* எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் சிலர் பொய்க்கால் குதிரை? 4 சிலர் மரக்குதிரை? சிலர் ஜட்கா குதிரை? சிலர் மண் குதிரை?
தி.மு.க. கூட்டணியோ வெறும் குதிரையல்ல! பந்தயக் குதிரை!!
தேர்தல் போட்டியில் ஒருபோதும் வெல்ல முடியாது!
மானாமதுரை, பிப்.21 எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் சிலர் பொய்க்கால் குதிரை? சிலர் மரக்குதிரை? சிலர் ஜட்கா குதிரை? சிலர் மண் குதிரை? தி.மு.க. கூட்டணியோ வெறும் குதிரையல்ல! பந்தயக் குதிரை!! தேர்தல் போட்டியில் ஒருபோதும் அதை வெல்ல முடியாது என்றார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
“இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
சிவகங்கை மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில், கடந்த 12.02.2026 அன்று இரவு 9 மணியளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமைப் பொறுப்பை மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி ஏற்றிருந்தார். மாவட்ட அமைப்பாளர் ச.அனந்தவேல் அனைவரையும் வரவேற்று மகிழ்ச்சியுற்றார். மாவட்டக் காப்பாளர் ச.இன்பலாதன், மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், மேனாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் சோ.மாரியப்பன் கென்னடி, வி.சி.க. இளையான்குடி ஒன்றியச் செயலாளர் ஜேம்ஸ் வளவன், ம.தி.மு.க. மானாமதுரை நகரச் செயலாளர் கி.கண்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு!
இராமநாதபுரம் பத்திரிகையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மூன்றையும் முடித்து விட்டு, சாலை வழி மார்க்கமாக கழகத் தலைவர் மானா மதுரை பரப்புரைக் கூட்டம் நிகழ்விடத்திற்கு இரவு 9 மணியளவில் வந்து சேர்ந்தார். அவருக்கு சிவகங்கை மாவட்டக் கழக சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து, அதன் மூலம் புத்தகங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை செவ்வனே செய்தார்.
பெரியார் உலக நிதியளிப்பு
அதையும் தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் நிதியளிப்போர் பெயர்களை வாசிக்க, வாசிக்க, உரிய வர்கள் மேடைக்கு வந்து, காசோலைகளை கழகத் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். ரூ.7 லட்சத்துக்கும் மேலாக வழங்கப்பட்ட தொகையானது முதல் தவணை என்று மாவட்டக் கழக சார்பில் பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்டக் கழக சார்பிலும், அனைத்துக் கட்சிகள் பொறுப்பாளர்கள் சார்பிலும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு மரி யாதை செய்து மகிழ்வித்தார். மாவட்டக் காப்பாளர் ச.இன்பலாதன் தனது பேரப்பிள்ளைகள் இரா.நிவன் ராஜசுந்தரம் 11, இனியா 14 ஆம் பிறந்த நாள்களை முன்னிட்டு, பெரியார் உலகத்திற்கு ரூபாய் 25,000/- வழங்கி, கழகத் தலைவர் ஆசிரியரிடம் வாழ்த்துப் பெற பேரனுடன் வந்தார். தனக்கு அணிவித்த பயனாடையை ஆசிரியர், ச.இன்பலாதன் பேரனுக்கு அணிவித்து மகிழ்ந்து, மகிழ்வித்தார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கழகத் தலைவர் தொடக்கத்தில், கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கும், பெரியார் உலகம் நன்கொடை வழங்கியதற்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, “திராவிடர் இயக்கம் அரசியலுக்கு ஏன் வந்தது?” என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, “பதவிக்காக அல்ல, பதவியின் மூலம் கொள்கையைச் செயல்படுத்த ஒரு வாய்ப்பு பெறத்தான்” என்று பதில் சொல்லிவிட்டு, “மற்ற கட்சிகளுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடே இதுதான்” என்றார். தொடர்ந்து, “நம்மைப் போன்றவர்கள் எல்லாம் பிறக்காத காலத்தில் தந்தை பெரியாரும், அண்ணாவும் இணைந்து சிவகங்கையில் ஒரு திறந்த காரில் வைத்து அழைத்து வந்தார்கள். வழிநெடுக பெரியாருக்கு வரவேற்பு! எத்தகைய வரவேற்பு? பழைய பிய்ந்து போன செருப்புகளை எல்லாம் தோரணம் கட்டி; அதுவும் அவர்கள் வரும்போது அவர்கள் தலையில் இடிக்கிற மாதிரி தாழ்வாகக் கட்டி வரவேற்றார்கள். காரணம்? இந்தக் கொள்கை பரவக்கூடாது என்று ஸநாதனிகள் நினைத்தார்கள்’’ என்று சொல்லிவிட்டு, “ஆனால், அதே சிவகங்கையில் தான் நீதிக்கட்சிக்கு ஒப்பற்ற ஒருவராக இருந்து, செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தன்னுடைய ஜாதிப்பட்டத்தையே விட்டார் இராமச்சந்திரன்” என்று பெருமிதத்துடன் கூறி, திராவிட இயக்கம் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை தாங்கி வளர்ந்தது என்பதை பசுமரத்தாணி போல் உணர்த்தினார்.
