சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.2.2026 அன்று வழங்கினார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அளித்த பேட்டி:
கரோனா காலங்களில் தற்காலிகமாக பணியாற்றி, பின் விடுவிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, படிப்படியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா காலங்களில், தற்காலிகமாக பணியில் இணைந்த, 2,814 பேரில், 2,146 பேருக்கு, ஏற்கெனவே மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, பணி நியமன ஆணை வழங்கப் பட்டது.
மீதமிருந்த, 719 பேருக்கு, ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் குளறுபடிகள் இருந்தன. அவர்களை தனித்தனியாக வரவழைத்து, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. தற்போது, 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், பணி நியமன ஆணை வழங்கப்படும். கடந்த அய்ந்து ஆண்டு கால ஆட்சியில், 5,825 ஒப்பந்த செவிலியர்கள், நிரந்தர பணி ஆணைகள் பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், தமிழ்நாட்டில் பயிற்சிக்கு 3 லட்சம் ரூபாய் வரை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் செலுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியில் பயிற்சி கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு 25,000 ரூபாய் பயிற்சி நிதியாக வழங்கப்படுகிறது.
