‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, பிப். 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் கருணாநிதி நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் 7,300 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசிய முக்கிய அம்சங்களாகக் கூறியதாவது:
விடியல் பயணம்
தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் மேற்கொண்ட இலவசப் பயணங்களின் எண்ணிக்கை விரைவில் 900 கோடியை நெருங்க உள்ளது.
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கை
இந்தியாவிலேயே முதன்முறையாக, 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
“மக்களுக்கான வியக்கத்தக்க திட்டங்களைச் செயல்படுத்திவரும் முதலமைச்சர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களின் பேராதரவுடன் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழுத் தலைவர் க.தனசேகரன், “நடிகர் விஜய் வளர்ந்தது, சம்பாதித்தது எல்லாம் இந்த விருகம்பாக்கம் தொகுதியில்தான். ஆனால், இங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மகளிரில் யாராவது ஒருவராவது அவரால்தன்னால் பயன் பெற்றுள்ளதாகச் சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
இவ்விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சின்னம் தொடர்பான புகார் மீது
நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஏன்?
டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, பிப். 17- அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், சின்னம் தொடர்பான புகார்கள் மீது எவ்வளவு காலத்திற்குள் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஏற்கெனவே பலமுறை உத்தரவிட்டும், புகார்கள் மீது ஆணையம் ஏன் இன்னும் தீர்வு காணவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சின்னம் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் (ஓ.பி.எஸ் அணி, புகழேந்தி மற்றும் பிறர்) மனுக்கள் வந்துள்ளதால், அனைத்தையும் பரிசீலிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக ஆணையம் தெரிவித்து வருகிறது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23.2.2026 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய நாள் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தையும், காலக்கெடுவையும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த வழக்கு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்தாலும் மனிதாபிமானம் மரிக்கவில்லை!
உடல் உறுப்புகள் கொடை மூலம்
5 பேருக்கு வாழ்வளித்த மாணவி
அரசு சார்பில் இறுதி மரியாதை
காரைக்குடி, பிப். 17- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டன. மனிதாபிமானத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவைப் பாராட்டி, மாணவியின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
மித்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா – பவானி தம்பதியரின் மகள் தீபா (20). காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த இவர், கடந்த 6ஆம் தேதி புதுவயல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாணவி தீபா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இக்கட்டான இந்தச் சூழலிலும், தனது மகள் மற்றவர்கள் மூலம் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவரது உடல் உறுப்புகளை கொடை செய்ய பெற்றோர் முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவப் பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. மாணவியின் உடல் மித்திரங்குடி கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின்படி, உடல் உறுப்பு கொடை செய்த மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் நேரில் சென்று மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
கிராம மக்கள் மற்றும் சக மாணவர்கள் திரண்டு வந்து, “இறந்தும் உயிர் கொடுத்த” மாணவி தீபாவிற்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.
