தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி நடைபெறவில்லை என்று சிபிஅய் (CBI) தனது இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது
தஞ்சையில் உள்ள சிறுபான்மையினர் நடத்தும் பள்ளியில் கடந்த 2022ஆம் ஆண்டு, 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மாணவி லாவண்யாவை அந்தப் பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், அதன் அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் குற்றம் சாட்டின.
மேலும் மாநில காவல்துறையின் விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறி, இந்த வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, சிபிஅய் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
‘‘மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கு மதமாற்ற முயற்சி காரணமல்ல என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு மத ரீதியான அழுத்தங்கள் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை’’ என சிபிஅய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், சிபிஅய்-யின் இந்த அறிக்கை “கட்டாய மதமாற்றம்” என்ற அரசியல் ரீதியான மதவாத சக்திகளின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.
மாணவி ஏற்ெகனவே தனிப்பட்ட குடும்ப சிக்கல்களால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விடுதிக்காப்பாளர் ‘‘வீட்டுக் கவலைகளால் கல்வி வீணாகிவிடக்கூடாது, படிப்பில் கவனம் செலுத்து’’ என்று பல முறை அறிவுரை கூறியுள்ளார். இருப்பினும் அவர் மன உளைச்சல் அதிகமாகி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
நச்சு மருந்தை உட்கொண்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது பாஜக பிரமுகர் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த மாணவியை வலுக்கட்டயமாகப் பேச வைத்தார். மேலும் பாஜக பிரமுகர் வேண்டுமென்றே கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்தார்கள் என்று அவர் கூறுவதும், அந்தச்சிறுமி தன்னுடைய குடும்பச்சூழ்நிலையைக் கூறுவதும் பதிவாகி உள்ளது. ஆனால் அதை எடிட் செய்து மாணவியின் அந்த வாக்குமூலத்தில் ‘‘என்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறக்கூறி கட்டாயப்படுத்தியதால்தான் நச்சுமருந்து குடித்தேன்’’ என்று கூறுவது போல் மாற்றி, அதனை சமூகவலைதளத்தில் பரப்பி விட்டனர்.
மேலும் அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய பாஜக பிரமுகர்கள் மாணவி இறந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். மேலும் மாணவியின் பெற்றோரிடம் தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுக்கும் படி கட்டாயப்படுத்தினர் இத்தோடு விடவில்லை; ‘‘தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடக்கிறது; உண்மையான ஹிந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்’’ என்று என்று கூறி, மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக, விசாரணை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பேரில் நால்வர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், நடிகையுமான விஜயசாந்தி முக்கிய உறுப்பினராக இருந்தார்.
இந்தக் குழுவில் விஜயசாந்தியுடன் சில பெண் தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர். சந்தியா ராய் (மத்தியப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்), சித்ரா தாய் வாக் (மகாராட்டிரா பாஜக தலைவர்), கீதா விவேகானந்தா (கருநாடக பாஜக மகளிர் அணித் தலைவர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஜனவரி 2022இல் இந்தக் குழுவினர் தஞ்சாவூரில் உள்ள பள்ளி மற்றும் மாணவியின் ஊரான அரியலூர் மாவட்டத்திற்குச் சென்று, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து ‘‘மதமாற்றம் செய்திடத் தூண்டியதால் தானே அவர் கொல்லப்பட்டார்!’’ என்ற கோணத்திலேயே கேள்விகளைக் கேட்டனர்.
மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதி, சிகிச்சை பெற்ற மருத்துவமனை மற்றும் உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்தினர். தற்கொலைக்குக் கட்டாய மதமாற்ற முயற்சிதான் என்ற வதந்திக்கு மேலும் வலுகொடுக்க இந்தக் குழு முற்பட்டது.
விசாரணையை முடித்த பின், இந்தக் குழு தனது அறிக்கையை புதுடில்லியில் உள்ள பாஜக தேசியத் தலைவரிடம் சமர்ப்பித்தது.
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், மதமாற்றக் கோணத்தை அரசு மறைக்க முயல்வதாகவும் விஜயசாந்தி தலைமையிலான குழுவினர் அப்போது குற்றம் சாட்டினர். இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, வழக்கை சிபிஅய் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இக்குழுவினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஅய்-க்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவும் நடந்த பின்பு ‘மாணவியின் மரணத்துக்கும் மத மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை’ என்று சி.பி.அய். உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
‘‘மதமாறக் கூறினார்கள் என்று பொய்யான வாக்குமூலம் கொடுக்க விெஹச்பியும் பா.ஜ.க.வின் நால்வர் குழுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களைக் கட்டாயப்படுத்தியது’’ என்பதை சிபிஅய் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஒரு தற்கொலையை ‘மதமாற்றக் காரணம்’ என்று முடிச்சுப் போடும் பிஜேபியினரின் சூழ்ச்சி சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கையால் சுக்கல் நூறாகி விட்டது.
பிஜேபியினர் செயற்கையாக மதமாற்றம் என்று கூச்சலிடுவதின் பின்னணியின் உண்மை நிலையினைப் புரிந்து கொள்ள வேண்டும்.
