சென்னை, பிப்.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் வகையில் 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 105 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மய்யங்களை திறந்து வைத்தார்.
இதில் வருவாய் கோட்ட அளவில் 17 மய்யங்களும், வட்டார அளவில் 88 மய்யங்களும் அடங்கும். தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம்” (TN-RIGHTS Project) மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகையான மறுவாழ்வு சேவைகளை, அவர்களின் தேவைகளுக்கேற்ப இல்லங்களிலும் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேவை மய்யம்
(தமிழ்நாடு ரைட்ஸ்) திட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் திட்ட மதிப்பீட்டு ஆணையத்தின்படி மொத்தம் 94 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மய்யங்களும், 568 வட்டார ஒருங்கிணைந்த சேவை மய்யங்களும் படிப்படியாக செயல்படுத் தப்பட வேண்டும்.
அதன் முதல்கட்டமாக, சென்னை, கடலூர், தென்காசி, தருமபுரி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் 15 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் மற்றும் 66 வட்டார ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் செயல்பாட்டில் உள்ளன.
105 “விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள்” தற்போது கூடுதலாக சென்னை, அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 20 மாவட்டங்களில் 105 “விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள்” 14 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் வருவாய் கோட்ட அளவில் 17 மய்யங்களும், வட்டார அளவில் 88 மய்யங்களும் அடங்கும்.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 32 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மய்யங்களும், 154 வட்டார ஒருங்கிணைந்த சேவை மய்யங்களும் செயல்பாட்டில் இருக்கும்.
வருவாய் கோட்ட அளவிலான மய்யங்களில் வழங்கப்படும் சேவைகள்
மாற்றுத்திறனாளிகளின் நாள்பட்ட மறுவாழ்வு தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரே இடத்தில் சிறப்புக் கல்வி, கண்பார்வை அளவியல் சேவை, கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, இயன்முறை சிகிச்சை, செயல்முறை சிகிச்சை, உளவியல் சிகிச்சை ஆகிய ஆறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இச்சேவைகளை ளை வழங்க தகுதியான வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு, தேவையான சிகிச்சை உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
வட்டார அளவிலான மய்யங்களில் வழங்கப்படும் சேவைகள்
வட்டார மய்யங்களில் சிறப்புக் கல்வி (தகவல் தொடர்பு பிரச்சினைகள் மற்றும் அறிவாற்றல் பிரச்சனைகள்), இயன்முறை சிகிச்சை, உளவியல் ஆலோசனை ஆகிய சேவைகள் வழங்கப்படும். இச்சேவைகள் சமூக சேவை வழங்குநர்கள் மூலம் நியமிக்கப்பட்ட வல்லுநர்களால் மய்யங்களில் சேவைகளை வழங்கப்படும். தேவையெனில் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று சேவைகளை வழங்குவார்கள் ஒருங்கிணைந்த சேவை மய்யங்களின் கூடுதல் சிறப்பம்சங்கள் மாற்றுத்திறனாளிகள் முன்பதிவு செய்யப்பட்ட நேர அட்டவணையின் அடிப்படையில் சேவைகளை பெறும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட அப்பாய்ண்டமென்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டு, ஒழுங்குமுறை சேவை வழங்கல் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பயனாளியின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பல்துறை வல்லுநர்கள் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டத்தை தயாரித்து வழங்குவார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப ஒரே நபருக்கு தனிப்பட்ட சிகிச்சையும், தேவையான இடங்களில் குழு சிகிச்சையும் வழங்கப்படும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, குழந்தைகளின் முன்னேற்றத்தில் குடும்பத்தின் பங்கு வலுப்படுத்தப்படும். சிகிச்சை தொடர்ச்சியை உறுதி செய்ய இல்லங்களுக்கே சென்று சேவைகள் வழங்கப்படுவதுடன், தொடர் கண்காணிப்பு முறையும் செயல்படுத்தப்படும்.
இந்த மய்யங்களானது அரசின் பிற துறைகள் இயங்கும் பகுதிகளில் அமைந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் அரசின் பிற சேவைகளை பெறுவதுடன் அவர்கள் மறுவாழ்வு சிகிச்சை பெறுவதும் மிக எளிதாகிறது.
இம்மய்யங்கள் ஒன்றிய அரசால் வரையறுக்கப்பட்ட ஹார்மோனைஸ்டு கைடுலைன்ஸ் 2021-படி தரமான கட்டட வடிவமைப்புடன், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணுகல் வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எம்.லட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
