புத்தகங்களை வாசிப்பது என்பது நமது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல – உடல் நலத்தையும், உள்ள வளத்தையும் பல மடங்கு பெருக்கும் ஓர் அற்புத மாமருந்தாகும்.
‘தினத்தந்தி’ நாளிதழின் இணைப்பான (15.2.2026) ‘தேவதை’யில் செங்கற்பட்டு திருமிகு எம். உமா மகேஸ்வரி அவர்கள் ‘‘புத்தக வாசிப்பு… சுவாரசியமான தகவல்கள் 10’’ என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு பக்கக் கட்டுரையை நமது வாழ்வியல் வாசகப் பெரு மக்களுக்காக வெளியிடுகிறோம்.
புத்தக வாசிப்பு குறித்த
சுவாரசியமான 10 தகவல்கள்…
‘வெறும் 6 நிமிடங்கள் புத்தகம் படித்தாலே போதும், உங்கள் மன அழுத்தம் 68 சதவீதம் வரை குறையும். இது பாடல் கேட்பது அல்லது நடைப்பயிற்சி செய்வதை விட வேகமாக மனதை அமைதிப்படுத்துகிறது’ என்று ஆய்வுகள் கூறுகின்றன.
‘புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். படிக்காதவர்களை விட சராசரியாக 2 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள்’ என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பானது மூளையை சுறுசுறுப்பாக வைப்பதுடன், வாழ்நாளையும் அதிகரிக்கிறது.
பழைய புத்தகங்களில் இருந்து வரும் அந்த தனித்துவமான வாசனைக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் ‘பிப்லியோஸ்மியா’ (Bibliosmia). காகிதம், மை மற்றும் பசை ஆகியவை காலப்போக்கில் சிதைந்து இந்த வாசனையை உருவாக்குகின்றன. இது பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
கதைகள் மற்றும் நாவல்களை படிப்பவர்களுக்கு ‘எம்பதி’ எனப்படும் பச்சாதாபம் அல்லது பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருக்கும்.
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அப்படியே மூளைக்கு வாசிப்பு. இது மூளையின் இணைப்புகளை வலுப்படுத்துகிறது. தொடர்ந்து படிப்பது, அல்சைமர், டிமென்சியா போன்ற மறதி நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.
நாம் எவ்வளவு அதிகமாக படிக்கிறோமோ அவ்வளவு புதிய வார்த்தைகளை தெரிந்துகொள்கிறோம். இது நம் பேச்சு மற்றும் எழுத்துத்திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
நிறைய புத்தகங்களை வாங்கி, அவற்றைப் படிக்காமலே அடுக்கி வைக்கும் பழக்கத்துக்குப் பெயர், ‘சுண்டோகு’ (Tsundoku). இது பல புத்தக பிரியர்களிடம் இருக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம்.
தூங்குவதற்கு முன் செல்பேசி, தொலைக் காட்சி என மின்னணுத் திரைகளை பார்ப்பதை விட, புத்தகம் வாசிப்பது சிறந்த தூக்கத்தைத் தரும். இது மனதைத் தளர்த்தி, தூக்கத்துக்கான சுழற்சியை மூளைக்கு அறிவுறுத்துகிறது.
ஒரு நாவலை படித்து முடித்த பிறகும்கூட, சில நாட்களுக்கு மூளையின் நரம்பியல் இணைப்புகளில் மாற்றம் இருக்கும். அதாவது, ஒரு நல்ல புத்தகம் உங்களை உடல் ரீதியாகவும் மாற்றக்கூடியது.
சராசரியாக ஒரு நபர் நிமிடத்துக்கு 200 முதல் 300 வார்த்தைகளைப் படிப்பார். ஆனால், உலகின் அதிவேக வாசகர்கள் நிமிடத்துக்கு 4 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் படிக்கும் திறன் கொண்டவர்கள்!
வாசிப்பு என்பது ஒரு தனி உலகத்துக்கான திறவுகோல். அது நமக்கு அறிவை மட்டுமல்ல – ஆரோக்கியத்தையும், மனஅமைதியையும் அள்ளித் தருகிறது. நாள்தோறும் சில பக்கங்களையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்றுவோம்.
– எம்.உமா மகேஸ்வரி, செங்கல்பட்டு.
(நன்றி : ‘தினத்தந்தி’ இணைப்பு (15.2.2026)
