சுயமரியாதைத் திருமண சட்டத்தை இந்திய அளவில் கொண்டு வருக! தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்!

11 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள்,
இலவச திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைத் திட்டங்களாகும்!
அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் தேவை!
நூற்றாண்டு காணும் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற தந்தை பெரியாரின் நூலினை ரூ.20 நன்கொடையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டிருப்பதை வெகு மக்களிடம் கொண்டு செல்வோம்!
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு
33% இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை உடனே செயல்படுத்துக!

தஞ்சை, பிப்.21 சுயமரியாதைத் திருமண சட்டத்தை இந்திய அளவில் கொண்டு வருக என்றும், ‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள், இலவச திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைத் திட்டங்களாகும் என்றும், அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் தேவை என்றும், நூற்றாண்டு காணும் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற தந்தை பெரியாரின் நூலினை ரூ.20 நன்கொடை யில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டிருப்பதை வெகு மக்களிடம் கொண்டு செல்வோம் என்றும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை உடனே செயல்படுதத வேண்டும் என்றும் தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தஞ்சையில் இன்று (21.2.2026) பழைய பேருந்து நிலையம் அருகில், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில், திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநில மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டிற்குத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மற்றும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் திரண்டனர். மாலையில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக மாநில மாநாடும், பேரணியும் நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

சுயமரியாதைத் திருமணச் சட்டம் –
இந்திய அளவில் நிறைவேறட்டும்!

தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட

சுயமரியாதைத் திருமணத்தின் வரலாறு நூற்றாண்டை நெருங்குகிறது. தந்தை பெரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1967-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் (இந்து திருமண (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 59 ஆண்டுகள் கழித்தும், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு வழக்குகளையும் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.

 

சுயமரியாதை இயக்கமும், சுயமரியாதைத் திருமண முறையும் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல. இந்தியா முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் செய்வதன் மூலம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, பல லட்சக்கணக்கான மதச் சார்பற்ற, ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திட இயலும். இது பிற மாநிலங்களில் வாழும் பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்களின் நெடுநாள் கோரிக்கையாகும்.

சிறப்புத் திருமணச் சட்டத்திலும் உள்ள “30 நாட்கள் முன் அறிவிப்பு” என்பன போன்ற தடைகளை நீக்கி, ஜாதி மறுப்பு, மத மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களை எளிமையாக்கிட வேண்டும் என இம் மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 2:

ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையம் அமைத்த முதலமைச்சருக்கு நன்றி!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று, ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் இம் மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி, வர்ணாசிரமத்தைக் காக்கும் செயல்கள் அனைத்தும் பெண்ணடிமைத் தனத்தைப் பாதுகாக்கும் செயல்களே ஆகும்.

தான் யாருடன் வாழ வேண்டும் என்பதை, உரிய வயது வந்த ஒரு பெண் முடிவு செய்வதைத் தடுத்து, உடலளவிலோ, மனதளவிலோ மிரட்டிப் பணியவைப்பதும், மீறி ஜாதி – மத மறுப்புத் திருமணம் செய்பவர்களைத் தாக்குவதும், படுகொலை செய்வதும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும். இப்படி மிரட்டுவோர், அதற்கு உடந்தையாக இருப்போர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வகையிலும், பிற மாநிலங்களிலும்  இதனைப் பின்பற்றும் வகையில் சட்டம் அமைய வேண்டுமெனவும் இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. ஜாதி மறுப்பு இணையர்களுக்குத் தனிப் பாதுகாப்பு வழங்கிட மாவட்டம் தோறும் “அரசுப் பாதுகாப்பு மய்யங்களை” அமைக்க வேண்டும் என்று இம் மாநாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3:

எப்ஸ்டீன் கொடூரர்கள் கூண்டில் ஏறட்டும்!

