‘வந்தேமாதரம்’ என்ற பாடலில் உள்ள இந்த சொற்கள் சுதந்திரத்துக்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம்!
இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’ நூலிலிருந்து
‘வந்தேமாதரம்’ என்றால் ‘வந்தே மோதுறோம்’ என்கிறீர்களா?
சென்னை, பிப்.19 ‘‘வந்தே மாதரம் பாடலை கட்டா யப்படுத்துவதா? இஸ்லாமியர்கள் மனம் புண்படாதா? அவர்கள் இந்த நாட்டு மக்கள் இல்லையா? இந்தியாவில் அவர்கள் ஓட்டு போடவில்லையா? இந்திய அரசு – இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பந்தம் போடுகிறீர்களே, அந்த நாடுகளுடனான வெளியுறவுகள் என்னாவது?’’ என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி, ஒன்றிய அரசைக் கண்டித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
திராவிடர் கழகம் சார்பில், ‘‘மதச்சார்பின்மையை குழி தோண்டி புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா?’’ எனும் தலைப்பில் கண்டனக் கூட்டம், சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (18.2.2026), மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றும், தலைப்பையொட்டி ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும் உரையாற்றினார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று, நிறைவாக கண்டன உரையாற்றினார்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன், த.மு.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் – ‘தகைசால் தமிழர்’ – பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை ஏற்று, ‘‘வந்தே மாதரம்” பாடலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கி, நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். வந்தே மாதரம் பாடல் குறித்து உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய கழகத் தலைவர், ‘‘இது இஸ்லாமியர்களை புண்படுத்துகிறது; இது மிகவும் அநாகரீகமானது; மனிதநேயமற்றது; கண்டனத்துக்குரியது’’ என்று தொடக்கத்திலேயே மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தப் பின்னணியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்ன சொல்கிறது என்பதை விவரிக்கத் தொடங்கினார். ‘‘இறையாண்மை (Sovereign), சமதர்மம் (Socialist), மதச்சார்பின்மை (Secularism), ஜனநாயகம் (Democratic), குடியரசு (Republic) என்கிற இந்த அய்ந்து அம்சங்களையும் யாராக இருந்தாலும், எதற்காகவும் மாற்றவே முடியாது. இதன்படி இந்தப் பாடல் ஏற்கத்தக்கதா?’’ என்ற சட்டக் கேள்வி கேட்டுவிட்டு, ‘‘மாறாக அந்த அய்ந்து அம்சங்களும், ஒவ்வொரு நாளும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் செல்லரிக்கபட்டுக் கொண்டே இருக்கின்றது’’ என்று கூறி, ஆபத்தின் ஆழத்தை உணர்த்தினார். தொடர்ந்து, ‘‘தட்டிக் கேட்காவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டமாகி விடுவான்’’ என்ற அனுபவ மொழியைக் கூறி, ‘‘வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்துவதால் இஸ்லாமியர்கள் மனம் புண்படாதா? அவர்கள் இந்த நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் என்ன வானத்திலிருந்து ‘பொத்தென்று’ குதித்தவர்களா? அய்ந்து தலைமுறைகளுக்கு முன் அவர்களும் இந்துக்கள் தானே? உங்கள் மதம் ‘எட்டி நில்’ என்றதா? இல்லையா? ‘கிட்டே வராதே’ என்கிறீர்கள், ‘தொட்டால் தீட்டு’ என்றீர்கள்; அதனால், யார் கட்டி அணைத்தார்களோ அங்கு சென்று விட்டார்கள்! இதில் என்ன தவறு? அதுவும் போகட்டும், உலக அளவில் இஸ்லாமிய நாடுகளின் உறவுகள் என்னாவது?’’ என்று அடுக்கடுக்கான மனிதநேய, அரசியல் கேள்விக் கணை களைத் தொடுத்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை மீறியிருக்கிறது உள்துறை அமைச்சகம்!
