ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்.போன்ற உயர் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? மார்ச் 3 இல் ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக
மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
சென்னை, பிப். 24 எனக்கு உடல்வலி ஒரு பொருட்டல்ல; நாட்டினுடைய சமூகத்தினுடைய வலியைப் போக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்! ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? மார்ச் 3 இல் ஆர்ப்பாட்டம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சை: திராவிட மாணவர் கழக –
இளைஞரணி மாநில மாநாடு
21.2.2026 அன்று மாலை தஞ்சையில் உள்ள திலகர் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக – இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நம்மீது வீசப்படும் அவதூறுகள் – நம்முடைய வயலுக்கு அவர்கள் போடுகின்ற உரம்!
இந்த ஆளுநர் போகவேண்டும் என்றா நாம் நினைப்போம். அந்த ஆளுநரால்தான் நமக்கு நாளுக்கு நாள் பலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால், வடக்கே இருந்து வந்தவர்கள் யார் பேசினாலும்கூட, அவதூறுகளை அள்ளி வீசினாலும்கூட, அது நம்முடைய வயலுக்கு அவர்கள் போடுகின்ற சரியான உரமாகும்.
உண்மையான டெல்டாகாரர்கள் இருக்கக்கூடிய இந்த டெல்டா பகுதியிலிருந்து சொல்கிறேன்; மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி வரும். அதற்கான பாராட்டு விழாவை, இதே மன்றத்தில், இதே நகரத்தில் பெரிய அளவில் நடத்துவோம், அதில் அனைவரும் பங்கேற்பார்கள்.
இதை என் ஆசையாக நான் சொல்லவில்லை. இன்றைக்குத் தமிழ்நாட்டினுடைய நிலவரம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள்!
110 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஓர் இயக்கம் இல்லாவிட்டால், நாமெல்லாம் தோளின்மீது துண்டை போட முடியுமா? முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்ட முடியுமா? நம்முடைய தாய்மார்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக வந்திருக்கின்றார்களே, அவர்கள் எல்லாம் இன்றைக்குப் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா?
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டார்கள். ஏதோ, ஊருக்கு நான்கு வயதான வர்கள் இருப்பார்கள். அத்தோடு இந்த இயக்கம் இருக்காது என்று சொன்னார்கள்.
ஆனால், இன்றைக்கு இந்த இயக்கத்தில் வய தானவர்களும் இருக்கிறார்கள், இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்ததற்குக் காரணம் என்ன?
முதல் காரணம், நம்முடைய கொள்கை எதிரிகள்தான்.
நம்முடைய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள்கூட என்னிடம், ‘‘அய்யா நீங்கள் நிறைய சுற்றுப்பயணம் செய்கிறீர்கள். இடைவெளி எடுத்துக்கொண்டு உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இதையேதான் அடிக்கடி அன்போடு சொல்வார்.
எனக்கு உடல்வலி ஒரு பொருட்டல்ல; நாட்டினுடைய சமூகத்தினுடைய வலியைப் போக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்!
நானும் அதுகுறித்து நினைக்கிறேன்; நான் மட்டு மல்ல, என்னுடைய உடலும் அதை சில நேரங்களில் அறிவிக்கிறது. ஆனாலும், எதிரிகளைப் பார்க்கிறேன், எனக்கு உடல்வலி ஒரு பொருட்டல்ல; நாட்டினுடைய சமூகத்தினுடைய வலியைப் போக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.
அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள், மூத்தி ரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, 94 வயதுவரை போராடினார் என்று சொல்லும்போது, அவருடைய தொண்டர்களாக நாங்கள் எப்படிச் சும்மா இருக்க முடியும்?
2026 சட்டமன்றத் தேர்தல்
ஆரிய – திராவிடப் போரே!
எனவேதான், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை, ஒரு போர்க் களமாகக் கருதுகிறோம். ஆரிய – திராவிடர் போர் என்று.
போர்க்களம் என்றால், ரத்தக் களறியல்ல. இந்த இயக்கம் என்றைக்குமே ரத்தம் சிந்திய புரட்சியால் வெற்றியைப் பெற்றதில்லை. ரத்தம் சிந்தாத புரட்சி யால்தான் இந்த இயக்கம் வெற்றியைப் பெற்றிருக்கிறது நூறாண்டு காலமாக.
