இனமலரே, நாட்டில் நடப்பது ஆரியர் – திராவிடர் போராட்டமே!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எல்.விஜயராகவன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

வரும் சட்டசபை தேர்தலை, ஆரிய – திராவிடப் போர் என்று பிரகடனம் செய்து, தன் திராவிட சேனைகளிடம்,’ஓரணியில் நின்று வெல்வோம்’ என்று கூறி, போர் முழக்கம் செய்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

அவரது இந்த பேச்சு, அந்தக் காலத்து ராஜா – ராணி படங்களுக்கு இவரது தந்தை கருணாநிதி எழுதிய சினிமா வசனங்கள் போல் அல்லவா உள்ளது!

அதுசரி… ஸ்டாலின் தலைமையில் உள்ள கட்சி, திராவிட சேனை என்றால், அவரை எதிர்த்து, போர்க்களத்தில் நிற்கும் அ.தி.மு.க., – பா.ம.க., – நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் எல்லாம் ஆரியப் படையா? பா.ஜ., என்றால் ஆரியக் கட்சி, பிராமணர்கள் கட்சி என்று உருட்டும் இவர், தமிழக பா.ஜ.,வினரையும் ஆரியக்கூட்டம் என்கிறாரா?

வெறும், 2 சதவீதம் கூட இல்லாத, எவர் வம்புக்கும் போகாத பிராமணர்களை, ‘ஆரியர்’ என்று வசைபாடுவதுடன், தேர்தல் களத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும், ‘ஆரியர்’ என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து, ஆதாயம் தேட நினைக்கிறார், ஸ்டாலின்.

ஏற்ெகனவே, இதுபோன்ற பல பம்மாத்து நாடகங்களை முன்னாள் தி.மு.க., தலைவர்கள் அரங்கேற்றி இருப்பதால், ஸ்டாலின் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம்!

ரயில் சினேகம் தான் கொள்கையா? சிவகுமாரன், கோவையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்டுகளை மட்டும் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். ஆட்சியில் மறந்தும் பங்கு கொடுத்துவிடக் கூடாது’ என்பதில் இரு திராவிட கட்சிகளும் உறுதியாக உள்ளன.

ஆட்சியில் பங்கு கொடுப்பதால் என்ன பாதகம் ஏற்பட்டு விடும்? அத்தனை அதிகாரத்தையும் ஒரு குடையின் கீழ் வைத்து கோலோச்ச வேண்டும் என்பதாலா?

ஒருமித்த வாக்குறுதிகள், பரஸ்பர ஆதரவு, பாராட்டு, நிதிப்பகிர்வு எல்லாம் -தேர்தலில் ஓட்டுப்பதிவு முடியும் வரை தானா?

ரயில் சினேகம் போல, பயணம் தொடரும் வரை உரையாடலும், தின்பண்டங்களும், இடப்பகிர்வும் என நட்பு கொண்டாடி, பயணம் முடிந்து சேருமிடம் வந்ததும், நீ யாரோ, நான் யாரோ என்பது தான், திராவிட கட்சிகளின் கொள்கையா?

– ‘தினமலர்’ ஏட்டில் (19.2.2026)

இ–மெயில் கடிதம் என்று இதனை வெளியிட்டுள்ளது.

ஆரியர் – திராவிடர் என்பது தி.க.வோ. தி.மு.க.வோ கற்பித்த ஒன்றல்ல – இது வரலாற்று உண்மையாகும்.

‘தினமலரை’ப் பொறுத்தவரை அது எப்பொழுதுமே பார்ப்பன இனமலர் தான். காலம் ஒன்று இருந்தது; ‘நாங்கள்ஆரியர்கள் தான்!’ என்று பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வீராப்பாகப் பேசிய காலம் அது!

தந்தை பெரியார் தோன்றி, திராவிட இயக்கம் முகிழ்த்த பின்னர் – திராவிடர்களாகிய பார்ப்பனர் அல்லாதார் தன்மான – இனமான உணர்வு பெற்று பிறீட்டு எழுந்தனர்.

மேல் சட்டை அணியாமல், பஞ்சக் கச்சம் உடுத்தி, பூணூல் மேனியுடன் திமிராக நடைபோட்ட காலம் மாறியது. பூணூலை மறைத்துக் கொள்ள வேண்டிய காலம், பெயருக்குப் பின்னர், அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்ற பின்னொட்டுகளைத் தாங்கலாகவே அகற்றிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனாலும் புறத் தோற்றம் மாறினாலும், அந்த ஆரியப் பார்ப்பன உணர்வை மட்டும் விட்டார்கள் இல்லை.

அதற்கு வெகு தூரம் போக வேண்டாம். ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற ஏடுகளின் எழுத்துகளும் போக்குகளுமே போதுமானவையாகும்.

‘உடம்பெல்லா(ம்) மூளை’ என்று பீற்றுகிறார்களே, அந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்களே ஒரு முறை மனந் திறந்து, உண்மையை ஒப்புக் கொண்டு கூறினாரே!

‘‘தேவர்கள் – அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட்டின் நிலை’’  என்றாரே! (18.9.1953 அன்று திருவொற்றியூரில்) – இதற்கு என்ன பொருள் என்பதை ‘தினமலர்’ கூட்டம் கூறுமா?

1967 தேர்தலில் ‘‘பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்!’’ என்று பச்சையாக சொன்னவர் இல்லையா?

எந்த நோக்கத்தில், திட்டத்தில் ஆச்சாரியார் சொல்லியிருந்தாலும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன? ‘ஆரிய மாயை’ என்ற நூலை எழுதியவராயிற்றே அறிஞர் அண்ணா! ஆரியத்துக்குத் தண்ணீர் காட்டி, திராவிடர் தலைவர் தந்தை பெரியாரிடம்தானே சென்றார். ‘‘இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!’’ என்று சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினாரே முதலமைச்சர் அண்ணா! (20.6.1967).

‘இராமாயணம் காலந்தொட்டு நடப்பது தேவாசுரப் போராட்டம்தான்; ஆரியர் – திராவிடர் போராட்டம் தான்’ என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே எழுதியதுண்டே!

1971ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் – அன்று பெரியார் தொடங்கிய ஆரியர் – திராவிடர் போராட்டத்தை மீண்டும் புதுப்பித்து விட்டார் ராஜாஜி என்று சொல்லவில்லையா?

ஏதோ புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு ‘ஸ்டாலின் தலைமையில் உள்ள கட்சி திராவிட சேனை என்றால், அவரை எதிர்த்து போர்க்களத்தில் நிற்கும் அ.தி.மு.க. த.வெ.க. போன்ற கட்சிகள் எல்லாம் ஆரியப் படைகளா?’ என்று வினா தொடுத்துள்ளது ‘தினமலர்’.

இராமாயண காலத்திலிருந்து இராம பக்த அனுமான்கள் உண்டு என்பதுதான் இதற்கு விடை.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல பார்ப்பனர்  – பார்ப்பனரல்லாதார் போராட்டமே என்று அறுதியிட்டுச் சொன்னவர் அறிவுலக ஆசான் அய்யா பெரியார் அவர்கள் (விடுதலை 22.5.1967). இது கல்லின்மேல் பொறிக்கப்பட்ட எழுத்து என்பதை இனமலரே மறந்து விடாதே!

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *