கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

12 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்!
எங்கெங்கெல்லாம் போராட்டம் இருக்கிறதோ, அந்தப் போராட்டத்தினுடைய கூர்வாளாக என்றைக்கும் எங்கள் தமிழன்பன் வாழ்வார்!
செய்திகளை இலக்கியமாக்கியவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்!
சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் மொழித் துறை நடத்திய

சென்னை, பிப். 19  ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்.  எங்கெங்கெல்லாம்  போராட்டம் இருக்கிறதோ, அந்தப் போராட்டத்தினுடைய மிகப்பெரிய கூர்வாளாக என்றைக்கும் எங்கள் தமிழன்பன் வாழ்வார். தொலைக்காட்சியிலே கூட இலக்கியங்கள் வந்திருக்கலாம்; இலக்கியங்களைப் பற்றிய செய்திகள் வந்திருக்கலாம்; ஆனால், செய்திகளை இலக்கியமாக்கியவர் நம்முடைய  தமிழன்பன் அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பல்கலைக் கழகத்தில்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்!

சென்னை பல்கலைக் கழக பவள விழா கலை யரங்கில், கடந்த 3.2.2026 அன்று காலை, தமிழ் மொழித் துறை சார்பில் நடைபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்வில், அவரது படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தந்ைத பெரியார் என்ற எரிமலையிடம்
கிட்டே நெருங்க முடியாது!

ஈரோட்டின் பால் அவர் ஈர்க்கப்பட்டது என்று சொல்வது –  தந்தை பெரியார் ஓர் எரி மலை; எரிமலைக்கும், மற்ற மலைகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மலைகள் என்றால், இமயமலை உள்பட அதுதான் மிக முக்கியம். இன்றைக்கும் அண்ணல் அம்பேத்கர்  கொள்கைகளுக்கு யார்  நேர் எதிர் கொள்கை யாளர்களோ, அவர்கள் அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்; முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும், அம்பேத்கரையும்கூட அணைத்துத் தங்கள் விருப்பப்படி பயப்படுத்தலாம் என்று நினைக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில், பெரியாரிடம்தான் அவர்கள் நெருங்குவதற்குப் பயப்படுகிறார்கள்; பெரியார் பிம்பத்தை ஏதாவது கூலிப்படைகளை வைத்தாவது உடைக்கலாமா? என்று ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கக்கூடியவர்கள். இமயமலை மீது ஏறலாம்; உச்சத்தைக்கூட தொடலாம். அங்கே அந்த மலைமீது சென்றவர்களின் வரலாறுகளைச் சொல்லலாம். ஆனால், எரிமலையிடம் கிட்டே நெருங்க முடியாது.  அம்பேத்கர் போன்றவர்கள், இமயமலையாகப் பயன்பட்டு இருக்கிறார்கள். பெரியார்தான் எரிமலையாக இருக்கிறார். அந்த பெரியாருடைய தோளில்தான், இங்கே ‘எரிதழல்’ என்று சிறப்பாக நீங்கள், இந்த கவிதைக்கு ஒட்டுமொத்த கவிதைத் தொகுப்புக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறீர்கள்.

அலங்காரத்துக்காகவோ, அழகுக்காகவோ சொல்லுகின்ற வார்த்தைகள் அல்ல!

அவர் ஒவ்வொரு முறையும், எழுதுகின்ற எழுத்து, அவர் உடுத்துகின்ற உடையிலும் மிடுக்கு இருக்கும். அதுதான் மிக முக்கியம்.  அவர் நடையும், உடையும் இரண்டுமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடியது. வளைந்து போகின்ற, குனிந்து போகின்ற சூழ்நிலை என்றைக்கும் அவருக்குக் கிடையாது. அந்தக் கொள்கையை தயவுக்கும், தாட்சண்யத்துக்கும் உட்படுத்த மாட்டார். இப்படி ஒவ்வொன்றையும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். நேரத்தின் நெருக்கடி காரணமாக, ஒன்று, இரண்டை மட்டும் நான் சொல்ல விழைகிறேன்.  அவருக்கு ஈடு இல்லை; ஒப்பாரும் இல்லை என்று சொல்லுகிறோம் என்றால், அலங்காரத்துக்காகவோ, அழகுக்காகவோ சொல்லுகின்ற வார்த்தைகள் அல்ல. உதாரணத்துக்கு உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், ‘‘நாங்கள் ‘விடுதலை மலர்’ வெளியிடும்போது, மல ருக்குக் கவிஞருடைய கட்டுரை, கவிதை இருக்க வேண்டும் என்று கேட்போம்.’’ அதை உடனடியாக எழுதிக் கொடுப்பார்.

தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுத்தோ அல்லது மற்றவர்களைத் திருப்தி செய்வதற்காகவோ அவர் எழுதியதில்லை!

அவருடைய எழுதுகோல் எப்படி எல்லாம் வேகத்தை தந்திருக்கிறது –  எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த எழுத்துகள் அவருடையது  என்பதற்கு ஒரே ஒரு கவிதை. எப்படி அவர் ‘ஈரோடு தமிழன்பன்’ என்பதற்கு முழுத் தகுதி உள்ளவர்? வெறும் பெயரோடு அல்ல. ஈரோடு என்பது கொள்கை. அதுவும் சாதாரணம் அல்ல. சமரசமற்ற கொள்கை.  அவர் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார். எந்த மேடைக்கு அழைத்தாலும் போவார்; ஜாதி சங்கத்தினர் மாநாடு நடத்தினாலும், அதற்குப் பெரியாரை அழைத்தால், அங்கே பெரியார் போவார். அவர் அங்கே பேசும்போது, ‘‘இந்த  ஜாதிச் சங்கம் எதற்காக? அதை முதலில் கலைக்க வேண்டாமா? இது ஏதாவது  உருப்படுமா? உங்களை ஒன்றுபடுத்துமா?’’ என்றுதான் தொடங்குவார். இந்தத் துணிச்சல் அவருக்கு எப்படி இருந்ததோ, அதே மாதிரிதான் ‘கவிதை எழுதுங்கள்’ என்று சொன்னால், ஈரோடு தமிழன்பன் அவர்கள். அப்படி எழுதும்போது, தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுத்தோ அல்லது மற்றவர்களைத் திருப்தி செய்வதற்காகவோ அவர் எழுதியதில்லை, பேசியதில்லை. இதுதான் அவருடைய தனித்தன்மை.

அந்த வகையிலே வரும்போது.  தந்தை பெரியார் பிறந்த நாளான  செப்.17 அன்று ஒவ்வொரு ஆண்டும் ‘விடுதலை’ மலரை வெளியிடுவோம். அதன்படி 2012 ஆம் ஆண்டு,  தந்தை பெரியார் 134 ஆவது பிறந்த நாளில் ‘விடுதலை’ மலர் வெளியிட்டோம். அந்த மலரில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு கவிதை எழுதினார், ‘‘கருணை மறவர் தந்தை பெரியார்’’ என்ற தலைப்பில்.

இலக்கியம் என்பதற்கு எது வரையறை?

அதாவது, மறவர் என்று சொன்னாலே கருணை இல்லாத வேகமாக இருக்கக் கூடியவர் என்று சொல்வார்கள். ஆனால், இரண்டு சொற்களையும் எப்படி இணைத்திருக்கிறார் பாருங்கள். கருணை மறவர்  என்று சொல்லிவிட்டு, அந்தக் கவிதை வரிகளைப் படித்தாலே, தந்தை பெரியார் யார்? அவருடைய தொண்டு எப்படிப்பட்டது? அவர் எப்படி வரலாற்றில் வாழக்கூடியவரானார்? அவர் மறையவில்லை என்பதற்கு அடையாளம் – புவி வாழ்க்கை அவரோடு மறைந்திருக்கலாம்; ஆனால், புகழ் வாழ்க்கை என்பது இனிமேல்தான் தொடக்கம். எப்போதும் நிலைக்கும், அது என்றும் விரிவாக வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. என்றைக்கும் இவையெல்லாம் மிகப்பெரிய இலக்கி யங்களாகக் கருதப்பட வேண்டியவையாகும். இலக்கியம் என்பதற்கு எது வரையறை என்று சொன்னால், எமர்சன் சொன்னார், ‘‘இலக்கியம் என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல, அது உண்மையான அனுபவங்கள் மற்றும் ஆழமான சிந்தனைகளின் பிரதிபலிப்பு’’ என்று.

