ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
சென்னை, பிப். 22– “டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் தங்கள் வீட்டுப் பெண்கள் கல்வி பயில்வதையே வடகிழக்கு மாநிலப் பெற்றோர்கள் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள்” எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் மாநில அந்தஸ்து நாள் விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 20.2.2026 அன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் பாதுகாப்புச் சூழல் மற்றும் விருந்தோம்பல் குறித்துப் பேசியதாவது:
பெற்றோரின் நிம்மதி
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குத் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தால், அந்தப் பெற்றோர்கள் பெரும் நிம்மதி அடைகிறார்கள். தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார்கள் என்கிற ஆழமான நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.
பிற மாநிலங்களுடன் ஒப்பீடு
இந்தியாவின் பிற பகுதிகளுடன், குறிப்பாக டில்லியுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான சூழலும் பாதுகாப்பும் வடகிழக்கு மாநில மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
சமூக நல்லிணக்கம்
தமிழ்நாட்டு மக்கள் காட்டும் அன்பும், இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமுமே இம்மாநிலத்தை ஒரு சிறந்த கல்வி மய்யமாக மாற்றியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட ஆளுநர், அம்மாநிலங்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டைப் பாராட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆற்றிய உரைக்கு வலுசேர்க்கும் விதமாக ஆளுநரின் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இது பார்வை யாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
