சென்னை, பிப்.24– சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வழங்கப்படும் வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகளுக்கு (Question Paper Sets) இடையே கடினத்தன்மையில் பெரும் பாரபட்சம் இருப்பதாக எழுந்துள்ள புகார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினாத்தாள்களில் குளறுபடி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளைத் தவிர்க்க வினாத்தாள்கள் பல தொகுப்புகளாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் தொகுப்புகளுக்கு இடையே சமநிலை இல்லை என்பதே தற்போதைய முக்கியக் குற்றச்சாட்டு.
இயற்பியல் தேர்வு சர்ச்சை
அண்மையில் நடந்த 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில், சில மாணவர்களுக்குக் கிடைத்த வினாத்தாள் மிகவும் எளிமையாகவும், சிலருக்குக் கிடைத்தவை ஜே.இ.இ நுழைவுத்தேர்வு தரத்தில் மிகவும் கடினமாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கையின்படி, 2025 முதல் 50 சதவீத வினாக்கள் செயல்திறன் சார்ந்த அடிப்படையில் கேட்கப்படுகின்றன. ஏற்கனவே இந்த மாற்றத்தால் மாணவர்கள் அழுத்தத்தில் உள்ள நிலையில், இந்த பாரபட்சம் அவர்களை மேலும் பாதித்துள்ளது.
இது குறித்து பிரபல கல்வியாளர் பிரசாந்த் கிராட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: “ஒரு தொகுப்பு எளிமையாகவும், மற்றொரு தொகுப்பு மிகவும் கடினமாகவும் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் அநீதியாகும். சிபிஎஸ்இ வாரியத்தின் இந்த பாரபட்சமான நடைமுறைக்கு விளக்கம் கேட்டு, நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (பிஅய்எல்) தொடரத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ வாரியம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கடினமான வினாத்தாள் தொகுப்புகளை எழுதிய மாணவர்களுக்கு ‘நார்மலைசேஷன்’ (Normalization) முறையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
விடைத்தாள்களைத் திருத்தும் போது மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தாராளமான முறையைக் கையாள வேண்டும்.
ஏற்கனவே 10ஆம் வகுப்புத் தேர்வின் போதும் இத்தகைய புகார்கள் எழுந்த நிலையில், தற்போது 12ஆம் வகுப்புத் தேர்விலும் இது எதிரொலிப்பது சிபிஎஸ்இ வாரியத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளது. இருப்பினும், இது குறித்து வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
சாலையை ஆக்கிரமித்துக் கட்டிய கோயிலை நகராட்சி அகற்றுவதற்கு
ஆயிரம் விளக்கம் கேட்கும் நீதிமன்றம்!
சென்னை, பிப்.24- சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு கோயில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 7 நாள்களில் அதை இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கடந்த ஆண்டு கோயில் நிர்வாகத்துக்கு தாக்கீது பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் தரப்பில் ஜெயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘தங்களது தரப்பில் விளக்கம் அளிக்க எந்தவொரு கால அவகாசமும் அளிக்காமல், கோயில் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு நடத்தாமல், நேரடியாக கோயிலை இடிக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பது சட்ட விரோதமானது’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய் ஆணையரின் பரிந்துரைப்படி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட கோயில் சாலையை ஆக்கிரமித்து உள்ளதாக குறிப்பிட்டு எந்த கள ஆய்வும் நடத்தாமல் நேரடியாக கோயிலை 7 நாள்களுக்குள் இடிக்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருப்பது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க, விளக்கமளிக்க போதிய அவகாசம் வழங்கும் வகையில் விளக்கம் கோரும் தாக்கீது பிறப்பித்து, அதன்பிறகே இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
எனவே, சம்பந்தப்பட்ட கோயில் சாலையோர ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதை மண்டல அளவிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விளக்கமளிக்க வாய்ப்பளித்து, சட்டப்பூர்வமாக தாக்கீது பிறப்பித்து, அதன்பிறகே கோயிலை இடிப்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். எனவே, இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கோயிலை இடிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புக் கோயிலை இடிப்பதற்கு ஆயிரம் கேள்விகளை நீதிமன்றம் எழுப்பிள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்
