மனுதர்மத்தினைக் காட்டி மன்னர்களையே மதியிழக்கச் செய்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தந்திரமாக நான்கு வருணங்களையே நாட்டின் சட்டங்களாக்கி விட்டனர். “ப்ருகு ஸம்ஹிதை” என்ற மாற்றுப் பெயரால் அழைக்கப்படும் ‘மனுஸ்மிருதி’ தோன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. பார்ப்பனர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்தது இந்த நூல்தான்.
நான்கு வருணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறினால் முதல் மூன்று வருணங்களுக்குத்தான் மனுதர்மம் முக்கியத்துவம் கொடுக்கிறது. பூமியில் உள்ள அனைத்து செல்வங்களும் பார்ப்பனர்களுக்கே உரியது. யாரிடமும் அனுமதியின்றி அவர்கள் அந்தப் பொருள்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று கூறும் மனுதர்மம் “சூத்திரனை” தரம் தாழ்ந்த நிலையிலேயே வைக்கிறது. ‘சூத்திரன்’ ஒருபோதும் அறிவைப் பெறக் கூடாது என்று மிகவும் கண்டிப்புடன் மனுதர்மம் கூறுகிறது.
நாராயண குரு

அவர்களுக்குக் கீழ் உள்ள ‘பஞ்சமர்’களை மிருகங்களை விடக் கேவலமாக மனுதர்மம் சித்தரிக்கிறது. ‘சண்டாளர்’களும், ‘சவபசனும்’ (செத்த நாயைப் புசிப்பவன்) கிராமத்திற்கு வெளியே வசிக்க வேண்டும். உடைந்த மண்பாண்டங்களைத்தான் அவர்கள் பயன்படுத்தலாம். நாயையும், கழுதையையும் மட்டும்தான் அவர்கள் வளர்க்கலாம். மிருகத்தின் தோலைத்தான் ஆடையாக அணியலாம். சமைத்த உணவை மண் தட்டுகளில்தான் வைத்து உண்ண வேண்டும். உலோகப் பொருள்கள் எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. தொழிலுக்காக நாடோடியாகத் திரிய வேண்டும்.
மூவர்ணத்தைச் சேர்ந்த மேல் ஜாதிக்காரர்கள் செய்யும் தர்ம காரியங்களைப் பார்க்கக் கூடாது. இரவு நேரங்களில் ஊருக்குள் நடமாடக் கூடாது. அவர்களுக்கு அரசர் அடையாள அட்டை வழங்குவார். பகல் வேளைகளில் ஏதேனும் பொருள் வாங்க ஊருக்குள் வரும்பொழுது அந்த அடையாள அட்டையைக் கழுத்தில் அணிந்து வரவேண்டும். நம்பூதிரிப் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நிலைநாட்டியதும் மனுவின் சட்டங்களையே நாட்டின் சட்டங்களாக்கி விட்டனர்.
வருணக் கடமைகளைப் பின்பற்றுவதே புண்ணியமாகும். அதைப் பின்பற்றாமல் விட்டால் அது பெரும் பாவமாகும். புண்ணிய, பாவங்களே மனிதர்களின் வினைப் பயனாகும். அது இந்தப் பிறவியில் மட்டுமின்றி அடுத்தடுத்தப் பிறவிகளிலும் எதிரொலிக்கும். ஒருவன் அரசியின் வயிற்றிலும், மற்றொருவன் நாயின் வயிற்றில் பிறப்பதற்கும் இந்தக் ‘கர்ம பலனே’ காரணமாகும். பார்ப்பனர்கள் வேதங்களை ஓதுவதை சூத்திரர்களும், பஞ்சமர்களான சண்டாளர்களும் கேட்கக் கூடாது. தப்பித் தவறி பார்ப்பான் வேதம் ஓதுவதைக் கேட்டுவிட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
சூத்திரன் வேதம் ஓதினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். வேதத்தை சூத்திரன் மனப்பாடம் செய்து கூறினால் அவன் தலையை வெட்ட வேண்டும். (இராமயணத்தில் பார்ப்பனர் பேச்சைக் கேட்டு, சம்பூகன் வேதம் ஓதிய காரணத்தாலும், தலைகீழாகத் தொங்கி தவம் செய்ததால் இராமனால் தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டது இந்த மனுவின் சட்டத்தால்தான்!)
மூவர்ணத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த விருந்தோம்பல் பண்புடன் பார்ப்பனர்களை உபசரிக்க வேண்டும். தவறினால் அவர்கள் அத்தனைக் காலமும் சேர்த்து வைத்த புண்ணியம் முழுவதும் தொலைந்து போய்விடும்.