காலையில், மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் இளைஞர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் என்று எல்லா துறைகளிலும் வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?
110 ஆண்டுகளுக்கு முன்னால், சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம்தான் இந்த இயக்கம். நீதிக்கட்சி – திராவிட இயக்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இருந்தாலும், ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையை நடத்தியதால், அந்தப் பெயர் மக்களிடையே பிரபலமாகி, அதுவே புழக்கத்திற்கு வந்துவிட்டது. எனவே, மக்கள் ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று பெயர் பெற்றது.
தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்ற நூற்றாண்டு கண்டு கொண்டிருக்கக் கூடிய சுயமரியாதை இயக்கம். முழுக்க முழுக்க சமூகப் பணி செய்த இயக்கம்.
ஆரியம் அன்றைக்குக் கொக்கரித்தது!
நீதிக்கட்சி மூன்று தேர்தல்களில் தோற்றவுடன், ‘‘நீதிக்கட்சியை அரசியலிலிருந்து குழிதோண்டி புதைத்துவிட்டோம்’’ என்று ஆரியம் அன்றைக்குக் கொக்கரித்தது.
பிறகு 1967 இல், பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, செய்தியாளர்கள் அவரிடம், “கட்சியைத் தொடங்கிய 10 ஆண்டு காலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டீர்களே, இப்படி ஓர் அரசியல் வரலாறு இதுவரை கிடையாதே!’’ என்று கேட்டார்கள்.
மற்ற தலைவர்களாக இருந்தால், ‘ஆம்’ என்று, நெஞ்சை உயர்த்திச் சொல்லியிருப்பார்கள்.
ஆனால், அவர் அண்ணா – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாவற்றையும்விட அடக்கம். உயரு கின்ற நேரத்தில் எல்லாம், அண்ணாவினுடைய அடக்கத்தைப்பற்றி அவரிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும்.
பெரியாரோடு இருந்த காலமே,
என்னுடைய வசந்த காலம்: அண்ணா
தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலருக்காக, முதலமைச்சர் அண்ணாவிடம் கட்டுரை கேட்கிறோம். அண்ணா எழுதிய அந்தக் கட்டுரைக்கு அவர் என்ன தலைப்புக் கொடுத்தார் தெரியுமா?
‘‘அந்த வசந்தம்’’ என்று தலைப்பிடுகிறார். ‘‘அந்த வசந்தம்’’ என்று எதைச் சொன்னார் என்றால், ’’முதலமைச்சராக இருக்கிறேனே, இந்தக் காலகட்டம் அல்ல; பெரியாரோடு இருந்த காலமே, தன்னுடைய வசந்த காலம்’’ என்று சொன்னார்.
மூன்று புத்தகங்களை இங்கே வெளியிட்டு இருக்கின்றோம். அந்தப் புத்தகங்களை நீங்கள் எல்லாம் வாங்கிப் படிக்கவேண்டும். கொள்கைகளை வீடு வீடாகப் பரப்பவேண்டும். ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ இந்த ஆட்சி, மகளிர் உரிமையைப் போற்றுகின்ற ஆட்சி!
கடந்த சில நாள்களுக்கு முன்பு, காலையில் எழுந்து வங்கிக் கணக்கை கைப்பேசியில் பார்த்த மகளிருக்கெல்லாம் அதிர்ச்சி. அவர்களுடைய வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வந்து விழுந்திருக்கிறது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொன்னார்கள். கடைசியில் ‘ஜூம்லா’ என்று சொன்னார்கள்.
‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!’’
ஆனால், கேட்காமலேயே ஒவ்வொரு மகளிர் வங்கிக் கணக்கிலும் 5 ஆயிரம் ரூபாய் நம்முடைய முதல மைச்சர் செலுத்தி விட்டார்.
சிலர் புரியாமல் கேட்கலாம், ‘‘அவருடைய வீட்டி லிருந்தா அந்தப் பணத்தைக் கொடுத்தார்’’ என்று. எவரும்,எவர் வீட்டிலிருந்தும் கொடுக்க முடியாது. நாம் எல்லோரும், அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்துகின்றோம். அதைத்தான் மக்கள் நலப் பணிக்காகக் கொடுக்கிறார்கள்.
மகளிருக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கான தலைப்பைப் பாருங்கள், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’’ என்பதுதான் அது.
