• போரூர் – பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும்
• கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு
• தூத்துக்குடியில் ரூ.5,200 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்
• உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி
சென்னை, பிப். 17– தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் இன்று (17.2.2026) தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை உரையை படித்தார். அதன் விவரம் வருமாறு:
2026-2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வாவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை வரலாற்றுப் பெருமை மிகுந்த இந்த சட்டமன்றத்தின்முன் வைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்வது மட்டுமின்றி, நாட்டிலேயே இரட்டை இலக்க உயர் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் நாடே போற்றும் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி, நல்வழி காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அண்மையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை 3000 ரூபாயும், கூடவே கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2000 ரூபாயும் சேர்த்து, மொத்தம் அய்ந்தாயிரம் ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்ட போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது.
விடியல் பயணம்
மகளிரின் பயணச் செலவிற்கான சுமையைக் குறைத்திடவும், அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும். அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்ல வழி வகுக்கும் விடியல் பயணம் திட்டத்தின் மூலம், இதுவரை 381 கோடி முறை பாதுகாப்பான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிப்பை நமது மகளிர் பெறுகிறார்கள்.
அரசு வேலை வாய்ப்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இடஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று
2026-2027ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை
வேளாண்மை அறிக்கையை முறையே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தனர்
சென்னை, பிப். 17- தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026-2027ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடர் இன்று (17.2.2026) காலை 9.30 மணியளவில் கூடியது.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித்தலைவர், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருகையை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் சுட்டப் பேரவையைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் எழுந்து 2026ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார். இதை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை இடைக்கால நிதி நிலை அறிக்கையை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவைக்கு அளித்து உரையாற்றுவார் என பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்ததை அடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார். இதையடுத்து பேரவையின் இன்றைய நிகழ்வு முடிந்தது.
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இத்தகைய முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக, தொழில் வளம் பெருகி, 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 1119 சதவீதம் எனும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
புதிய கப்பல் கட்டும் தளம்
கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மய்யமாக தமிழ்நாடு உருவெடுக்கும். சிப்காட் நிறுவனம் வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) மூலம் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. கூடுதலாக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு உலகளாவிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உறுதியான முதலீட்டுப் பொறுப்புறுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,282 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைவினைஞர்களுக்கு நிதி உதவி
இருபத்தைந்து வகையான கைவினைத் தொழில்களில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு நிதியுதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், இதுவரை 405 கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் 83 கோடி ரூபாய் மானியம் பெற்றுத் தர 23,879 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் 6,121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,087 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 3,673 பேருந்துகளை, முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 373 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 380 பசுமை மின் பேருந்துகள் 288 கோடி ரூபாய் மதிப்பீட்டில், போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
1,857 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில், போக்குவரத்துத் துறைக்கு 13,062 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ
மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் பகுதியை இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதி இரயில்வே வாரியத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் வழித்தடம், வடபழனியில் தற்போதுள்ள மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது. 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட 14.6 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள்
தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,112 வீடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும், 30.000 வீடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றிடும் நோக்கில் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய சுயதொழில் திட்டத்தின் கீழ், இதுவரை 10 கோடி ரூபாய் நிதியுதவி.
சிறுபான்மையினர் நலன்
கடந்த அய்ந்து ஆண்டுகளில் 90,773 சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர். தொன்மையான பள்ளி வாசல்கள் மற்றும் தர்காக்கள் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பழமையான தேவாலயங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 16 கோடி ரூபாயும், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக 20 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த அய்ந்து ஆண்டுகளில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் மூலம் 2597 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 3,000 ரூபாயில் இருந்து 5.000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த அய்ந்தாண்டுகளில் உலமாக்களின் ஓய்வூதியத்திற்காக 270 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஹஜ் ‘புனித’ யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1634 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை
கடந்த அய்ந்து ஆண்டுகளில் 12,931 திருக்கோவில்களில், 8,100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 4,180 திருக்கோவில்களில் திருக்குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசு அலுவலர்கள் நலன்
அரசின் திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி, மக்கள் நலனைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்பதில் இந்த அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கி வருகிறது. அரசின் நிதி வருவாய் ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மன்பான்மையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர்கள் நலன் காக்க, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நமது அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 01012020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கியது:
- அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப் படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியது:
- அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு:
- பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு அய்ந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாய்:
- அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் அய்ம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தியது:
- அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் அய்ந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது.
- அரசுப் பணியாளர்களுக்கான விழா முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும். ஓய்வூதியதாரர்களுக்கான விழா முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது:
- ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கியது:
பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தியது என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஓய்வூதியத் திட்டம்
இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில் அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள். அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம். குறைந்தபட்ச ஓய்வூதியம். ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார நிலை
உற்பத்தியில் வலுவான கட்டமைப்பு, சேவைத் துறையில் வேகமான வளர்ச்சி மற்றும் பொது மற்றும் தனியார் முதலீடுகளின் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக நீடிக்கிறது. 202425ஆம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே பெருமாநிலம் என்ற தனித்துவமான சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.
ஏற்றுமதிக்கான தயார்நிலை, மின்னணு மற்றும் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, புதிய தொழில் தொடக்கங்களுக்கு ஏதுவான சூழ்நிலை, தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு, உயர்கல்வியில் உயர்ந்த மொத்த சேர்க்கை விகிதம் மற்றும் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் 17 நிறுவனங்களை கொண்டிருத்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு 15:111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதி நிருவாகம்
மக்கள் அனைவருக்கும் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்வதற்கு, நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டடங்கள், மனிதவளம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த அய்ந்தாண்டுகளில், 25 சிறப்பு நீதிமன்றங்கள் LUL 82 நீதிமன்றங்கள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள், சட்ட அதிகாரிகள் வளாகம் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக, கடந்த அய்ந்தாண்டுகளில் 1,118 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிருவாகத்திற்கு 2,455 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதாரச் சூலில் நாட்டின் வளர்ச்சியைக் காட்டிலும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது அதிகமாக உள்ளது. இது ஒரு நேர்மறையான சூழல் ஆகும். மாநில வளர்ச்சி இதே போன்று நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வள ஆதாரங்களை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வரிவசூல் திறனை மேம்படுத்துதல் போன்ற வகைகளால் வருவாய் வரவுகள் திடமான வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாநில தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை சட்டத்திற்குட்பட்டு கொள்கையான அடிப்படை நடவடிக்கைகளின் நிதி ஒருங்கிணைப்பு மூலமாக மாநில அரசு தொடர்ந்து நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் மற்றும் வளர்ச்சிக்கான முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரை நிகழ்த்தினார்.
