சென்னை, பிப்.20 எழும்பூரில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகத்தின் பழமையான கட்டடம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.2.2026) திறந்து வைத்தார்.
இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக் குறிப்பு:
ஆவண காப்பக கட்டடம்
உயர்கல்வித் துறையின் கீழ் செயல் பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை, தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிர்வாகம் சார்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வரும் தனது சேவையில் நூறு ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த 1909-ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டு, 1973-இல் ‘தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி ஆவணக் காப்பகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 2009-ஆம் ஆண்டு தனது 100-ஆவது ஆண்டை நிறைவு செய்தது.
சுமார் 40 கோடி ஆவணங்களைக் கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சி யாளர்களின் மிகச்சிறந்த தேடல் களமாக உள்ளது. இந்நிலையில், ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் பழமையான தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (19.2.2026) திறந்து வைத்தார்.
அத்துடன், ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 100 ஆண்டுகள் பழமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ‘ஜப்பானிய திசு’ (Japanese Tissue paper) முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன கண்காட்சிக் கூடத்தில் பின்வரும் அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கி லிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம்.’மெட்ராஸ் ராஜதானி’, ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம்.சென்னையை ‘எம்டன்’ கப்பல் தாக்கியது குறித்த ஆவணம்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, உயர்கல்வித் துறைச் செயலர் பொ. சங்கர், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் சு. மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
