இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்திய ‘செயற்கை நுண்ணறிவு மாநாடு!’

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லியில் (19.2.2026) துவங்கிய உலகலாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு இந்தியாவிற்கு உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துவிட்டது.

குறிப்பாக, ஜெப்ரி எப்ஸ்டீனோடு ஒன்றிய அமைச்சர் மற்றும் பிரதமருக்கு இருந்த தொடர்பு மற்றும் டொனால்ட் டிரம்பின் தொடர் மிரட்டல் போன்றவற்றில் இருந்து இந்திய மக்களின் கவனத்தைத் திசை திருப்பிட  பிரதமர் மோடி எடுத்த முயற்சி – இம்மாநாட்டின் குளறுபடியால் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு போதிய திட்டமிடல் இல்லாததாலும், விளம்பர மோகத்தினாலும் பெரும் குளறுபடிகளையும், மதிப்புக் குறைவையும் தேடித் தந்து விட்டது. ஒன்றிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவே தானே முன்வந்து மன்னிப்பு கேட்கும் அளவிற்குச் சென்றுவிட்டது.

மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோது, பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அரங்கிற்குள் இருந்த நூற்றுக்கணக்கான நிறுவன அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் திடீரென வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் வெளிநாட்டுத் தலைவர்களும், முன்னணி நிறுவனங் களின் சிஇஓ-க்களும் தங்களின் இருக்கைகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இது ‘விருந்தினர்களான அவர்களை அவமதிக்கும் செயல்’ என்று விமர்சிக்கப்பட்டது.

‘அதிநவீன தொழில்நுட்ப மாநாடு’ என்று கூறப்பட்ட போதிலும், அங்கு பாதுகாப்பில் பெரும் குறைபாடுகள் இருந்தன. ‘‘பிரதமர் வருகிறார்’’ என்று உடனடியாக வெளியேற்றப்பட்டவர்கள், தங்களில் விலை உயர்ந்த லேப்டாப், அலைப்பேசி, இதர பொருட்களை வெளியே கொண்டு செல்ல வாய்ப்புத் தரவில்லை. பிரதமர் வந்து சென்ற பிறகு உள்ளே சென்றவர்களின் உடைமைகள் களவாடப்பட்டிருந்தன.

பன்னாட்டுப் பிரதிநிதிகள் தங்கியிருந்த மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளில் முறையான கண்காணிப்பு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட வெளிநாட்டு விருந்தினர்கள் மிரட்டப்பட்டனர்.

‘செயற்கை நுண்ணறிவு’  குறித்து விவாதிக்கும் ஒரு மாநாட்டில், அடிப்படைத் தேவையான அதிவேக இணைய இணைப்பு (High-speed Wi-Fi) இல்லாதது மிகப்பெரிய ‘நகைமுரணாக’ அமைந்தது.

‘நேரடிச் செய்முறை விளக்கங்கள்’ காட்ட முயன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைய வேகம் குறைவால் திணறினர். ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழங்கும் அரசு, ஒரு பன்னாட்டு மாநாட்டில் தரமான இணையத்தை வழங்கத் தவறியது  பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

மாநாட்டு அரங்கம் மிகப்பெரியதாக இருந்தபோதிலும், அங்குச் சரியான திசைக் காட்டிகளோ அல்லது வழிகாட்டிகளோ இல்லை. வெளிநாட்டு விருந்தினர்கள் எந்த அரங்குக்குச் செல்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். முறைப்படுத்தப்படாத பதிவுகளால் நுழைவு வாயில்களில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரதிநிதிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

டில்லியின் மிக மோசமான காற்று மாசினால் மாநாட்டுக்கு வந்திருந்த பல வெளிநாட்டுத் தலைவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற சங்கடங்கள் ஏற்பட்டன. அரங்கிற்குள் நுழையும் போது நிலவிய நச்சுப்புகை, ‘இந்தியாவின் தலைநகர் ஒரு பன்னாட்டு நிகழ்வை நடத்தத் தகுதியுள்ள சூழலில் இருக்கிறதா?’ என்ற கேள்வியையும் பன்னாட்டு அரங்கில் எழுப்பியது.

ஒன்றிய அரசு இந்த மாநாட்டை ஒரு மாபெரும் வெற்றி யாகக் காட்டிக் கொள்ள பல கோடி ரூபாயைச் செலவிட்டு விளம் பரங்களைச் செய்தது. ஆனால், நிலைமையோ தலைக்கீழாகி விட்டது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை விட, பிரதமரின் உருவப்படம் பொறித்த பதாகைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொழில்நுட்ப ஆலோசனைகளை விட, அரசின் அரசியல் பிரச்சார மேடையாகவே இந்த மாநாடு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

இதுபோன்ற பன்னாட்டு நிகழ்வுகளை நடத்தும்போது வெறும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் விருந்தினர் மேலாண்மை ஆகியவற்றில் முறையான திட்டமிடல் அவசியம்.  ஆனால் பாஜகவின் கட்சி நிகழ்வு போல் பன்னாட்டு மாநாட்டை நடத்தியதால்  உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

இதன் எதிரொலியாக  விருந்தினர்கள் ஒன்றாக இருந்து படம் எடுக்கும் போது சில பன்னாட்டு நிறுவன தலைமை அதிகாரிகள் மோடியோடு கைகுலுக்கவும் குழுப் படத்தில் ஒன்றாக நிற்பதையும் தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓர் இயந்திர நாயை (Robo dog) காட்சிப்படுத்தியது. அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நேஹா சிங், ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஓரியன்’ (Orion) எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோவை தங்கள் பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (Centre of Excellence) உருவாக்கியதாகத் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த காணொலி பரவியதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த ரோபோ சீனாவைச் சேர்ந்த ‘யூனிட்ரீ’ (Unitree Go2) என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.

இது வணிக ரீதியாக சந்தையில் சுமார் $2,800 (சுமார் ரூ.2.5 லட்சம்) விலையில் விற்கப்படும் ஒரு தயாரிப்பாகும்.

பல்கலைக்கழகம் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பைத் தங்களது ‘மேக் இன் இந்தியா’ கண்டுபிடிப்பு போலக் காட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தத் தவறான தகவலால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தை மாநாட்டிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் அரங்கை காலிசெய்துவிட்டுச் சென்றனர். பன்னாட்டுக் கண்காட்சி அரங்கில் மிகபெரிய காட்சி அரங்கம் காலியாக உள்ளது பேசு பொருளாகியது. அதுவே இந்த மோசடி மேலும் அதிக அளவில் மக்களைச் சென்றடையக் காரணமாக ஆகியுள்ளது.

ஒரு பன்னாட்டு நிகழ்ச்சியை – அதுவும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்துவதற்கே தகுதியில்லாத ‘நிர்வாகத் திறன் இல்லாத அரசுதான்’ ஒன்றிய பிஜேபி அரசு என்பது உலக அரங்கிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு விட்டது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *