முனைவர் க. அன்பழகன்
சென்னை பெரியார் திடலில், நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்தான சூழல் ஏற்படும் போதெல்லாம் எத்தனையோ கண்டனக் கூட்டங்கள், அறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கங்கள், கருத்தரங்கங்கள், ஆய்வுச் சொற்பொழிவுகள், தொடர் சொற்பொழிவுகள், போராட்ட விளக்கக் கூட்டங்கள், மாநாடுகள் நடந்துள்ளன. அனைத்தும் எதிர்பார்த்தவெற்றியைப் பெற்று வரலாறு படைத்துள்ளன.
இந்திய ஒன்றியத்தை ஆளும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அரசியல் கட்சி பா.ஜ.க., நாட்டிற்கே தெரியாமல் – நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்காமல் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளது. இது ஒரு மரபு மீறிய செயல்.
அதுதான் ‘வந்தே மாதரம்’ எனும் பாடலை தேசியப் பாடல் என்றும், ‘‘கல்வி நிலையங்கள், அரசு நிகழ்வுகள் அனைத்திலும் நாட்டுப் பண்ணுக்கு முன்பு பாட வேண்டும். அத்தருணம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்’’ என்ற ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆபத்தான ஆணையாகும்.
‘ஒரு பாட்டுக்கா இந்த கண்டனக் கூட்டம்?’ என்று சிலர் நினைக்கலாம். இது வெறும் பாட்டு அல்ல. நாட்டின் மக்கள் ஒற்றுமைக்கும் வைக்கும் வேட்டு! பிற மதத்தவர்களை நோக்கி வெறுப்பு கொண்டு வீசப்படும் வெடிகுண்டு!
எனவேதான் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் சதிச்செயலுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பவும், ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும்என்ற நிலையில் இருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு பின் வாங்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டம்.
‘‘மதச் சார்பின்மையைக் குழி தோண்டிப் புதைப்பதா – மதவெறிப் பாடலான ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலா?’’ என்ற தலைப்பில் 18.2.2026 அன்று மாலை 7 மணியளவில் சென்னை பெரியார் திடல் – நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது.
கண்டனக் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் –தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்றிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன், பேராசிரியர் ஹாஜா கனி, இந்திய (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைச்சர் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாகத் தலைமை உரையைத் திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றினார்கள்.
கண்டனக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்கள் கூர்த்த மதியுடை கொள்கையாளர்களாகவும் நாட்டில் அமைதியை விரும்பும் பண்பாளர்களாகவும், பா.ஜ.க. எனும் பாசிச அமைப்பின் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற விரும்பும் மனித நேயர்களாகவும் விளங்கிடும் பெரு மக்களாவார்கள். ஒரிரு நாட்கள் இடைவெளியில் செய்தி அறிந்து வெகு ஆர்வத்துடன் வருகை தந்து செவி மடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பல்துறையைச் சேர்ந்த பெரு மக்களும், சமூகப் பற்றோடு, மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் படைக்குத் தோள் கொடுக்கும் அறிஞர் பெரு மக்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் எம்.ஆர்.ராதா மன்றத்தில் அமர்ந்து செவி மடுத்தனர். இடையிடையே கரவொலி மூலம் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு தங்களின் கண்டனத்தை – எதிர்ப்பைக் காட்டினர்.
கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பா.ஜ.க. ஆட்சியின் தொடர் நடவடிக்கைகளும் – ‘வந்தே மாதரம்’ பாடல்பாட வேண்டும் என்ற ஆணையும் ‘இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்க முயற்சிக்கும் ஏற்பாடு’ என்று எச்சரித்தார். சிறுபான்மை மக்களுக்குரிய உரிமையை அழிப்பது என்று தனது உரையில் கூறினார்.
இந்திய கம்யூனிட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் தனது கண்டன உரையில், ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தீவிரம் காட்டும் செயல் இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் ஆகும். மேலும், இது இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மைக்கு உலை வைக்கும் என்று சீறினார்.
‘‘இப்பாடல் முஸ்லீம்களுக்கு எதிரானது. அவர்களை அழிப்பதற்கான யுக்தியாகும். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து – ஒழிந்து என்று இருந்த மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களின் பாடல் வரிகளை நீக்கிய நயத்தகு நாகரிகத்தைக் குறிப்பிட்டு, பா.ஜ.க. ஆட்சி வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடச் செய்வதன் மூலம் இஸ்லாமியர்க்கு ஏற்படும் இழிவினை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஹாஜா கனி எடுத்துரைத்தார்.