பெண்கள் என்றாலே பாலியல் பண்டம் என்று கருதும் மோசமான மனநிலை உலக அளவில் இன்னும் இருக்கிறது என்பதற்கு, அண்மையில் வெளியான கொடுமையான செய்திகள் மனித குலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சான்றுகளாகும். எப்ஸ்டீன் என்பவரும், அவருடன் இயங்கிய பல நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்களும் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற, கொடூரமான செயல்கள் நாம் இருபத்தோராம் நுற்றாண்டில் தான் இருக்கிறோமா, அல்லது காட்டுமிராண்டி காலத்தில் இருக்கிறோமா என்ற அய்யத்தைத் தோற்றுவிப்பவையாகும். பலரும் மூடிமறைக்கப் பார்க்கும் இந்த கொடூரத்தில் நனைந்த சில இரத்தக்கறை படிந்த கரங்கள் இந்தியாவிலும் இருப்பதாகப் பல செய்திகள் வருகின்றன. இது குறித்து, எவ்விதச் சார்பும் – தவிர்ப்பும் இன்றி முறையாக விசாரித்து, தொடர்புடையவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தர நீதித் துறை முன்வர வேண்டும். இதில் அரசியல் கண்ணோட்டம் இல்லை. இத்தகைய ‘மனிதக் கறி தின்னும் மிருகங்’களைச் சமூகத்தில் உலவ விடுவது, இத்தகைய செயல்களை இயல்பானதாகக் கருதச் செய்யும் (Normalise) ஆபத்து நிரம்பியதாகும்.

நமது குழந்தைகளை, வருங்காலத் தலைமுறையைக் காக்க இது அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட வேண்டும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்பதைக் கவலையுடன் இந்த மாநாடு நினைவூட்டுகிறது. உரிய கடுமையான நடவடிக்கைகளுக்கு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்றவற்றைத்
தடுக்க முயல்வோருக்குக் கண்டனம்!

தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்தில் எல்லோருக்கும் முன்னுதாரணமான மாநிலமாகும். இடஒதுக்கீடு, முன்னுரிமை, பரிசுகள், ஊக்கத் தொகைகள், சுகாதாரம்-உடல்நலப் பராமரிப்புக்கான திட்டங்கள் இவற்றின் மூலம் தான் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்முனைவு, சமூகம், அரசியல் தளங்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் முன்னணி இடம் வகிக்கிறார்கள். இந்த வளர்ச்சிகளுக்கு அடித்தளமாகும் திட்டங்களை, இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துவதும், இதன் அருமையையும், அதனால் பெற்ற பலன்களையும் அறியாத சில பெண்களைக் கொண்டே சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் இத் திட்டங்களைக் கொச்சைப்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவையாகும்.

அதையும் கடந்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதை அரசியல் காரணம் காட்டி தடுக்க முனைவோருக்கும், அதற்கெதிராக வழக்கு தொடர்ந்த பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டோரையும் இம் மாநாடு கண்டிக்கிறது. மகளிர் விடியல் பேருந்துத் திட்டம் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதாகப் பேசியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொய்யான குஜராத் மாடலைக் கட்டமைத்து அதிகாரத்திற்கு வந்தவர்களுக்கு, சமூகநீதி, பாலினநீதி இவற்றுடன் மெய்யான வளர்ச்சியைத் தந்திருக்கும் திராவிட மாடலின் வெற்றியின் சிறப்பு எத்தகையது என்பது புரியாது. ஆனால், அதைத் தடுக்க முனையும் சக்திகளை இம் மாநாடு கண்டிப்பதுடன், அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று மகளிரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

100 நாள் வேலைத் திட்டத்தைச்
சிதைக்கக் கூடாது!

