கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தலைவரின் 90 ஆம் பிறந்தநாளையொட்டி, இத்தகைய நிகழ்வை நடத்த விரும்பியதாகவும், அது தள்ளிப் போனாலும், தான் ஓய்வு பெறுவதற்குள் நடத்திட முனைந்து நிறைவேற்றியுள்ளதையும் பெரும் மகிழ்வுடன் தெரிவித்தார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையின் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன்.
ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை தொடர்ந்து தமிழ்மொழித் துறை நேரடியாகவும், காணொலி வாயி லாகவும் நடத்தி வருவதையும், ஜப்பானுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தபோது, அங்கும் ஆசிரியர் பிறந்தநாளை ஏற்பாடு செய்து நடத்திய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் ய.மணிகண்டன்.
இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று ஒப்புதல் பெறுவதற்காகச் சென்றபோது முதலில் மறுத்து, தந்தை பெரியார் பற்றிய நிகழ்ச்சியை நடத்துமாறு ஆசிரியர் வலியுறுத்தியதையும், பின்னர் கவிஞர் கலி.பூங்குன்றன் போன்றோர் எடுத்துச் சொல்லி வலியுறுத்தியதால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட பேராசிரியர் ய.மணிகண்டன், நிகழ்வின் தலைப்பு மாறிய கதையைச் சுவைபட விளக்கினார்.
ஒரு நாள் தேசியக் கருத்தரங்கிற்குத் தான் முதலில் சூட்டியிருந்த தலைப்பில் “பெரியாரியல் பேரறிஞர்” என்று இருந்ததையும், அதை ஆசிரியரிடம் சென்று காட்டியபோது, தன் பேனாவால், கடைசியில் இருந்த ‘பேரறிஞர்’ என்ற சொல்லை எடுத்து விட்டு, பெரியாரியல் என்ற சொல்லுக்கு முன்னால் ‘என்றும்’ என எழுதி, பேரறிஞர் என்று அடித்த இடத்தில் ‘மாணவர்’ என்றெழுதி, “என்றும் பெரியாரியல் மாணவர்” என்று ஆசிரியர் திருத்தியதையும் சொல்லி, தகைசால் தமிழரின் தகைமையை எடுத்துரைத்தார்.