மேலும் அவர், ”அப்படி வந்த நீதிக்கட்சியை தான் குழி தோண்டிப் புதைத்து விட்டோம் என்று சத்தியமூர்த்தி அய்யர்கள் கூறினார்கள்” என்று அன்றே தொடங்கிய ஆரிய – திராவிட போரைச் சுட்டிக்காட்டிவிட்டு, ”1967 இல் அறிஞர் அண்ணா அதன் தொடர்ச்சியாக வந்தார்” என்றும், “அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் வந்தார்” என்றும், “கலைஞருக்குப் பின்னர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்தார்” என்றும், குழி தோண்டி புதைக்கப்பட்டதாக அவர்கள் கூறிய நீதிக்கட்சியின் வழித்தோன்றல்களாக வரிசையாக தலைவர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர் என்பதையும் போகிற போக்கில் வரலாற்றுத் தகவல்களைச் சிந்தினார்.
‘‘பா.ஜ.க. சுதந்திரமாக இயங்க முடியாத; தன் முடிவுகளை தானே எடுக்க முடியாத ஒரு கட்சி!”
தி.க. – தி.மு.க.; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகியவை பற்றி தத்துவரீதியாக சுருக்கமாகச் சொல்லி விட்டு, ‘‘பா.ஜ.க. சுதந்திரமாக இயங்க முடியாத; தன் முடிவுகளை தானே எடுக்க முடியாத ஒரு கட்சி” என்றொரு முக்கியமான விசயத்தை மக்கள் முன் எடுத்து வைத்தார். மேலும் அவர், “மனுதர்மம் தான் அரசியலமைப்புச் சட்டமாக வரவேண்டும்” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகியவற்றின் கொள்கை என்பதை, மனுதர்மத்தையும், மற்றொரு கையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் வைத்துக் கொண்டு விளக்கினார். தொடர்ந்து, “அரசியலமைப்புச் சட்டம் சமதர்மத்தைச் சொல்கிறது; மனுதர்மம் குல தர்மத்தைச் சொல்கிறது” என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் பள்ளிக்கூட ஆசிரியர் போல் மக்களுக்கு கற்பித்தார். அந்தக் குலதர்மம் எப்படிப்பட்டது என்பதை, “ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றார்கள். முழம் பிள்ளையானாலும் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார் பெரியார்!” என்றும், அடுத்து, “படி தாண்டா பத்தினி என்று சொன்னார்கள். அதுதாண்டா… கூடாது என்றார் பெரியார்!” என்றும் எடுத்துக்காட்டைக்கூட நகைச்சுவையாகச் சொன்னதும், மக்களுக்குச் சொல்ல வந்த கருத்து பளிச்சென்று புரிந்துவிட்டாலும், ‘கொல்’லென்று சிரித்துவிட்டனர்.
‘‘நாம் மதங்களால் வேறுபட்டாலும்,
மனங்களால் ஒன்றுபட்டவர்கள்!”
தொடர்ந்து அரசியல் பக்கம் வந்தார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பல்வேறு துரோகங்களைச் செய்து விட்டும் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து போவதை வரவேற்றார். அத்துடன் ஒவ்வொரு வருகைக்கும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகள் கூடும் என்பதையும் சேர்த்துச் சொன்னார். ஆளுநர் செய்யும் இடையூறுகளை, “நான் படிக்க மாட்டேன் என்கிறார் ஆளுநர். இனிமேல் உங்களை படிக்கவே அழைக்க மாட்டேன் என்கிறார் நம் முதலமைச்சர்” என்று அதையும் நகைச்சுவையாகவே கூறி கடந்து சென்றார். ”ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் மதக்கலவரங்களைத் தமிழ்நாட்டில் எவ்வளவு தூண்டினாலும் அது எடு படாது” என்பதைச் சொல்லி, ‘‘நம் மக்கள் மதங்களால் வேறுபட்டாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்கள்” என்று அழுத்தந்திருத்தமாக மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே சொல்லி, “திராவிட மாடல் ஆட்சிகளால் நாம் பெற்ற கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்ணுரிமை போன்றவற்றை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால், மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும்” என்றும் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
சிவகங்கை மாவட்ட இளைஞரணித் தலைவர் ம.கார்த்தி கண்ணன், அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை முறையாக நிறைவு செய்தார். காரைக்குடி மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, பவானி கணேசன், தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் ராஜாமணி, செல்வராசன், அண்ணாதுரை, வெங்கட்ராமன், முத்துசாமி, முத்துராமலிங்கம், தி.மு.க. தமிழ் பிரியா, வேங்கை பிரபாகரன் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெருமளவில் கூடி நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
