ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி
பேரவையில் வெளியான அடுத்த அறிவிப்பு
சென்னை, பிப்.20 மகளிருக்கு ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அண்மையில் ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத உரிமைத் தொகை 3 ஆயிரம் மற்றும் கோடை கால சிறப்பு நிதி 2 ஆயிரம் என மொத்தம் அய்ந்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இதனை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான கருத்தை சொல்லி மகளிர் வங்கி கணக்கில் அய்ந்தாயிரம் வரவு வைக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினார். தேர்தல் நெருங்கும் சூழலில் அய்ந்தாயிரம் ரூபாய் வரவு வைத்ததை அரசியல் பயத்தின் பிம்பமாக பார்ப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால சிறப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கோடைக்காலம் வர உள்ளதால், வெயில் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுக்கு இந்த நிதி உதவும் எனவும் கீதா ஜீவன் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம் வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை, பிப்.20 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்துக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ சட்டப் பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சிவஞானசம்பந்தன் தாக்கல் செய்திருந்த மனுவில், “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், ஏழை, எளியோருக்கு 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒன்றிய அரசு திடீரென இந்த சட்டத்தை மாற்றியமைத்து, ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என பெயர் மாற்றம் செய்துள்ளது.
ஏற்கெனவே இருந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 90 சதவீத நிதியையும், மாநில அரசு 10 சதவீத நிதியையும் பங்களிப்பாக வழங்கி வந்தன. ஆனால் புதிய சட்டப்படி வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் 40 சதவீத நிதியை பங்களிப்பு நிதியாக வழங்க வேண்டும். மேலும், புதிய சட்டத்தில் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்களுக்கான அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது. எங்கு பணி செய்ய வேண்டுமென்பதை ஒன்றிய அரசுதான் அறிவிக்கும் என்பதால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே இந்த புதிய சட்டத்தில் உள்ள 8 பிரிவுகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதால் அவற்றை செல்லாது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்க அவகாசம் வழங்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.
மூடநம்பிக்கையின் விபரீதம்!
பாட்டிக்கு திதி கொடுக்க ஆமைகள் பலி
ஆமைக்கறியை படையலிட முயன்ற 4 பேர் கைது!
பெங்களூரு, பிப்.20 மறைந்த பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக ஆமை களை வேட்டையாடி சமைக்க முயன்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்தங்கடி பகுதியைச் சேர்ந்த தேவம்மா என்ற முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருக்குத் திதி கொடுக்கும் சடங்கிற்காக அவரது பேரன்மார்கள் உட்பட நான்கு பேர் சோமாவதி ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளனர். தங்கள் பாட்டிக்கு ஆமைக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்குப் பிடித்த உணவைப் படையலிட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையும் என அவர்கள் நம்பியுள் ளனர். இதற்காக ஆற்றில் இருந்த 4 ஆமைகளை அவர்கள் வேட்டையாடியுள்ளனர்.
ஆமைகளை வேட்டையாடி, அவற்றை தீயில் வாட்டி சமையல் செய்யத் தயாரான போது, அங்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் பாட்டிக்குத் திதி கொடுக்கவே இந்த விநோத முயற்சியில் ஈடு பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். வேட்டையாடப்பட்ட ஆமைகளுடன் நான்கு பேரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வனத்துறை ஒப்படைப்பு
ஆமைகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதால், பெல் தங்கடி காவல்துறையினர் அவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வழக்குப்பதிவு
வனத்துறையினர் அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