நாங்கள் உங்களுக்கு சலுகையோ, உதவியோ செய்யவில்லை. நீங்கள் பாடுபடுகிறீர்கள். மகளிர் இல்லையானால், சமுதாயம் கிடையாது. அவர்கள் உழைப்பாளிகள், உழைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களான உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்காக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.
தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிட்டால், பல அரசு நல பணிகளைச் செய்ய முடியாது. அதனை நிறுத்த வேண்டும் என்பதற்காக திட்டத்தைத் தீட்டுகிறார்கள். இன்னொரு பக்கத்தில், ஒருவரை விட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.
நீதிமன்றங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியுமா? என்று நினைக்கிறார்கள்!
அண்மைக் காலத்தில் எப்படி அமலாக்கத் துறை, சி.பி.அய்., வருமான வரித் துறை – திரிசூலங்கள் எப்படி பயன்படுத்தப் படுகின்றனவோ, தணிக்கைத் துறை எப்படிப் பயன்படுத்தப்படுகிறதோ, அதுபோன்று, மதக் கலவரங்களைக்கூட தமிழ்நாட்டில் செய்ய முடியாது என்று தெரிந்தவுடன், கடைசியாக நீதிமன்றங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்த முடியுமா? என்று இன எதிரிகள், கொள்கை எதிரிகள், பிற்போக்குவாதிகள் நினைக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் நிகழ்வு அதற்கு ஓர் உதாரணமாகும்.
இந்த இயக்கம் பிறந்தது, மிட்டா மிராசுகளை நம்பிக் கொண்டு அல்ல!
சாதாரண மக்களை நம்பித்தான்
இந்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது!
இந்த இயக்கம் பிறந்து வளர்ந்து, இன்றைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்காக இருப்பது, அதானியை நம்பி அல்ல; அம்பானிகளை நம்பி அல்ல; டாட்டாக்களை நம்பி அல்ல; பிர்லாக்களை நம்பி அல்ல. மக்கள், மக்கள், சாதாரண மக்களை நம்பித்தான் இந்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த வெற்றியைப் பார்க்கும்போது நண்பர்களே, இன எதிரிகள், கொள்கை எதிரிகள் அவற்றை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதற்காக நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.
நீதிமன்றங்களை ஒரு கட்டத்தில் நம்பினா லும்கூட, அதைத் தாண்டி, நாங்கள் மக்கள் மன்றத்தை நம்புகின்றோம், வீதி மன்றத்தை நம்புகிறோம் என்று வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்யக்கூடியவர்கள்.
நாங்கள் எல்லாம் ‘மிசா’ கைதிகளாக சிறைச்சாலையில் இருந்தோம்!
50 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலை. சிறைச்சாலையில் நாங்களெல்லாம் மிசாக் கைதிகளாக இருக்கிறோம். அப்போது சிறைச்சாலையில் உள்ள அதிகாரி சொல்கிறார், ‘‘நாளைக்கு உங்கள் கட்சிகளை யெல்லாம் தடை செய்கின்ற உத்தரவு வரப் போகிறது. இனிமேல் நீங்கள் வெளி உலகத்தையே பார்க்க முடியாது’’ என்று இதைவிடக் கடுமையாகச் சொன்னார்.
அதைப்பற்றி கவலைப்படாமல்தான் அங்கே இருந்தோம். எட்டடிக் கொட்டடியில் நாங்கள் எல்லாம் இருந்தபோது, இரவு நேரத்தில், ஒருவரை அடித்து உள்ளே தள்ளினார்கள். அவரைத் தாங்கிப் பிடித்த கரம்தான் இந்தக் கரம். யார்? என்று கேட்டபோது, ஸ்டாலின் என்றார் அவர். திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது அவருக்கு.
இந்தியாவிற்கே தலைமை தாங்கக்கூடிய தகுதி உள்ளவர்!
சிறையிலிருந்து வெளியிலேயே வர முடியாது என்று சொன்னதைப் பொய்ப்பித்து, இன்றைக்கு இந்தியாவிற்கே தலைமை தாங்கக்கூடிய தகுதி உள்ளவர் என்று பலரும் ஒருவரைக் கைகாட்டுகிறார்கள் என்றால், அவர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர்!
அந்த உழைப்பு அவருக்கு எப்படி வந்தது? உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதைப்பற்றி இங்கே உரையாற்றிய சகோதரர் சொன்னாரே!
ஆகவே, அவருடைய உழைப்பு, நேர்மை, அடக்கம். வெற்றி வருகின்ற நேரத்தில்கூட, அண்ணா சொன்னதுபோல, கதிர்கள் தலைசாய்ந்து இருப்பது போல, மேலே உயர, உயர அவர் அடக்கத்தின் உருவ மாக இருக்கிறார்.
சட்டமன்றத்தில் கடைசி கூட்டத் தொடரின் நிறைவு நாளில், அவருடைய நன்றியுரை, பார்த்த வர்களை கேட்டவர்களையெல்லாம் உருக்கியது. எதிர்க்கட்சிக்காரர்களால் கூட குறை சொல்ல முடிந்ததா? அதனால், கடைசி நாள் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி வரவில்லை.
அறிவு நாணயம் உள்ளவர்கள் சொன்னார்கள், ‘‘எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்கிறார்கள்’’ என்று. இன்னுங்கேட்டால், நம்முடைய முதல மைச்சர் அவர்கள், ஆளுநருக்கும் நன்றி சொன்னார். அதுதான் பண்பாடு.
திராவிடருடைய கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு என்பதற்கு அடையாளம்!
நன்றி என்பது இருக்கிறதே, இவர் நன்றி சொன்னார்; அது அவரை எவ்வளவு பெரிய அளவிற்குக் குத்திக் குடைகின்ற ஆயுதம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதுதான், திராவிடருடைய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு அடையாளம்.
எனவே, நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் வரும்.
அடுத்தபடியாக நண்பர்களே, மிக முக்கியமாக இங்கே ஒரு முக்கியத் தீர்மானம், நம்முடைய அதிகார வர்க்கம்.
எல்லாவற்றிலும் வெற்றி பெற்று நாம் ஆட்சியை அடைந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி என்றாலும், அமைச்சர்கள், சட்டமன்றத்தில் திட்டங்களை, சட்டங்களை வைத்தாலும், கடைசியாக அதை நடைமுறைப்படுத்துவது அதிகார வர்க்கத்தின் கைகளில் இருக்கிறது.
இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லித்தான் நாம் போராடினோம். சமூகநீதியைப் போராடித்தான் பெற்றோம். 1928 ஆம் ஆண்டு முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராக இருந்து, நீதிக்கட்சியின் ஆதர வோடு வகுப்புரிமை சட்டம் நிறைவேறியது.
அந்த வகுப்புரிமையை, பார்ப்பனர்கள் நீதி மன்றத்திற்குச் சென்று, அது செல்லாது என்று ஆக்கி னார்கள்.
மக்கள் மன்றத்தை நம்பினார் பெரியார்!
ஆனால், மக்கள் மன்றத்தை நம்பினார் பெரியார். போராட்டத்தினை நடத்தினார். 51 அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நேருவால் நடைபெற்றது என்பது வரலாறு.
இன்றைக்கு அது வளர்ந்து, வளர்ந்து, மண்டல் கமிஷனுக்காகப் போராடி, பெரியாருக்குப் பின், 27 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது. அதை நடை முறைப்படுத்துவதற்காகத் தொடர்ந்து போராடினோம். அதுவும் தந்தை பெரியாருக்குப் பிறகு. 27 சதவிகித இட ஒதுக்கீடு.
அதேபோல, தலித் சமுதாயம் என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு 15 சதவிகிதம். அதே போல, பழங்குடி சமூகத்தினருக்கு 7.5 சதவிகிதம். இரண்டும் சேர்த்து 2.5 சதவிகிதம்.
50 சதவிகித்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று, அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை தீர்ப்பாகக் கொண்டு வந்தார்கள்.
27 சதவிகிதத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை!
சரி, அதையும் மதித்து, 50 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிகிதத்தைக் கழித்தால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவிகிதம்.
அந்த 27 சதவிகிதத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றவில்லை. அதை நினைத்தால், எங்களுக்கு வேதனையாக இருக்கிறது நண்பர்களே! உங்களுடைய பிள்ளைகளின் கதி என்னாவது?
தங்களைத் தாங்களே அடகு வைத்துக் கொண்டவர்களால் முடியாது!
இதைக் கேட்பதற்கு, ‘திராவிட மாடல்’ ஆட்சியால்தான் முடியுமே தவிர, தங்களைத் தாங்களே அடகு வைத்துக் கொண்டவர்களால் முடியாது.