பார்ப்பானை அடிக்கக் கை ஓங்கியவன் நூறு ஆண்டும், அடித்தவன் ஆயிரம் ஆண்டும் நரகத்தில் இருந்து கொடுமைகளை அனுபவிப்பான். ஒரு சூத்திரன், இன்னொரு சூத்திரனைக் கொன்றால், அந்தப் பாவம் போக பார்ப்பானுக்கு பத்து பசுக்களை கொடையாகக் கொடுக்க வேண்டும். பார்ப்பான் குற்றமிழைத்தால், அது கொலைக் குற்றமாகவே இருந்தாலும் அவனுக்கு ‘முண்டிதம்’ (மொட்டை அடித்தலே) தண்டனை. அதுவே சூத்திரன் செய்தால் அவனுக்குக் கொலை தண்டனை கொடுக்க வேண்டும்.
இப்படியெல்லாம் ‘மனுதர்மம்’ கூறுவதை அரசனிடம் கூறி நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அதையே ஜாதியச் சட்டங்களாக்கி நாட்டில் நிலைநாட்டி விட்டனர். மேல் ஜாதிக்காரர்களை ‘ஸ்வர்ணஸ்தர்’கள் என்றும், கீழ்ஜாதியர்களை ‘அவர்ணஸ்த்தர்கள்’ என்ற பாகுபாடுகளை மக்களிடையே திணித்தனர். தொழில்களோடு, ஜாதிகளை ஒருங்கிணைக்கும் சதியை பார்ப்பனர்கள் வெற்றிகரமாக நிலைநாட்டினர்.
(சான்று: “கேரளத்தின் பண்பாட்டு வரலாறு”
– பி.கே.பாலகிருஷ்ணன்)
மனுஸ்மிருதியில் எழுதியுள்ளபடி சூத்திரர்களுக்குக் கல்வி உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டது. பெண்களின் கல்விக்கும் இதை நிலைதான். உடல் உழைப்பைக் கொடுக்கும் மக்கள் இழிந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். உயர்ஜாதிப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுமே எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு கீழ்ஜாதிப் பெண்களின் மீது பாலியல் உரிமை உண்டு. மறுக்கின்ற பெண்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.
‘அறுபத்தி நான்கு ஆசாரங்கள்’ என்ற பெயரில் தமது ஆசாரங்களை சமூகத்தின் மீது பரவலாகத் திணித்து, அதன் மூலம் சமூகத்தின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டனர். கோயில்கள் தொடர்பான அனைத்தும் நம்பூதிரிப் பார்ப்பனர்களின் தனிப்பட்ட சொத்துகள் போன்றாகி விட்டன. ஜாதி வேற்றுமை பெண்கள் பொறுத்து கடைபிடிக்கப்படவில்லை.
அழகிய பெண்கள், கீழ்ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை ‘தேவதாசிகள்’ என்ற பெயரில் கோயில் பணிக்கு அனுப்பியே தீர வேண்டும். இந்த தேவதாசிகள் கோயில் அர்ச்சக நம்பூதிரிப் பார்ப்பனர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு எல்லா நேரத்திலும் ஆளாக வேண்டிய கொடுமை பரவலாக நடந்தது. பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்பட்டனர். நம்பூதிரிகள் கொலை செய்தால் கூட தண்டனை கிடையாது. எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு சிறிய தண்டனையே கொடுக்கப்பட்டது. அதே நேரம் கீழ் ஜாதியினர் சிறிய குற்றம் இழைத்தாலும்கூட மரண தண்டனை வரை கொடுக்கப்பட்டது.
திருவாங்கூர் நாட்டில் நம்பூதிரிப் பார்ப்பனர்களும், சூத்திர நாயர்களும் மட்டுமே ஸ்வர்ணத்ததவராகக் கருதப்பட்டனர். நாயர்கள், சூத்திரர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களின் கலப்பால் ஸ்வர்ணர்களாக்கப்பட்டனர். அந்த நாட்டில் வைசியர்கள் கிடையாது. ஈழவர், அரையா, ஆசாரி, தட்டான், கொல்லன், செக்கோட்டி, வண்ணான், நாவிதன், பறையன், புலயன் போன்றவர்கள் அவர்ணஸ்தர்கள் என்று பாகுபாடு நிலையில் வைக்கப்பட்டனர்.
