‘திராவிடன் வி.வி.எஸ். – 100’ சிறப்பு மலர் வெளியீடு கொடியை கொளுத்திய வழக்கில் வி.வி.எஸ். அவர்களுக்கு தந்தை பெரியார் ரூ.100 (காசோலை) வழங்கினார் பழைய நினைவுகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் வாழ்த்து

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23  ‘திராவிடன் வி.வி.எஸ். – 100’  சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில்  தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வி.வே..சாமிநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி  – ‘திராவிடன்  வி.வி.எஸ். – 100’ சிறப்பு மலர் வெளியீட்டு விழா நேற்று (22.2.2026) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

நூற்றாண்டு நாயகர்  சமூகநீதிப் போராளி மேனாள் அமைச்சர் வி.வே.சாமிநாதன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். தமிழர் தலைவருக்கு வி.அய்.டி., பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் பொன்னாடை அணிவித்தார். வி.அய்.டி., பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்தார். மேலும், விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு வி.அய்.டி. வேந்தர் பொன்னாடை அணிவித்தார்.

மலர் வெளியீடு

வி.வி.எஸ். அவர்களின்  நூற்றாண்டு சிறப்பு மலரை,
அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் பொன்னையன் வெளியிட, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். சிறப்பு புகைப்படக் கண்காட்சியை, உலகத் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வி.அய்.டி., பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: ‘‘தி.க., – தி.மு.க., – அ.தி.மு.க., என்ற திராவிட இயக்க வரலாற்றில், மூன்றிலும் தொடக்கக் காலங்களில் இடம் பெற்றவர் வி.வி.எஸ்., என்பதால், கட்சிப் பாகுபாடுகளை கடந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்த வந்துள்ளனர். இதுபோல, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும்அனைவரும் ஒன்று கூட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள, 61 பல்கலை கழகங்களில், 22 அரசுப் பல்கலைக் கழகங்கள் இருந்தும், அவற்றில் 16இல் துணை வேந்தர்கள் இல்லை.

இது, மாநிலத்திற்கும், உயர் கல்விக்கும், மாணவர் கழகங்களுக்கும் பெரும் ஆபத்தானது.  அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருங்கிணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கடந்த, 1967 மக்களவைத் தேர்தலில், நான் போட்டியிட்டபோது, அறிஞர் அண்ணா 6,000 ரூபாய் கொடுத்தார். அதனுடன் என் பணத்தையும் சேர்த்து, 50,000 ரூபாய் செலவு செய்து, எம்.பி., ஆனேன். நல்ல அரசியல்வாதிகளும் வர வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

‘திராவிடன் வி.வி.எஸ். 100’ என்ற சிறப்பான தொண்டறச் செம்மல் 100ஆவது ஆண்டை   அடைந்திருக்கின்ற இந்த நேரத்தில் நாம் மிகுந்த மகிழ்ச்சியின் எல்லையிலிருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக இங்கே சிறப்பாக வந்து அவரது 100ஆவது ஆண்டை கொண்டாடுகிறோம். அவர் 80 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டற செம்மலாக வாழ்ந்தார் என்பதை குறிப்பிடும் வகையில் அற்புதமான மலர், அவரை பற்றி ஒரு குறும்படம், அவரைப் பற்றி சிறப்பாக நடத்தக்கூடிய சிறந்த விழாவாக இது அமைந்துள்ளது. இந்த விழாவிற்கு வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தரும், அவருடைய (விவிஎஸ்) சகாவாக இருந்தவருமான ஜி. விஸ்வநாதன் தலைமையேற்று இருப்பது சிறப்பாகும். வி.வி.எஸ். அவர்கள் இன்றைக்கு சக்கர நாற்காலியிலே வந்தாலும் தெளிவாக சிந்திக்ககூடியவராகவும், எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அதைப் பற்றி ஆராயக்கூடியவராகவும் இருக்கிறார். இப்பொழுதும் அவர் சலிப்பதில்லை.

அவருக்கு தோழர்கள் வாள் கொடுத்தார்கள். அந்த வாளை கொடுக்கும்போது அதை பெற்றுக் கொள்ள  அவர் எழுந்து நின்றார். மலர் கொடுக்கும்போதும் எழுந்தார். ‘மலர்’ கொடுத்தாலும் எழுவார், ‘வாள்’ கொடுத்தாலும் எழுவார் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவரது உணர்வு இருக்கிறது. இன்னும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது. அமைச்சராக இருந்தபோது 13 துறைகளை கவனித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதற்குமுன் நகரசபைத் தலைவராக இருந்தார். இதுவெல்லாம் பதவிகள். பதவிகளால் அவருக்கு பெருமை என்பதைவிட அவரால் அந்தப் பதவிக்கு பெருமை என்கின்ற அளவிற்கு நாணயமாகவும், நேர்மையாகவும், ஒழுக்கமுடனும் இருக்கக்கூடிய ஒரு மாமனிதர். பதவிகள் வரும் – போகும். அவர் பெரியார் திடலுக்கு திடீர் என வருவார். தந்தை பெரியாரோடு உறவு முறிந்து விட்டது என்று அவர் நினைக்கவில்லை. வி.வி.எஸ். என்பது வெறும் இனிசியல் அல்ல, ‘வெரிவெரி சிம்பிள்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் மிகவும் எளிமையாக இருக்க கூடியவர். ‘வெரிவெரி சர்வீசபுள்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அற்புதமான மாமனிதர். முதன்முறையாக நான் அவரை சந்திக்கும்போது நான்  ஜூனியர் இன்டர்மீடியட் அப்பொழுது கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. உடனே தந்தை பெரியார் மிகப் பெரிய கிளர்ச்சியை அறிவித்தார். அந்த கிளர்ச்சிக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே தலைமை தாங்கினார்.

இந்த விழா என்பது மிகச்சிறப்பாக பல கட்சிகளில் இருந்து வந்திருந்தாலும் எல்லோரும் ஒரு குடும்ப உறவு போல கொள்கை உறவுகளாக திரண்டு நிற்கிறார்கள். இந்த விழா ஒரு மலர் தோட்டம்போல. வாழ்நாள் முழுவதும் சிறப்பாக இருந்தார். அவர் நூறாண்டு ஆனாலும் இன்று வரை போராளியாக இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது  சிதம்பரம் நடராஜர் கோயில் ஊழல்கள், கோயிலில் நடைபெற கூடிய குறைபாடுகள் இவைகளையெல்லாம் சுட்டிக்காட்டி என்ன செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று கூறி வழியை காட்டுங்கள் என்று கூறி அவரது அனுமதியைப் பெற்று போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து,  மிகப் பெரிய அளவிற்கு வி.வி.எஸ்.  சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றிகரமாக வந்த பிறகு, மீண்டும் தன்னுடைய அமைச்சர் பொறுப்பையும் தொடர்ந்துகொண்டு, அதே நேரத்தில் மக்களையெல்லாம் ஒன்று திரட்டி நகர மக்களுக்காக அன்று தொடங்கிய போராட்டம் இடையில் பல்வேறு சிக்கல் வந்தாலும் இன்றைக்கும் அதிலே முனைப்பாக இருக்க கூடியவர், தடம்மாறாமல் இருக்க கூடியவர்தான் வி.வி.எஸ். அவர்கள்.

கொள்கை உணர்வு படைத்தவர்

போராளி, போராளி என்று கூறக் கூடிய அளவிற்கு உறுதியானவர். கொள்கை உணர்வு படைத்தவர். அதுதான் வரலாறு. தென்னார்காடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக   கிருஷ்ணசாமி இருந்தார்.  கொடியை கொளுத்தினார்கள், தகராறு செய்தார்கள் என்ற வழக்கிலே கடலூருக்கு அலைந்து கொண்டு இருந்தார்கள். அந்த வழக்கிற்காக தந்தை பெரியார் வி.வி.எஸ். அவர்களிடம் நூறு ரூபாய்கான காசோலையை வழங்கினார். பிறகு அவரே வழக்குரைஞராக வந்தார். நூறாண்டு கண்ட வி.வி.எஸ். தொண்டறச் செம்மலாகவும் இருக்கிறார். இன்னமும் போராளியாகவும் இருக்கிறார். அம்பாசிடர் கமிசனிலே உள்ள குறைகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம்  சுட்டிக்காட்டி அதை சரிப்படுத்தினார். சமூகநீதிப் போராளி  நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி – இவ்வாறு தமிழர் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

போராடுவேன்

முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே,  தமிழ்நாடு காங்., மேனாள் தலைவர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், தி.மு.க., செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர்.

வி.வே.சுவாமிநாதன் தன் ஏற்புரையில், ”சேர, சோழ, பாண்டிய நாடுகளாக இருந்த தமிழ்நாட்டை ஒருங்கிணைத்து  ராஜராஜ சோழன் சிலையை மீட்க, சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது பெரிதல்ல. அந்தச் சிலையைத் திருடியவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டியதுதான் பெரிது.

திருடப்பட்டு தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள ‘கண்ணகி’ சிலையையும், பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு கலை பொக்கிசங்களையும் மீட்க, ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் வாழ்வின் இறுதி வரை அதற்காக போராடுவேன்,” என்றார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *