் பொறிகளில் தமிழ் விசைப் பலகையைச் சேர்த்தவருமான பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி “சொற்களஞ்சியச் செம்மல்” விருதைப் பெற்றார்.
அதேபோன்று இலங்கையில் பிறந்த கங்கைமகன் என்பவர், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். அங்கு தமிழ்ப் பள்ளியைத் தொடங்கியதோடு அமெரிக்கா, கனடா, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். மேடைப் பேச்சு, கவிதை, பட்டிமன்றம், எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்ட அவர் “வாழ்நாள் தமிழ் இலக்கியச் செம்மல்” விருதைப் பெற்றார்.
இந்தோனேசிய தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், திருக்குறளைப் பல மொழிகளில், குறிப்பாக இந்தோனேசிய மொழியில் மொழிபெயர்த்தவருமான முனைவர் வாசிகன் மயிலாச்சாலம் “வாழ்நாள் தமிழ் இலக்கியச் செம்மல்” விருதைப் பெற்றார்.
அதேபோன்று திராவிடர் இயக்கச் சிந்தனையாளரும், “திராவிட வாசிப்பு” என்கிற இணைய இதழைச் சிங்கப்பூரில் இருந்து நடத்தி வருபவரும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவருமான ராஜராஜன் ஆர்.ஜெ “தமிழ் எழுத்தாளர்” விருதினைப் பெற்றார்.
பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 27 ஆளுமைகளுக்கும் இதேபோன்ற விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. இவ்விருதுகளைத் தமிழர் கலை பண்பாட்டுச் சமுதாய அமைப்பு வழங்கியது. இந்த அமைப்பின் முன்னோடியாக இருந்தவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆவார். சிங்கப்பூர் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு வகித்தவர் கோ.சாரங்கபாணி. சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழின் நிறுவனர். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதற்கும், தமிழர்கள் நிரந்தரக் குடியுரிமை பெறவும் முக்கியக் காரணமாக இருந்தவர்.
தமிழ்நாட்டின் திருவாரூரில், 1903 ஆம் ஆண்டு பிறந்து, தம் 21ஆம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பல சாதனைகளைப் படைத்தவர். பெரியார் கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்தவர். அவரின் வழியொட்டி தமிழர் கலை பண்பாட்டு சமுதாயத்தின் தலைவர் முனைவர். மா. கோவிந்தராசு, தமிழவேள் சாரங்கபாணியின் உதவியாளராகப் பணியாற்றிய தியாகராஜன் மற்றும் அவர்களின் குழுவினர் இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.