ஏன் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வரவேண்டும்? ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்? என்பது அவருக்காக அல்ல; அல்லது சிலர் அமைச்சர்களாக ஆகவேண்டும் என்பதற்காக அல்ல.
உங்களுக்காக, உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக, உங்கள் எதிர்காலச் சந்ததியினருக்காக, உங்கள் வாழ்விற்காக அதனைச் செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒட்டுமொத்தமாக அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவி நியமனங்களில் முறையான இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கவில்லை.
வகுப்புவாரி அடிப்படை உரிமை கடைப்பிடிக்கப்படவில்லை.
அது வெறும் சலுகையோ, பிச்சையோ அல்ல!
ஆனால், 27 சதவிகிதம் அதிகாரப்பூர்வமாக நமக்கு இருக்கின்ற உரிமை. அது வெறும் சலுகையோ, பிச்சையோ அல்ல.
அதைக் கொடுக்கக்கூட ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ். அரசு, மோடி அரசு தயாராக இல்லை.
அதைத்தான் இங்கே தீர்மானமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருக்கிறதே, அதனுடைய இட ஒதுக்கீடு, குறிப்பிட்ட சதவிகிதத்தில் பாதியைக்கூட நிறைவேற்றவில்லை.
யாருக்குப் போகிறது அது?
பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்களுக்குப் போகிறது.
இந்த இயக்கம் எதற்காகப் பிறந்தது?
சமூகநீதிக்காக!
இந்த ஆட்சி எதற்காக சிறந்தது?
சமூகநீதியை நடைமுறைப்படுத்துவதுதான்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டை அதிகமாகப் பெற்றிருக்கின்ற மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று கிடையாது!
திராவிட இயக்கங்களுடைய போராட்டத்தால், 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்படி வந்தது?
அப்போது உயர் பொறுப்பில் இருந்த மூன்று பேரும் பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்கள். அவர்களைப் பயன்படுத்தியது மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் பார்ப்பனர்.
பிரதமர் நரசிம்மராவ் அவர்கள், ஆந்திரப் பார்ப்பனர்.
குடியரசுத் தலைவராக இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த சங்கர் தயாள் சர்மா. மூவரும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
மேற்கண்ட மூன்று பேர்களிடமும் வேலை வாங்கக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கத்திற்கு உண்டு.
அதனால் இன்றைக்கு 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று கிடையாது.
சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், ‘‘பெரியார் மண், பெரியார் மண்’’ என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன? என்று!
பெரியாழ்வார் காலத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது. பெரியாரால்தான் 69 சதவிகிதம்!
இதில் கை வைக்கக்கூடிய துணிச்சல் மற்றவர்களுக்குக் கிடையாது. அதைப் பாதுகாக்கின்ற கடமை திராவிடர் இயக்கத்திற்கும், இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உண்டு.
இதற்கு ஆபத்து வந்தபோது, அந்த வழியிலே அவர் நிற்கவில்லையே! அதை எதிர்த்து, ஏழைகள் என்று சொன்னால், எல்லோரும் ஏழைகள் அல்ல. உயர்ஜாதி ஏழைகளுக்குப் பத்து சதவிகித இட ஒதுக்கீடு. அதற்கு ஆதரவு கொடுத்தவர்கள்தானே இன்றுள்ள எதிரிணியினர். அதனை எதிர்த்தவர்கள்தானே இந்த அணியினர்.
சமூகநீதி வேண்டும், உங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் யாரை ஆதரிக்கவேண்டும்? யார் ஆட்சிக்கு வந்தால், உங்கள் வீட்டிற்கு லாபம் இருக்க முடியும்? என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!
இது எங்களுக்காக அல்ல என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்!
பெரியார் நுண்ணாடியைப் போட்டுப்
பார்க்கிறோம்!
இதைச் சுட்டிக்காட்டி, இந்தக் கருத்துள்ளவர்கள் எல்லோரும் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறார்கள். திராவிடர் கழகத்திற்கு இதே வேலை – இதே போர் – பெரியார் பார்வை – பெரியார் நுண்ணாடியைப் போட்டுப் பார்க்கிறோம்.
தேர்தலில் எவ்வளவு சீட் கிடைக்கும் என்று அரசியல் கட்சிகள் பணியாற்றுவார்கள். ஆனால், எங்களுக்கு அதுபோன்று கிடையாது. தாய்க்கழகமான திராவிடர் கழகம் இருக்கிறதே, சமூகநீதிக்கான இயக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியில் அடித்தளமாக இருக்கக்கூடிய இந்த இயக்கம் – போராட்டக் களத்தையும் மறக்காது.
போராட்டம் – பிரச்சாரம் என்கின்ற அந்தப் பெண்டுலம் ஆடிக்கொண்டே இருக்கும். சமூக அநீதி தவறு என்று சொல்லி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு அலுவலகங்களின்முன், கழக மாவட்டத் தலைநகரங்களில் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி கண்டனப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றோம். இளைஞரணியினர், மகளிரணியினர், தேர்தல் களத்திற்கு மற்றவர்கள் போனாலும், நமக்கு இந்தக் களம் முக்கியம் என்பதினால், அதற்காக நாங்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.
செய்தியாளர் நண்பர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்கிறோம், சமூக அநீதியைக் கண்டித்து, முறையாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாததைக் கண்டித்து, ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ளவர்கள், சமூகநீதியில் நம்பிக்கை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஒருங்கிணைத்து, தாய்மார்கள் உள்பட இளைஞர் பட்டாளத்தின் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
வெறும் மேடைப் பேச்சோடு என்றால், அது நடக்காது. அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இடையறாமல் போராடவேண்டும். அப்படிப் போராடித்தான் 9 ஆயிரம் வருமான உச்ச வரம்பை நாங்கள் நீக்கினோம். போராடித்தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்தது.
போராட்டத்திற்குத் தயாராகுங்கள்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு மறைமலைநகரில் நடைபெற்று சில மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. அதற்குப் பிறகு தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு நடத்தி வரலாறு படைத்திருக்கிறீர்கள் நீங்கள்.
அத்தனை பேருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை, திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி ஆகிய தோழர்களுக்கும், மாநாட்டிற்காகப் பணியாற்றிய தோழர்களுக்கும், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஏற்பாட்டுத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி, பொருளாளர் அய்யனார், துணைத் தலைவர்கள் நரேந்திரன், தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர்கள் வெற்றிக்குமார், வீரகுமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், ஆசிரியர் கோபு பழனிவேல், ஆ.டேவிட், இரா.இளவரசன், ரெ.சுப்பிரமணியன், இரா.சேகர், நெல்லுப்பட்டு ராமலிங்கம், சாமி.கலைச்செல்வன், வெ.துரை, துரை.சூரியமூர்த்தி, இரா.பரமந்தாமன், ஏஜிஎன். குணசேகரன், கவிஞர் பகுத்தறிவுதாசன், பொன்னாப்பூர் திருநாவுக்கரசு, கலைச்செல்வி, அஞ்சுகம், உதயப்பிரகாஷ், பரத் பூஜன், ஆகாஷ், ஆதித்யா, அ.பெரியார் செல்வன், தேன்மொழி, அழகிரி, பாவலர் பொன்னரசு, ஏழுமலை, நிலவன், அல்லூர் பாலு, விஜயகுமார், பெரியார் கண்ணன் மற்றும் ஏராளமான தோழர்களுக்குத் தலைமைக் கழகம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
நிறைவாக நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் நன்றி! ஊடகவியலாளர்களுக்கு நன்றி! ஒத்துழைப்புக் கொடுத்த காவல் துறையினருக்கு நன்றி!
பாதுகாப்பாக நீங்கள்
வீட்டிற்குச் செல்லவேண்டும்!
ஒரே ஒரு வேண்டுகோள் – வெளியூர்களிலிருந்து பேருந்துகளிலும், தனி வாகனங்களிலும் வந்திருக்கின்ற தோழர்கள் பாதுகாப்பாக வீடு போய் சேரவேண்டும். இதுவரையில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பாக நீங்கள் வீட்டிற்குச் செல்லவேண்டும்.
நம்முடைய வாகனங்கள் எப்போதும், கொள்கை வாகனங்கள்கூட எப்போதும் பாதுகாப்பாகத்தான் செல்லும்.
உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி!
வெற்றி பெறுவோம்!
‘திராவிடம் வெல்லும், அதை நாளைய வரலாறு சொல்லும், சொல்லும்!’
வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