படிநிலைச் ஜாதி அமைப்பு அந்த நாட்டில் கடுமையாகப் பின்பற்றப் பட்டது. வர்ணஸ்தர்களும், அவர்ணஸ்தர்களும் இந்துக்களே என்ற பொழுதும், காணாமை, தீண்டாமை, கல்லாமை போன்ற ஜாதியக் கட்டுப்பாடுகள் அவர்ணஸ்தர்கள் மேல் திணிக்கப்பட்டது. காணாமையை “தீண்டல்” என்றும், தொடாமையை ‘தொடீல்’ என்றும் அழைக்கப்பட்டது. தீண்டல் என்று கூறுவது மேல்ஜாதி நம்பூதிரிப் பார்ப்பானிடமிருந்தும், சூத்திர நாயர்களிடமிருந்து அவர்ணஸ்தர்கள் விலகி நிற்கும் தூரத்தைக் குறிப்பது. அந்த இடைவெளியைக் கீழ்ஜாதிக்காரன் மீறினால் மேல்ஜாதிக்காரன் அசுத்தமாகி விடுவானாம். அதனால் கட்டுப்பாட்டை மீறிய அவர்ணஸ்தன் கடுமையாக தண்டிக்கப்பட்டான். தொடீல் என்பதும் அவர்ணஸ்தன் கை, வர்ணஸ்தான் மேல்படுவது (தீண்டாமை), இதற்கு மரண தண்டனை கூட கொடுக்கப்பட்டது.
‘தீண்டல்’ நிகழ்வால் ஏற்பட்ட அசுத்தத்தைப் போக்க மேல்ஜாதிக்காரன் குளித்து விட்டுத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். இதற்குத் ‘தீண்டுக்குளி’ என்று பெயர். (தொடுவதால்) ‘தொடீல்’லால் ஏற்படும் அசுத்தத்தைப் போக்கக் குளிப்பதற்கு ‘தொட்டுக்குளி’ என்று பெயர். தீண்டல், தொடீல் ஆகியவற்றிற்கு ஆளான நம்பூதிரியை அவர் உறவினர் யாரும் தொட்டுவிட்டால் அவர்களும் அசுத்தமாகி விடுவர்.
சத்திரியன், (அரசனும், அவன் குடும்பத்தினரும்), நம்பூதிரிப் பார்ப்பனர்களிடமிருந்து நாயர் ஆகியோர் 16 அடியும், ஈழவன் 32 அடியும், புலயன் 64 அடியும் தள்ளி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து ஈழவன் 16 அடியும், புலயன் 32 அடியும் விலகி நிற்க வேண்டும். மலை ஜாதியினர் பார்வையில் நம்பூதிரிப் பார்ப்பான் பட்டாலே, பார்ப்பான் அசுத்தமாகி விடுவான்.
உறவினனுக்கு ஏற்பட்ட அசுத்தத்திற்கு ‘கூட்டித் தொடல்’ என்று பெயர். அசுத்தம் போக்காமல் நம்பூதிரி தவறி வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அந்த தரவாடே (வீடே) அசுத்தமாகி விடும். அந்த அசுத்தம் போக்க ‘புண்ணிய யாகம்’ செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வீடு சுத்தமடையும்.
ஒரு நம்பூதிரி குளத்திலோ, புழாவிலோ (ஆற்றிலோ) குளிக்கும்பொழுது அவர்ணஸ்தன் போகக் கூடாது. தரவாட்டில் அவர்ணஸ்தன் வேலைக்குப் போகும்பொழுது, ‘தீண்டப்பாடு’ (தூரக் கட்டுப்பாடு) தூரத்தில் மண்ணையும், சிறிது பச்சிலையும் குவித்து வைக்க வேண்டும். அதைப் பார்த்து மேல் ஜாதிக்காரன் விலகிப் போய்விடுவான்.
இயல்பு வாழ்க்கையில் நம்பூதிரி வெளியே செல்லும்போது அவனுக்கு முன்பு நாயர் முன் சென்று, ‘தீண்டாட’ வேண்டும். நாயர் முன் சென்று ராகத்தோடு ‘ஹோ’ என்று கூற வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்டதும் ஈழவனும், புலயனும், மற்ற அவர்ணஸ்தனும் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும்.
இதை ‘தீண்டாடுதல்’ என்று கூறினர். ஆண் துணையோ, தாசியோ இன்றி அந்தர் ஜனம் வெளியே போகக் கூடாது. ஒரு வண்ணான் எங்காவது பதுங்கி இருந்து, “பார்த்தேன், பார்த்தேன்” என்று கூக்கிரலிட வேண்டும். அவனை ‘பிரஷ்டம்’ (ஜாதி விலக்கம்) செய்து விடுவார்கள்.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாது ஜாதியக் கொடுமைகள் திருவாங்கூர் நாட்டில் மக்கள் (90 சதம்) மேல் நடத்தப்பட்டது. இதில் நாட்டில் 20 சதம் மக்களாக இருந்த ஈழவ மக்களும், அதற்கு அடுத்த பெரும்பான்மையாக இருந்த புலயர்களும், பறையர்களும் பாதிக்கப்பட்டனர்.
(சான்று: ‘அன்றைய கேரளம்’ – இளம்குளம் பி.என்.குஞ்ஞன் பிள்ளை, “மகாத்மா அய்யன்காளி” நிர்மால்யா, ta.m.vikipedia.org.)
(- தொடருவேன்…)
