திருச்சி, பிப். 21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் “ஆரோக்கியமான சமுதா யத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2026 முதல் 18.02.2026 வரை நொச்சியம் மாதவபெருமாள் கோயில் விஜயா நகர் பகுதியில் தொடர்ந்து ஒருவாரகாலம் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமின் துவக்க விழா 12.02.2026 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம் வர வேற்புரையாற்றினார். திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு. செல்வி தமது வாழ்த்துரையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்களை நேரில் காணும் வாய்ப்பை பெற்றதனையும் முகாமில் பங்கேற்கும் மாணவர் களும் பேராசிரியர்களும் மனித நேயத்தோடு முழு ஈடுபாட்டுடன் மக்கள் நலப்பணிகளை செய்வ தாகவும் பாராட்டினார்.
கொள்கை நெறி
இத்தகைய எண்ணமும், செயல்பாடுகளும் தந்தை பெரியார் பெயர் தாங்கிய மருந்தியல் கல்லூரியில் பயில்வ தனால் மாணவர்களுக்கு ஏற்பட்டு உள்ளதாகவும் மானுடப் பற்று ஒன்றை மட்டுமே வாழ்வின் இலட்சியமாக கொண்ட அறிவு லக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டற வாழ் வினை கொள்கை நெறியாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் இலால்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் நாட்டு நலப் பணித்திட்ட பணிகளை கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகின்றது. அதற்கு முழு ஒத்துழைப்பினையும் ஆதர வினையும் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து மற்றும் நகர செயலாளர் பாலசந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமிற்காக தமது இல்லத்தினை வழங்கியவருமான இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ. பாலசுப்ரமணியன் நாட்டு நலப்பணித்திட்டத்தினை இலால்குடி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடத்தி வரும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகத்திற்கும் முதல்வர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட குழுக்களுக்கும் தம்முடைய நன்றியை முதலில் தெரிவித்து, “நம்மால் முடியும்” என்ற தமிழர் தலைவரின் சிந்தனைக்கேற்ப நாட்டு நலப்பணித்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நல வாழ்வுப் பணியினை செய்வோம் என்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பெ. பெரியசாமி, நகரத் தலைவர் சிவசங்கரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சை மணி மற்றும் கூத்தூர் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். பேராசிரியர் ரா.தினேஷ் நன்றி கூற துவக்கவிழா நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
தமது பணியினை முடித்து நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வில் பங்கெடுப்பதற்காக விரைந்த திராவிடர் கழக இலால்குடி மாவட்டத் தலைவர் வீ. அன்புராஜா முதல்வர் முனைவர் இரா. செந்தாமரையிடம் நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடி ரூ. 5000 நன்கொடையாக வழங்கி சிறப்பித்தார். இம்முகாமில் ஊர்ப் பொதுமக்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