இன்னும் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வைத்தார். அதாவது, ‘‘ஏற்ெகனவே உச்ச நீதிமன்றத்தால் இந்தப் பாடலில் உள்ள மத விரோத கருத்துகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன’’ என்பதைக் கூறி,‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை மீறியிருக்கிறது உள்துறை அமைச்சகம்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘கிரிமினல் சட்டப்படி இதற்கு உள்துறை அமைச்சர் மீது வழக்கு போடலாம்’’ என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர், ‘‘‘வந்தே மாதரம்’ என்ற இரண்டு சொற்கள் சுதந்திரத்துக்காக சொல்லப்பட்டதாக இருக்கலாம். பின்னர் ‘வந்தேமாதரம்’ என்றால் ‘வந்தே ஏமாத்துறோம்’ என்று காங்கிரசைக் கண்டிப்பதற்காகக் கலைஞர் போன்றவர்களே பேசியிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பன்றிகளைப் போன்றவர்கள். அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’ நூலிலிருந்து பிற மதத்தவர் எவரும் ஏற்க முடியாத பகுதியையும் சேர்த்து இன்றைக்கு ‘வந்தேமாதரம்’ என்றால், ‘வந்தே மோதுறோம்’ என்கிறீர்களா?’’ என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். தொடர்ந்து பேசிய ஆசிரியர், ‘‘இஸ்லாமியர்களை பன்றிகள் என்று சொல்கிறீர்களே, பன்றி என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமாயிற்றே? நீங்கள் இஸ்லாமியர்களைப் கொச்சைப்படுத்துகிறீர்களா? இல்லை, ‘கடவுள் மகா விஷ்ணுவைக்’ கொச்சைப்படுத்துகிறீர்களா?’’ என்று அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டார்.
‘‘கடவுள் தோற்றார் –
மதசார்பற்ற கருத்து வென்றது!’’
மேலும் அவர், ‘‘காங்கிரசில் இருந்த சமதர்மவாதி எச்.வி. காமத் அவர்களே, அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள முதல் பகுதியை உருவாக்குவதற்கு நடந்த விவாதத்தில், ‘We the people of India’ என்பதற்கு முன்புறம் ‘In the name of the God’ என்று சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததையும், திருமலராவ், எச்.என்.குன்சு உள்ளிட்டவர்கள் அதை எதிர்த்ததையும், எச்.வி.காமத் ஓட்டெடுப்புக்கு விடக் கேட்டதையும் எடுத்துரைத்து, அந்தத் தீர்மானம் 69–க்கு 41 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து, தோற்கடிக்கப்பட்டதையும் விவரித்து, ‘‘கடவுள் தோற்றார் – மதசார்பற்ற கருத்து வென்றது!’’ என்ற வரலாற்றை குறிப்பிட்டு, மேற்கு வங்கத்தில் சாதனை களைச் சொல்லி ஓட்டு கேட்க இயலாத பா.ஜ.க., வழக்கம் போல மதவாத அரசியலைக் கையில் எடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில்
சரியான பாடம் புகட்டுங்கள்!
மேற்குவங்கத்தில் காளிக்கு மவுசு இருக்கும் காரணத்தால், இந்த ‘வந்தே மாதரம்’ பாடலை முன்னிறுத்திப் பேரணி செல்லலாம்’’ என்ற திரிபு வாத அரசியலை மேற்கொண்டுள்ளது’’ என்று அம்பலப்படுத்தி, ‘‘தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’’ என்று கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவு செய்கிறார்.
நிறைவாக, திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நன்றியுரை நவின்று, நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீர மர்த்தினி, கழக வழக்குரைஞர் அணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை அருண், திராவிட நிதி தலை வர் ப.சீதாராமன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், முனைவர் அதிரடி க.அன்பழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், தோழர் ஹசீப், ‘விசிறி’ சாமியார் முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டு, கழகக் காப்பாளர் வீரபத்திரன், பி.சி.ஜெயராமன், செங்கல்பட்டு சுந்தரம், வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், பசும்பொன் செந்தில்குமாரி, இளவழகன், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோதரன், இராவணன், வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம், கோ.நாத்திகன், தங்கமணி – தனலட்சுமி, மகேஷ், யுகேஷ், அயனாவரம் துரைராஜ், ஓட்டேரி பாஸ்கர், வடசென்னை மணிவண்ணன், காரைக்குடி மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனைத்து உரைகளையும் கேட்டுப் பயன் பெற்றனர்.