சி.பி.அய்.எம். அமைப்பின் சட்டப் பேரவை உறுப்பினர் நாகை மாலி தனது உரையில், ‘பெரியார் திடலில் தனது பொது வாழ்க்கையில் இன்றுதான் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இவ்வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி’ கூறி, வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும் என்று பா.ஜ.க. ஆணையிடுவது பாசிசத்தின் மறுவடிவம் என்றதோடு, இது பாசிசத்தின் இந்திய வடிவம் என்று கடுமையாக விமர்சித்தார்.
‘‘பெரியார் திடலில் நடைபெறும் கூட்டங்கள் தேசிய அளவில் மாற்றத்தினைக் கொண்டு வரும் சட்டங்கள் ஆகும்’’ என்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். மேலும், ‘‘அய்யா வீரமணி அவர் களுக்கு தவறான கொள்கைகள் எதுவானாலும் அதனை தடுத்திடும் வல்லமை உண்டென்று’’ என்று கூறினார்.
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’’ விருது பெற்ற பெருமகன் காதர்மொகிதீன் அவர்கள் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவரைப் பாராட்டிய பாங்கு பாராட்டுக்குரியதாகும். மேலும், உரைக் கும்போது ‘வந்தே மாதரம்’ பாடல் திணிப்பு, ‘இந்துத்துவா திணிப்பு’ என்றார்.
‘‘இராமன் கோயில் பிரச்சாரத்தில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதே இடத்தில் இராமன் கோயில் கட்டினர். முடிவில் அயோத்தி தொகுதிக்கான தேர்தலிலேயே பா.ஜ.க. தோற்றது. அதேபோல்தான் ‘வந்தே மாதரம்’ பாடலைத் திணிக்க முயலும் பா.ஜ.க. தேர்தலில் தோற்பது உறுதி’’ என்று பேசினார் தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி.
நிறைவுயாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடுக்கடுக்காக கருத்துகளை ஆதாரங்களுடன் கொட்டினார்.
‘வந்தே மாதரம்’ பாடல் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு விழாக்களில் பாடப்பட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் பச்சை திணிப்பு முயற்சியாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணாகும்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க ஆட்சி.
1937லேயே கல்கத்தா காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’ பாடலை வலம் வரச் செய்ய முயற்சித்தனர் – இதில் இராஜேந்திர பிரசாத் நேரு தோல்வியை கண்டனர்.
அரசியல் நிர்ணயசபையில் ஏற்கப்படவில்லை.
அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே அசைக்கிறது.
அரசியல் சட்ட முகப்புரைக்கு எதிரானது.
கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியதீர்ப்பின்படி ‘வந்தே மாதரம்’ பாடல் திணிப்பு நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
உள்துறை அமைச்சகத்தின் மீதே கிரிமினல் சட்டப்படி வழக்கு தொடுக்க இடமிருக்கிறது.
‘இந்தியா தான்எங்கள் நாடு – இங்குதான் இருப்போம்’ என்று கையெழுத்திட்ட 10 கோடி முஸ்லீம்களை பன்றிகள் என்பதா?
பன்றிகள் என்று சொன்னால் வராஹ அவதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. குடியரசும் இல்லை.
பா.ஜ.க. சொல்வது வந்தே மாதரமா? – வந்தே மோதுறோமா?
கேள்விகள் ஒவ்வொன்றும் சம்மட்டிகளாகத் தாக்கின இந்துத்துவச் சக்திகளை!
அரங்கத்தின் கரவொலி கடலலையாய் எதிரொலிக்க ‘வந்தே மாதரம்’ பாடல் திணிப்பை கண்டித்து நிறைவு உரை ஆற்றினார். (விரிவான உரை இடம் பெற்றுள்ளது)
தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் அவர்கள் நன்றிகூற கண்டனக் கூடம் முடிந்தது.
தமிழர் தலைவர் கண்டன உரையை – கருத்துரையைக் கேட்டோர், ‘வந்தே மாதரம்’ பாடல் திணிப்பு, வந்த வழியே போயிடும் வெற்றிச் செய்தியை விரைவில் கேட்போம் என்று நம்பிக்கை பூண்டனர்! அதற்கான களத்தில் சந்திக்க உறுதியேற்றனர்!