‘‘கருணை மறவர் தந்தை பெரியார்!’’

எழுதிய கவிதை: ‘கருணை மறவர் தந்தை பெரியார்’’ என்ற  தலைப்புடன் –

மனிதனின்

எந்த உரையாடலில் விடுதலையும்,

விடுமுறை போடாத் தன்மானமும்

குனிவறியா

ஒளி படைக்கின்றனவோ

அந்த உரையாடலில்தான்

அவனுடைய தாய் மொழிச் சிறகுகள்

விண்ணின் விரிவோடு ஒப்பந்தம் போடும்.

அந்த உரையாடலைத்தான்

தந்தை பெரியார் முதன்முதலாய்த்

தமிழருக்காக நிகழ்த்தினார்.

அவர்

தமிழோடு நடத்திய

அத்தனையும் அக்கறைக் கலவரங்கள்;

உயர்வுகளை நோக்கித் தமிழனை, தமிழை,

உந்தித் தள்ளின.

இச்சகம் பேசிகளின்

ஒப்புக்கான உறவுகள் ஒதுங்கிநின்று

உள்ளுக்குள் வெந்தன.

தமிழ்ச் சொற்கள்

காவியங்களை, கதைகளை, பாடல்களை

எத்தனையோ வகைகளில்

எவ்வளவோ காலமாய்ச் சந்தித்திருக்கின்றன.

துணிவுமிக்க

வெட்டொன்று துண்டிரண்டு

வெப்ப நெருப்புப் பிம்பமான சிந்தனைகளைத்

தந்தை பெரியாரின்

அறிவுத் தாழ்வாரத்தில்தான் முதன்முதலாய்ச்

சந்தித்தன.

அறிவோடு

நட்புப் பாராட்ட முடிந்த அய்யா

அறியாமையின்

தேநீர் விருந்து அழைப்புகளை ஒருபோதும்

ஏற்க முடியவில்லை.

எப்படி முடியும் அது?

இருள் மண்டபத்தில்,

இரவு நடத்தும் நட்சத்திரத் திருவிழாவுக்கு

வருகை தர ஒப்புவானா சூரியன்?

ஒப்பினால்

பகல்களை யார் பயிரிடுவது?

பாதுகாப்பது?

எல்லையற்ற இரக்கத்தின்

திருஉருவம் பெரியார்!

அவருடைய ஆத்திரம், போராட்டம், புரட்சி

அனைத்துமே.

புதைகுழி விளிம்பிற்குத் தள்ளப்பட்ட

தமிழ்மானுடனைக்

காக்கத் துடித்த கருணையின்

வெளிப்பாடே அன்றி, வேறு என்ன?

பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால்

அவர்

யாசர் அராஃபாத்துக்குத் தோளில்

துப்பாக்கி ஆகியிருப்பார்!

அல்லது

தந்தை பெரியார் தோளில் அராஃபாத்

துப்பாக்கியாகி யிருப்பார்.

ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்

நெல்சன் மண்டேலாவின் சிறைக்குப்

பக்கத்துச் சிறையில்

விடுதலை வேள்வி செய்திருப்பார்

அல்லது

அவருடைய சிறையிலிருந்தே போராடி

ஆப்பிரிக்காவையும் அவரையும்

விடுவித்திருப்பார்.

கருணை மறவர் பெரியார்

புலி தனது குட்டியைக் கவ்வுவதுபோலத்

தமிழர்களைக் கவ்வினார்.

பதிந்திருக்கலாம் பல்;

படிந்திருக்கலாம் சுவடு

தாய்ப்புலியின் பாதுகாப்பு நடவடிக்கை

அது!

தப்புத் தமிழன்தான் தவறென்று பேசுவான்.

வீடு, சொத்து, பதவி, சுகம்

எல்லாம் துறந்து

வெட்டவெளி வீதியில் நின்று

தனது வயது, தளர்ச்சி, நோய், வலி

எதையும் பொருட்படுத்தாது

தமிழனை மீட்கப் போராடிய பெரியாரை

முரட்டுச் சித்தர்கள் வழியில் வந்த

ஒரு

பகுத்தறிவு மகரிசி என்றால்

இல்லை என்று எந்த விரல்

எதிர்ப்புக் காட்டி நீளும்?

ஆயிரம் பல்லாயிரம் கண்ணாடிகளாகித்

தந்தை பெரியார்

முகத்தைப் பிரதிபலித்துத் தமிழர்கள்

அவருக்கு நன்றி சொல்லலாம்.

முகத்தைப்

பிரதிபலிப்பதை நிறுத்திவிட்டு

அவருடைய

அகத்தைப் பிரதிபலித்தால்

தமிழர்களுக்குத்

தந்தை பெரியார் நன்றி சொல்வார்.

ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார் என்று சொல்வதற்கு இந்தக் கவிதை ஓர் அடையாளம்.

பகுத்தறிவாளர்கள் உணர்ச்சி வயப்படக்கூடாது!

இந்த மாதிரி ஒரு தனித்த சிந்தனை, எவ்வளவு பெரிய சொற்கள்? ஆகவே, இப்படி ஏராளம் சொல்லலாம் நிறைவாக ஒன்று, தமிழன்பன் அவர்கள் மறைவிற்குப் பிறகு, அவரது வாழ்விணையர் குடும்பத்தவர்களைப் பார்த்து  ஆறுதல் சொன்னேன்.  அண்மையில் நான் கருத்துள்ள சில இதழ்களைப் படித்தேன். அதில் குறிப்பாக ‘‘காக்கைச் சிறகினிலே’’ இதழைப் படித்தேன். தமிழ்நாட்டில் நல்ல முறையில் நடத்தப்படக்கூடிய ஓர் இதழ் உண்டு என்றால், அது ‘‘காக்கைச் சிறகினிலே’’ இதழாகும். அந்த இதழில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய கவிதை ‘கடைசி பக்கத்தில், கடைசி கவிதை’ என்ற ஒன்றை, என்னால் நீண்ட நேரம் படிக்க முடியவில்லை; பகுத்தறிவாளர்கள் உணர்ச்சி வயப்படக்கூடாது என்று சொன்னாலும் கூட, உணர்ச்சியோடு அதைப் பார்க்கிற போது, சில வரிகளைப் படித்துவிட்டு, மேலே படிக்க முடியாமல், தாங்க முடியாத அளவிற்கு அவரது இழப்பு  ஓர் உணர்வை, துக்கத்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஒரு நெகிழ்ச்சி. இங்கே என் உரைக்குப் பின், கவிதை வாசிக்கக் கூடிய  விழிகள் நடராசன் அவர்களுடைய கருத்து அதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதை நான் ஒருமுறை அல்ல, பலமுறைப் படித்தேன். இந்த அரங்கத்தில் அதைச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.  கடைசி கவிதை என்று உண்டு. கடைசி உரை என்பதும் வாழ்நாளிலே உண்டு. ஆங்கிலத்திலே சுவாங்சாங் என்ற ஒரு சொல் உண்டு.  கடைசியான அந்த நிகழ்வுக்கு, ‘சுவாங்சாங்’ என்று பெயர்.  அது மாதிரி இது ஒரு சுவாங்சாங்  என்று சொல்லக்கூடிய அளவிற்கு வரக்கூடியது. அந்த நிகழ்வை  மட்டும் சொல்லி, என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அத்தனை பேருக்கும் மிக முக்கியமான இது!

தந்தை பெரியார் முத்தமிழ்
மன்றத்தின் சார்பாக…

ஈரோடு தமிழன்பன் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்து, ஆறுதலைப் பெறுகிறோம். அம்மா போன்ற குடும்பத் தோழர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூடிய வாய்ப்பினைப் பெற்றாலும், ஒரு மாதத்துக்குள் இரண்டாவது படத்தை திறந்து வைத்திருக்கின்றோம். கடந்த 18 ஆம் தேதி அன்று பெரியார் திடலில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பாக, நடைபெற்ற நிகழ்வில் அவருடைய படத்தைத்  திறந்து வைத்தோம்.

அந்தக் கடைசி கவிதைப்பற்றி விழிகள் நடராஜன் கூறுவது என்ன?

ஈரோடு தமிழன்பன் மறைவதற்கு
20 நாள்களுக்கு முன்!

‘‘கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவதற்கு 20 நாள்களுக்கு முன்பாக, என்னை செல்பேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். நடராஜன், அமெரிக்காவிலிருந்து பாரதிதாசன் பேசினான். ‘‘நீங்கள் தொடர்ந்து கவிதை எழுதுங்கள் அப்பா! உங்கள் உடல்நலம் சரியாகிவிடும், கவலைப்பட வேண்டாம்’’ என்று கூறினான். எனக்கு ஒரு கவிதையை அனுப்பி, அதைப் படிக்கச் சொன்னார் கவிஞர் பெருமகன்.  சிறிது நேரம் கழித்து, ‘‘அதைப் படித்துவிட்டீர்களா நடராஜன்?’’ என்று மீண்டும் செல்பேசியில்  தொடர்பு கொண்டு பேசினார்.

ஈரோடு தமிழன்பன் எழுதிய கடைசி கவிதை!

கவிஞரின் இந்தப் பேச்சு, என் மனதிலிருந்து அகலவே இல்லை’’ என்று விழிகள் நடராஜன் சொல்கிறார்.  ‘‘அவர் மறைந்த செய்தி கேட்ட நொடியில் இருந்து என் மனம் நிலை  கொள்ளவில்லை.  என் செவியிலும், மனதிலும் இன்னும் இது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது’’ என்கிறார். அதே நிலையைத்தான் நானும் பெற்றேன், இந்தக் கவிதையைப் படிக்கின்றபோதும் அதை நினைக்கும்தோறும் என் கண்களில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதுதான், மகாகவி ஈரோடு தமிழன்பன் எழுதிய கடைசி கவிதை. அது அவருடைய கடைசி கவிதை – அவர் குரல் இல்லை, அவ்வளவுதான்; ஆனால், அவருடைய கவிதைகளுக்குக் கடைசி என்பது கிடையாது.

தொலைக்காட்சியிலே கூட இலக்கியங்கள் வந்திருக்கலாம்; இலக்கியங்களைப் பற்றிய செய்திகள் வந்திருக்கலாம்; ஆனால், செய்திகளை இலக்கியமாக்கியவர் நம்முடைய  தமிழன்பன் அவர்கள். எல்லோரும் செய்திகளைப் படித்து முடித்தவுடன், ‘‘செய்திகள் முடிந்தது’’ என்று சொல்வார்கள். ஆனால், நம்முடைய தமிழன்பன் அவர்கள் செய்திகள் படித்து முடித்தவுடன் ‘‘செய்திகள் நிறைவடைந்தன’’ என்று சொல்வார்.

கடைசி கவிதையில் சொல்லுகிறார்,

இருட்டைக் கண்டு இதயம் நடுங்கும்
வெளிச்சமா சூரியன்? 

இருட்டைக் கண்டு

இதயம் நடுங்கும் வெளிச்சமா

சூரியன்!

இடுப்பில் வேலைகேட்கிறது?

வாக்கியத் தெருவின்

நெரிசல் கொன்றுவிடுமோ என்னும்

வதைச்சிந்தனையில்

வாசலில்நின்று  தவிக்கும்  சொற்களா

தமக்குப்

போடப்பட்ட பாதுகாப்பு வளையம்

நம்பத்தகுந்ததா

என்று

ஏகே 47  துப்பாக்கிகளிடம் கேட்டுவர

ஆள் அனுப்பும்.

விட்டுவிட்டுத் தூறும்

மழையின் முகவரி

இடுப்பில் நனைந்த

முடிச்சில் சுருண்டுகிடக்கிறது

அதிகாரம் இழந்த கார்காலம்

சொல்லில் பொருளில் நேர்ந்த

இழப்புகளையே

இன்னும் கணக்கெடுத்து முடிக்கவில்லையே!

தான் இறக்கப்போவது

அகத்திலா புறத்திலா என்பது

தெரியாதநிலையில்

இறுதி அறிக்கை எழுத எழுத்துகள்

எங்கிருந்து செயற்படும்?

கரிகாற்பெருவளத்தான்

வாளுறையிலிருந்தா?

