‘நாட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட்’: டயரி ஆஃப் நேஷன்ஸ் கான் சைஸ் கீப்பர்’ என்ற நூலில் வினோத்ராய் மன்னிப்புக் கோரியுள்ளார். இந்த நூல் வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த நூல் குறித்து இதுவரை யாருமே பேசவில்லை.
அந்த நூலில் “மன்மோகன் சிங் குறித்து நான் தொலைக்காட்சி நேர் காணல் ஒன்றில் கூறியது தவறுதான். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் தனது அறிக்கையே ஒரு மாயையான அறிக்கை தான் என்றும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிக குறைவான உரிமக் கட்டணத்துக்கு விற்ற தால் அர சாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசியலில் மிகப் பெரிய சூறாவளி ஏற்படக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2014ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழக்கக் காரண மாக அமைந்த குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, பின்னாளில் குற்றமற்றவர் என்று விசாரணை நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்த 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக் கையில் அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும், தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளார் வினோத் ராய்.
வினோத் ராய் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிருபம் டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டு எழுத்து மூலமாக வினோத் ராய் சமர்ப்பித்த தமது வாக்கு மூலத்தை டிவிட்டரில் பகிர்ந்தார் வினோத் ராய் தாக்கல் செய்த அந்த வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“11.09.2014 அன்று ‘டைம்ஸ் நவ்’ சேனலின் அர்னாப் கோஸ்வாமிக்கு நான் அளித்த பேட்டியில் சஞ்சய் நிருபம் பற்றி சில விஷயங்களை நான் குறிப் பிட்டிருந்தேன். அந்த பேட்டி மறுநாள் 12.09.2014 அன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தித் தாளிலும், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித் தாளிலும் வெளியானது. சாகரிகா கோஷுக்கு அளித்த பேட்டி 13.09.2014 அன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் வெளியானது. இந்த பேட்டி வேறு பத்திரி கைகளிலும் வெளியானது.
‘நாட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட்: டயரி ஆஃப் நேஷன்ஸ் கான்சைஸ் கீப்பர்’ என்ற என் நூல் வெளியான நேரத்தில் இந்த பேட்டிகள் வெளியாயின.
பேட்டி கண்டவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க நாடாளுமன்ற கணக்குக் குழு கூட்டத்தின்போதோ, நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றபோதோ காங்கிரஸ் எம்.பி. சஞ்சை நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தவறுதலாக, பிழையாக குறிப்பிட்டுவிட்டேன் என்பதை உணர்கிறேன்.
பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளியான அந்தப் பேட்டிகளில் சஞ்சய் நிருபமுக்கு எதிராக நான் கூறியவை உண்மைக்குப் புறம்பானவை.
இந்தப் பேட்டியால் சஞ்சய் நிருபம், அவரது குடும்பத்தினர், நலன் விரும்பிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை, வலியை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, என்னுடைய பேட்டியால் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்துக்காக அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.
இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அனுசரித்து சஞ்சய் நிருபம் இந்த விவகாரத்தை முடித்து வைப்பார் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் வினோத் ராய்.
இன்றைய நாட்டின் இந்த சீரழிவிற்கு காரணம் தேடிப்போனால் இதன் வேர் இந்தப் பெயரில் முடியும். அந்தவேருக்கு நீரூற்றி வளர்த்தவர்கள் யார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்
மேனாள் கணக்குத் தணிக்கைக் குழுத் தலைவர் (சிஏஜி) வினோத் ராயின் ‘மன்னிப்பு’ முக்கியமானது. வினோத் ராய் அறிக்கையை வைத்து தமிழ்நாட்டில் சில பதிப்பகங்கள் 2 ஜி பற்றிய புத்தகங்களை மஞ்சள் பத்திரிக்கை போல் விருப்பத்திற்கு ஏற்ப கற்பனை கதைகளை அள்ளித்தெளித்து வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், கிரண் பேடி, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஊழலுக்கு எதிரான அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கினர். இன்று பாஜக ஆட்சியில் இருக்க அதிமுக்கிய காரணம் மேலே கூறிய நபர்களும், அவர்களின் அமைப்பும் தான். அதே நேரத்தில் மிகவும் திட்டமிட்டு வடக்கு ஊடகங்கள் ஊழல் ஒழிப்புப் போராட்டம் என்ற பெயரில் டில்லியில் அன்னாஹசாரே நடத்திய நாடகத்தை பெரும் பரப்புரைபோல் செய்து பாஜகவிற்கு மறைமுக ஆதரவு திரட்டினர்.
இந்த ஊழல் குற்றச்சாட்டை வெளிக்கொண்டுவந்தேன் என்று கூறி அரசியல் லாபம் பெற்ற வினோத் ராய், 2 ஜி ஊழல் பொய்களின் மூட்டை என்று கூறினார். இவர் நிலக்கரி ஊழல் என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். ஆனால் அந்த ஊழல் குறித்து யாரும் பேசவில்லை. மேலும் நீதிமன்றத்தில் அவர் ஊழல் நடந்ததை உறுதிசெய்யத் தவறிவிட்டார். விசாரணைக்கு ஆஜாராமல் டிமிக்கி கொடுத்துவிட்டார்
பல பொய்களை கூறி பாஜக அரசும் அமைக்கப்பட்டது. இறுதியில், டில்லி சிபிஅய் நீதிமன்றம் 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் கூறப்பட்ட அனைவரையும் விடுவித்து – இதில் ஒரு துளி கூட ஊழல் இல்லை என்று கூறிவிட்டது.
பாஜகவிற்கு இவ்வளவு பெரிய உதவி செய்து, நாட்டுக்கும் பதவிக்கும் துரோகம் செய்த வினோத் ராய்க்கு கிடைத்த பரிசு
1. வங்கி வாரியத்தின் தலைவர் ஆக்கப்பட்டார்
2. பிசிசிஅய்யின் இடைக்காலத் தலைவர் (2017)
3. கேரளா உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வாரியப் பதவி
4. ரயில்வே மேம்பாட்டு ஆலோசனை குழுத் தலைவர்
5. ரயில்வே புத்துயிர் குழு உறுப்பினர்
இந்தப்பதவிகள் அனைத்தும் பெரும் லாபம் பெறும் பதவிகள் என்பதைத் சொல்லித்தெரியத் தேவையில்லை
வினோத் ராய் வங்கி வாரியத்தலைவராக இருந்த போதுதான் ரிசர்வ் வங்கியில் நீரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றோர் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு ஓடிப் போய் இன்றும் சுகபோகமாக வாழ்கின்றனர். பல்வேறு முறைகேடுகள் மூலம் பல லட்சம் கோடி ஊழல்கள் நடந்துள்ளது, இதற்கு இன்று வரை வினோத் ராய் வாய் திறக்கவில்லை.