செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சென்னை, பிப்.24 – கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு விரைவில் நலமடைந்து அவருடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது என்று செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று (23.2.2026) சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று (24.2.2026) சென்னை பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த கம்யூனிஸ்ட் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களைப் பார்த்து நலம் விசாரித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுடைய உடல்நிலை, இரண்டு நாள்களுக்கு முன்பு சங்கடத்திற்கு உள்ளாகி, மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரைத் தீவிரச் சிகிச்சைப் பிரிவிற்கு ஆட்படுத்தி, மருத்துவர்கள் அத்துணைப் பேரும் தீவிரமான முயற்சி எடுத்த காரணத்தினால், நேற்று அவருடைய உடல்நிலை இருந்ததைவிட, இன்றைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பது ஓர் ஆறுதல் செய்தியாகும்.
ஆகவே, அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அவர் விரைவில் நலமடைந்து, தன்னுடைய இல்லத்திற்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது.
அத்துணை முயற்சிகளுடன், மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள் அத்துணைப் பேரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலான செய்தியாகும்.
செய்தியாளர்: வென்டிலேட்டர் சிகிச்சையில் தான் நல்லகண்ணு இருக்கிறாரா?
தமிழர் தலைவர்: இல்லை. நல்ல அளவிற்கு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நம்பிக்கைத் தரக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது என்பது தெம்பூட்டும் செய்தியாகும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
