மதுரை, பிப். 23- மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான (பாக முகவர்கள்) பிரம்மாண்ட பயிற்சி மாநாடு நேற்று (22.2.2026) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளிலிருந்து சுமார் 1.9 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டின் தொடக்கத்தில், அமைச்சர் மூர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார்.தொண்டர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், மதுரையின் சிறப்புகளைப் புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
“வீரம், பாசம், கோயில், சாப்பாடு என எல்லாவற்றிற்கும் பெயர்பெற்றது மதுரை.
வெற்றி இலக்கு
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதே லட்சியம். “அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி, எனக்கும் சரி ஓய்வேயில்லை. வாக்குப்பதிவு முடியும் வரை ஓய்வெடுக்கக் கூடாது.”
தமிழ்நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் பாக முகவர்கள்தான் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் தூண்கள். இந்தியாவிலேயே பூத் அளவில் தி.மு.க.வைப் போல வலுவான கட்சி வேறெதுவும் இல்லை. தி.மு.க. அரசின் சாதனைகளை வீடு வீடாகக் கொண்டு செல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை தற்போது ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சதித்திட்டங்களை முறியடித்து மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. “மக்களுக்காக உருவான இயக்கம் திமுக; இதனைத் தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்.” மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளாக முதலமைச்சர் சிலவற்றை பட்டியலிட்டார். மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படவில்லை? தமிழ்நாட்டிற்கு ஏன் சிறப்புத் திட்டங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை? கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு ஏன் இன்னும் வெளியிடவில்லை?
“இனி நாம்தான், இனி எப்போதும் நாம்தான்” என்ற நம்பிக்கையுடன் களப்பணியாற்ற வேண்டும், 2024 மக்களவை தேர்தல் வெற்றியைப் போலவே வரும் தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கு ‘வெற்றி மேல் வெற்றி’ குவியும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