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம் என்பது நெடுநாள் போராட்டம். அதையும் சாத்தியமாக்கி, கிராமப் பொருளாதாரத்திலும், கட்டமைப்பிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்தியது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் எனப்படும் 100 நாள் வேலை உறுதித் திட்டம் ஆகும். அத் திட்டத்தையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கி இருக்கிறது – மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் “விபி-ஜி ராம் ஜி” திட்டம். நாடு முழுவதும் இதற்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றாலும் மக்களின் குரலை மதிக்காத அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில அரசுக்கு நிதி நெருக்கடியைத் தந்து மறைமுகமாக இத்திட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தாமல், மீண்டும் இத்திட்டத்தின் முந்தைய முக்கியக் கூறுகள் உறுதி செய்யப்பட்டு, காந்தியார் பெயரே மீண்டும் சூட்டப்பட வேண்டும் என்று இம் மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

பெண்களுக்கு 33% அரசியல் பிரதிநிதித்துவ உடனே செயல்படுத்துக!

மகளிருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய, கலைஞர் தலைமையிலான திமுக அரசு, உள்ளாட்சிகளில் 33% இடஒதுக்கீட்டை வழங்கியது; அதை 50% ஆக உயர்த்தி நடைமுறையில் சாத்தியப்படுத்தி முன்னுதாரணமாக விளங்குகிறது – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. ஆனால், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்ட 106-ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எந்தக் கால வரையறையும் நிர்ணயிக்கப்படாததால் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

திராவிடர் கழகம்

மாறாக, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு செய்யப்படும் என்று அதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை என்னும் பெயரில் தமிழ்நாடு உள்பட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்களின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சூழலில், அதை ஒரு காரணமாகக் காட்டி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கிட்டைத் தள்ளிப் போடக் கூடாது; உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இம் மாநாடு கவனமாகாச் சுட்டிக்காட்டி வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க!

குடும்பம், பணியிடம், பொது இடங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு வெளிவந்த 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின் படி, ஒப்பீட்டளவில் பெண்களுக்கு எதிரான மிகக் குறைவான குற்றங்கள் பதிவாகியிருப்பது சென்னை, கோவை நகரங்களில் தான்! இது இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது என்பதற்கான சான்று ஆகும். ஆனால், நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. டெல்லியில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், இந்திய அளவில் ஒரு நாளைக்கு சராசரியாக 86 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக 2022-ஆம் ஆண்டின் விவரங்கள் சொல்லுகின்றன. 2018-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 13% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகியுள்ளன.

இத்தகைய குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் அரசுக்கும், சமூகத்திற்கும், பெற்றோருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதைக் கவலையோடு இந்த மாநாடு சுட்டிக்காட்டுகிறது. பெண்களுக்கான உரிமைகளை வழங்கி, பொருளாதார, சமூக அளவில் அவர்களை உயர்த்துவதன் மூலம் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெண்கள் அடைவார்கள்.

சாஸ்திர, சம்பிரதாய, கலாச்சாரங்களின் பெயரால் கட்டுப்பெட்டித் தனமாகப் பெண்களை வளர்க்காமல், ஆதிக்கச் சிந்தனையுடன் ஆண் பிள்ளைகளை வளர்க்காமல், சமத்துவ உணர்வூட்டி வளர்க்க வேண்டும். ‘நாரி சக்தி’ என்று சமஸ்கிருதத்தில் உரக்க முழங்குவதால் மட்டும் பெண்களுக்குப் பயன் இல்லை; பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டைப் பின்பற்றி பிற மாநிலங்களும், ஒன்றிய அரசும் மகளிர் உரிமையை, பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரவேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8:

மகளிரையும் அர்ச்சகர் ஆக்குக!

வர்ணாசிரம  – ஜாதி என்னும் பிறவி பேதத்தை ஒழிப்பதற்காகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்று தந்தை பெரியார் போராடினார். தன் வாழ்நாளின் இறுதிக்கட்டம் வரை தந்தை பெரியார் நடத்திய இப் போராட்டத்தின் வெற்றியை, அவர் காலத்திலேயே வழங்கி விட முடியவில்லை என்று கவலை கொண்டு தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர், “தந்தை பெரியாரை நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்து விட்டோம்” என்று வருந்தினார். அந்த வருத்தத்தை போக்க அவர் முன்னெடுத்த சட்ட முயற்சிகளை, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகி நிறைவு செய்தார். இன்று ஒடுக்கப்பட்டோர் முதல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் பெற்று, கோயில் குடமுழுக்குகளையும் நடத்தி ஈராயிரம் ஆண்டுகால அநீதி முறியடிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் ஓதுவாராக நியமிக்கப்பட்ட புரட்சியும் இந்த ஆட்சியில் தான் சாத்தியமாகியுள்ளது.

பிறவி பேதத்தின் ஒரு பகுதி வர்ணாசிரம ஜாதி முறை என்றால், மற்றொரு பெரும் பகுதி ஆண் உயர்வு – பெண் தாழ்வு என்ற பாலினப் பாகுபாடு ஆகும். பெண்கள் தங்கள் பாலினத்தின் அடிப்படையிலேயே கோயில் கருவறைக்குள் அனுமதி மறுக்கப்படுகின்றனர். உயிரினத்தின் இயல்பான மாதவிடாயை அசுத்தம், தீட்டு என்று காரணம் காட்டி, கருவறைக்குள் நுழைந்து அர்ச்சனை செய்யும் உரிமையைத் தடுத்து வருகிறது சனாதனம். சுகாதாரமான வழிகள் வந்தபின்னும் இதையே காரணம் காட்டி பெண்களை இழிவானவர்களாகச் சித்தரிப்பதை இனியும் ஏற்க முடியாது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிய சாதனை போலவே, கடவுள் நம்பிக்கை உள்ள பெண்கள் உள்பட அனைத்துப் பாலினத்தவரும் முறைப்படி ஆகமம் பயின்று அர்ச்சகர் ஆக முடியும் என்ற நிலைமையை உருவாக்குவதே நாகரிக சமூகத்தில் பிறவி பேதத்தை ஒழித்ததன் அடையாளமாகும். அதனை நோக்கி அரசும் சமூகமும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

தீர்மானம் எண்: 9

நூற்றாண்டு காணும் பெண்ணுரிமைச் சாசனம் – ‘பெண் ஏன் அடிமையானாள்?’

தந்தை பெரியார் தந்த பெண்ணுரிமைச் சாசனமாம் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரைகளுள் முதலாவதாக எழுதப்பட்டது ‘விதவா விவாகம்’ என்ற கட்டுரையாகும். 1926 ஆகஸ்ட் 22 அன்று குடிஅரசு ஏட்டில் வெளியான இந்தக் கட்டுரையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான 9 கட்டுரைகளும் சேர்த்து, மொத்தம் 10 கட்டுரைகள் அடங்கிய “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகம், தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு நூல்பதிப்புக் கழகத்தாரால் 1933-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்றும், என்றும் பெண்ணுரிமையின் அடிப்படைகளை விளக்கும் – கேள்வி எழுப்பும் – கனன்றெழச் செய்யும் இந்தப் புத்தகத்தின் பல லட்சக் கணக்கான பிரதிகள் தமிழ்நாட்டில் போய்ச் சேர்ந்துள்ளன. ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சியில்,  21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த நூற்றாண்டில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 50-ஆம் சிறப்புப் பதிப்பாக 20 ரூபாய் நன்கொகொடையில் வெளிவந்துள்ளது மிகவும் பொருத்தமானதாகும். இப் பெரு வாய்ப்பையும், வரலாற்றுச் சூழலையும் பயன்படுத்தி, திராவிடர் கழக மகளிரணியும், திராவிட மகளிர் பாசறையும் இப் புத்தகம் தொடர்பான கருத்தரங்குகள், போட்டிகள், கலந்துரையாடல்களை நாடெங்கும் நடத்தி, பல லட்சக்கணக்கான பிரதிகளை  கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க உழைப்பதென்றும் இம் மாநாடு உறுதி பூணுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *