(திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் செயலாளர் புகழ் வணக்க நிகழ்ச்சியில் சித்தாத்தன் அவர்களின் சகோதரி டாக்டர் நாகமணியின் நன்றியுரை)
திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய அண்ணன் வழக்குரைஞர் முத்து சித்தார்த்தன், தந்தை பெரியாரின் பெரும் தொண்டரான எனது தந்தை முத்து அவர்களின் விரல் பிடித்து நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகளோடு வளர்ந்தவர்.
எங்கள் தந்தையோடு இணைந்து, முழு மனதோடு இந்த இயக்கத்தின் பணிகளில் ஈடுபட்டு, இந்த இயக்கத்திற்காகவே வாழ்ந்து வந்தவர்.
எப்போதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வகுத்த பாதையில் வழுவாது, அவர் இட்ட பணியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே அவரது சிந்தனையாக இருந்தது.
அண்ணனின் இறுதி நாள் வரை, ‘பெரியார் உலகத்திற்காக திரள்நிதி திரட்ட வேண்டும். பெரியார் உலகம்’ சிறப்பான வகையில் அமைய வேண்டும்’ என்பதே அவரது முதன்மை நோக்கமாக இருந்து வந்தது.
எங்கள் மூவரையும் வளர்த்த காலங்களில் என் தந்தை எங்களுக்கு –
“மானமும், அறிவுமே மனிதனுக்குச் சிறந்த அழகான சொத்துகள்.நீங்கள் மூவரும் அறிவு, நாணயம், நேர்மை. ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும் பொது வாழ்க்கையில் இருப்பதால் பிறரை விட அதிக பொறுப்புணர்வோடும் நேர்மையோடும் வாழ வேண்டும். ”
– என்று எப்போதும் சொல்வார்.
அந்த அறிவுரைகளும், மானமிகு ஆசிரியர் அவர்களின் தெளிவான சிந்தனை களும் எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதலாக அமைந்தன.
இயக்கமே குடும்பமாகவும். குடும்பமே இயக்கமாகவும் இருந்து, கருஞ்சட்டை வீரர்களோடு நாங்கள் பயணித்து வந்தோம்.
எங்கள் தந்தை திடீரென்று கடைக்கு செல்ல வேண்டு மென்றாலும், ‘‘நான் கருப்புச் சட்டையோடு தான் போவேன் எடுத்துக் கொடு’’ என்று கேட்பார்.
அதற்கு நாங்கள் விளையாட்டாக,
“அப்பா, டீ குடிக்கப் போகும் போதும் கருப்புச் சட்டையா? கருப்புத் துண்டா?” என்று கேட்டால் –
“எனக்கு திடீரென மரணம் வந்தால், என் உடல் மண்ணில் சரியும்போது நான் கருஞ்சட்டை வீரனாக இல்லாமல் விழுந்தால், அது எனக்கு அவமானமாக இருக்கும். நான் மரணிக்கும் போதும் நான் கருப்புச் சட்டையோடுதான் இருக்க வேண்டும் அதுவே நான் பெரியார் தொண்டன் என்ற பெருமையை எனக்கு சேர்க்கும்” – என்று எப்போதும் சொல்வார்.
அவர் தன் வாழ்நாளை முழுமையாக இந்தக் கொள்கைக்காக அர்ப்பணித்து, அவர் இறக்கும் வரை பெரியாரின் பெருந்தொண்டனாக வாழ்ந்து கொள்கையிலிருந்து ஒரு நொடி கூட விலகாமல் மறைந்தார்.
பெரியார் காட்டிய வழியிலேயே,
என் அண்ணனும் இந்த இயக்கப் பணிக்களை செய்து வந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக விபத்தில் அகால மரணமடைந்தார்.
ஆனால். என் தந்தை சொல்படியே, என் அண்ணன் மரணிக்கும் தருணத்திலும், கருப்புச் சட்டையோடுதான் இருந்தார்.
ஒரு ராணுவ வீரன் தனது சீருடையில் மரணிப்பதைப் பெருமை யாகக் கருதுவது போல, கருஞ்சட்டை படையில் தன்னை ஒரு சிப்பாயாகக் கருதி வாழ்ந்த என் அண்ணன் சித்தார்த்தன், போர்க்களத்தில் உயிர் நீத்த வீரனைப் போல,
“மரணிக்கும் போதும் கொள்கை வீரனாக இருக்க வேண்டும்” – என்ற என் தந்தையின் சொல்லை நிறைவேற்றிய என் அண்ணன், அகால மரணமடைந்தாலும், கொள்கை வீரனாகவே கருஞ்சட்டையுடன் மறைந்தார் என்பதே எங்கள் பெரும் துயரத்திலும், ஓர் ஆறுதலாக உள்ளது.
அண்ணன் சித்தார்த்தனின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல – இந்த இயக்கத்திற்கும் ஒரு பெரிய இழப்பாகும். அவரது நினைவையும், அவர் வாழ்ந்த திராவிடர் கழகத்தின் கொள்கையையும் நாங்களும் வாழ்வில் தொடர்ந்து எடுத்துச் செல்லுவோம் என்றும், எங்கள் பிள்ளைகளும் இந்த இயக்கப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள நாங்கள் அவர்களை வழி நடத்துவோம் என்றும், என் அண்ணன் சித்தார்த்தன் சார்பில் இந்த மேடையில் நின்று உறுதி மொழி அளிக்கிறேன்.
இறுதியாக,
இந்த துயர வேளையில் எங்களோடு துணை நின்று, ஆறுதல் கூறிய எங்கள் குடும்பத்தின் மூத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், அண்ணன் அன்புராஜ் அவர்களுக்கும், வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் அனைத்து வழக்குரைஞர் பெருமக்களுக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை எங்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டு, என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
இவ்வாறு டாக்டர் நாகமணி தனது நன்றி உரையில் கூறினார்.
