கோவை, பிப்.23- கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதையில், கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில், தற்போது சீசன் என்பதால் பக்தர்கள் 7ஆவது மலையில் உள்ள கடவுள் சிலையை காணச் சென்று வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எடாங்கிமங்களத்தைச் சேர்ந்த தேசிங்கு ராஜன் (60) என்பவர் 21.2.2026 அன்று மலையேறியுள்ளார்.
5ஆவது மலையில் உள்ள ஒட்டன் சித்தர் நினைவிடம் அருகே தேசிங்கு ராஜன் திடீரென மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்த மற்ற பக்தர்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டு மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்.
அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது மலைப்பாதையில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வெள்ளியங்கிரி மலை ஏறுவது கடினமான ஒன்று என்பதால், போதிய உடல் தகுதியுடன் வருமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மரணம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