உறங்காத நெருதா பட்டாள மொழிகள்

புரண்டு புரண்டு

சேகுவாரா   கைகளைக்கிள்ளும்

அவன் தோள்  பையிலிருந்தா?

இருட்டைக்கண்டு

இதயம் நடுங்கும்  வெளிச்சத்திற்கு

சூரியன்  கைவாளில் என்ன வேலை?

முதலமைச்சருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்!

இதுதான் அந்தச் சூரியன் என்று. ஆனால், சூரியன் மறைந்தது என்று ஒருநாள் சொன்னாலும், அது மறு படியும் உதித்தது என்று சொல்லக்கூடிய அளவுக்கு எப்படி அது ஒரு தொடர்ச்சியாக இருக்கிறதோ, அது போல அவர்கள் மறையவில்லை, மற்றவர்களுக்கு வழிகாட்டியான வரலாறு ஆனார். எனவே தான் ஈரோடு, அது மிக முக்கியமாக என்றைக்கும் அது உயர்ந்த வழிகாட்டக் கூடியது. அதனுடைய ஆற்றல் சிறப்பானது. அப்படிப்பட்டவருடைய பெயரையும், புகழையும் தாங்கி தொடர்ந்து நல்ல அறக்கட்டளையை உருவாக்கி, அதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இந்தப் பெருமைக்குரியவர்களை மீண்டும் பாராட்டி, தமிழன்பன் அவர்கள் மறைந்த உடனேயே, நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு, நம்பி அவர்கள் சொன்னதை போல, மிக முக்கியமாக அதனுடைய ஆற்றல் மிகு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு, இந்த அரங்கம், இந்த மக்கள், உலக மக்கள்,  அன்பர்கள் அத்தனை பேரும் முதலமைச்சருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

எல்லா இடங்களிலும் ஈரோடு தமிழன்பன் வாழ்வார்; பல்கலைக் கழகங்களிலும் வாழ்வார்; மண்குடிசையிலும்  வாழ்வார்!

இந்த அரசு எப்படி திராவிட மாடல் அரசு? என்றால், இதற்கு முன்னால் இருந்த அரசுகளைத் தாண்டி சாதனைகளைப் படைத்திருக்கிறது. அதற்கு முன்னால் பெரிய பதவிகளிலே இருந்து, மறைந்தால்தான் அரசு மரியாதை கொடுப்பார்கள். அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கை உண்டாக்கி, துணிச்சலாகச் சொன்னவர் நம்முடைய கலைஞர் அவர்கள். ‘‘பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தால், உங்கள் ஆட்சிக்கே ஆபத்து விடும்’’ என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது, ‘‘அதைவிட பெருமை எனக்கு வேறு கிடையாது’’ என்று சொன்னவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட வழியையொட்டி அதை விரிவாக்கினார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதுதான் மீட்சி – நீட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கி, தமிழறிஞர்கள், பொதுத்தொண்டர்கள், உடல் உறுப்புக் கொடை கொடுத்தவர்களுக்குக் கூட நல்ல அளவிற்கு அரசு மரியாதை என்று சொல்லி, அதன்படி செய்கின்ற ஒரு நல்லாட்சிதான், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி.  அதன் ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். அவர்களுக்கும் இந்த நேரத்திலே, இந்த அரசுக்கும் இந்த அரங்கத்தின் சார்பாக, ஈரோடு தமிழன்பன் சார்பாக, ஈரோடு சார்பாக – அதற்காக நமது நன்றியைத் பதிவிட்டு, ஆறுதல் பெறுவோம்.  ஈரோடு தமிழன்பன் என்றைக்கும் சிறப்பாக வாழ்வார் ; அவர் எல்லா இடங்களிலும் வாழ்வார். பல்கலைக் கழகங்களிலும் வாழ்வார்; மண்குடிசையிலும்  வாழ்வார். எங்கெங்கெல்லாம்  போராட்டம் இருக்கிறதோ, அந்தப் போராட்டத்தினுடைய மிகப்பெரிய கூர்மையான, கூர்வாளாக என்றைக்கும் எங்கள் தமிழன்பன் வாழ்வார்; மகாகவி வாழ்வார்! மகா பெரிய அளவிற்கு வரலாற்றைப் படைப்பார். அதற்கு நாம் துணை நிற்போம்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *