கேள்வி 1: தோள் சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு மற்றும் வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா – தமிழ்நாடு, கேரள மாநில முதலமைச்சர்களின் உரைகளை பாடநூல்களில் சேர்க்க சட்டத்தில் இடமுண்டா?
-அமுதன், காஞ்சி
பதில்: இரண்டு முதலமைச்சர்களும் ஆளும் மாநிலங்களின் கல்விப் பாடத் திட்டத்தில் நிச்சயம் இடம்பெறச் செய்வார்கள் என்ற நன்னம்பிக்கை நமக்கு உண்டு; காரணம், இரண்டு பேரும் சமூகநீதிப் போராட்ட வரலாறு இளைய தலைமுறைக்கும், இனி வரக்கூடிய தலைமுறைக்கும் தெரியவேண்டும் என்ற வரலாற்றுப் பரப்புதலில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள்.
கேள்வி 2: கருநாடக பால்வளத்துறையின் நிறுவனமான நந்தினிக்கு குஜராத்தில் இருந்து பால் வர வைக்கப் படுகிறது, இதனால் விவசாயிகள் போராடுகிறார்கள்,. இருப்பினும் நாங்கள் பெரும்பான்மை பெறுவோம் என்று அமித்ஷா பேசுகிறாரே?
– ஆறுமுகம், திருத்தணி
பதில்: அமித்ஷாவின் ஆசை குதிரைச் சவாரி அது. ஆனால், எதார்த்தம் வேறு விதமாக இருக்கும்; தேர்தல் முடிவுகள் அதனை நிரூபிக்கும்.
கேள்வி 3: Wild Life Photographer ஆக போஸ் கொடுக்கிறார்; நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலுக்கு நானே பச்சைக்கொடி காட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார் – அவர் என்ன ஸ்டேசன் மாஸ்டராகவும் மாறிவிட்டாரா?
– வேலுசாமி, திண்டிவனம்
பதில்: மோடி எப்பொழுதும் ஆசைகளுக்கு இடம் கொடுக்கக் கூடியவர்; திடீரென்று பார்த்தால், இங்கிலீஷ் திரைப்படங்களில் வருவதுபோன்று, கவ்பாய் உடையணிந்து வருவார். அவருடைய ஆசையை தீர்த்துக் கொள்ள பல வேடங்கள் போட்டாலும், தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறார் போலும். அது அவருடைய தனிப்பட்ட ஆசை; நாம் அதைக் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி 4: தெலங்கானா ஆளுநர் உடனடியாக மசோதாக்களுக்கு அனுமதி கொடுத்ததன் ரகசியம் என்ன? (தெலங்கானா அரசு நீதிமன்றம் சென்ற போது “ஆளுநர் மாளிகை அருகில் தானே இருக்கு” என்று கிண்டல் அடித்தவர் இவர்தான்).
– காண்டீபன், ஒசூர்
பதில்: அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தமிழ்நாட்டில் நடந்ததுபோன்று அங்கேயும் நடந்துவிடக்கூடாது என்பதிலிருந்து அவர் தப்பிக்க ஒரு பாதுகாப்புக் கவசம். இரண்டாவது, உச்சநீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ என்ற கவலைமிகுந்த எண்ணம். எனவே, ஆழம் தெரியாமல் காலை விடவேண்டாம் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்.
கேள்வி 5: பத்மாஷேசாத்திரி, சின்மயானந்தா பள்ளி விவகாரங்கள் போன்றே கலாசேத்ரா விவகாரமும் அப்படியே சட்ட நடவடிக்கை தொடராமல் கைவிடப்படுமா?
– ஆறுமுகம், திருவண்ணாமலை
பதில்: இந்த அரசு கைவிடாது. எப்படி அதை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியுமோ, அப்படிச் செய்யவேண்டும்; ”சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்” என்பது பழமொழி. இருப்பார்கள் என்பது நம் நம்பிக்கை.
கேள்வி 6: ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகின்றன. ஆனால் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு எதிர்மறையாக உள்ளதே?
– மணிமேகலை, திருச்சி
பதில்: இணை அமைச்சரிலிருந்து அவர் கேபினெட் அமைச்சராக ஆகவேண்டுமே – இதைவிட நல்ல வாய்ப்பு வேறு எங்கு கிடைக்கும்?
கேள்வி 7: நிதிநிறுவன மோசடி வழக்கில் பாஜக வாஷிங் மிஷின் தமிழ்நாட்டில் ரிப்பேர் ஆகிவிட்டதே?
– செந்தில்முருகன், வேலூர்
பதில்: என்னதான் ரிப்பேர் ஆனாலும், அந்த ஓட்டை வாஷிங் மிஷினைக் காட்டியே ஓட்டு வாங்கலாம் என்று ஒரு நப்பாசை அவர்களுக்கு இருக்கிறது. ஓட்டை வாஷிங் மிஷினைக் காயலாங்கடைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, தேர்தலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி 8: மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் 14 வித பாக்டீரியாக்கள் புனிதமானதாகக் கருதப்படும் பசுவின் சிறுநீரில் (கோமியம்) உள்ளதாக – ஆய்வின் முடிவாக – இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே அறிவித்துள்ளது பற்றி…?
– காவியா, திருச்செந்தூர்
பதில்: நிச்சயமாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இந்தச் செய்தியை திராவிடர் கழகம், இளைஞரணி, மற்ற அணித் தோழர்கள் தெளிவாக மக்களிடம் விளக்கவேண்டும். அதன்மூலம் விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்புவது மட்டுமல்ல, அதைவிட மிக முக்கியமானது, கோமியம் குடித்தல் எவ்வளவு பெரிய உயிர்க்கொல்லி என்பதைப் புரிய வைக்கவேண்டும்.
கேள்வி 9: இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தில் பல ஊர்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளதே?
– தமிழ்மணி, வேளச்சேரி
பதில்: அருணாசலப்பிரதேசம் யாரிடம் இருக்கிறது என்று கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு, நிலைமை மோசமாக இருப்பதை, நாம் கண்டிப்பதைவிட, ஒன்றிய அரசே கண்டித்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு இதுவரையில் என்ன செய்துகொண்டிருந்தது என்கிற கேள்வி நியாயமான கேள்வியாகும்.
கேள்வி 10: மேல்தட்டு அறிவு ஜீவிகள், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்ற அளவில் விவாதங்களில் பேசுகிறார்களே?
– ஏகாம்பரம், மதுராந்தகம்
பதில்: எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. பொருளாதாரத்தினுடைய தத்துவம் என்ன என்றே புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். நலத்திட்டங்கள், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் தேவை.