உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில், சமீபகாலமாக ‘இலவசப் பேருந்துப் பயணம்’ பெரும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி டில்லி ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பரவி வரும் இலவசப் பேருந்துத் திட்டங்கள் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் பல மாநிலங்கள் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு ‘மகளிர் விடியல் பயணம்’, கருநாடகா ‘ஷக்தி திட்டம்’, தெலங்கானா ‘மகாலட்சுமி திட்டம்’ டில்லி ‘பிங்க் டிக்கெட்’, ஆந்திரா ‘ஸ்திரீ சக்தி திட்டம்’,
பாஜக + ஜனசேனா கூட்டணி அரசு, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களிலும் இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் முன்வைக்கும் முக்கிய வாதம் என்னவென்றால், ‘‘பேருந்துகள் இலவசமாக்கப்படும் போது மக்கள் மெட்ரோ ரயில்களைத் தவிர்ப்பார்கள்’’ என்பதாகும். ‘‘இதன் விளைவாக, ‘பொருளாதார இழப்பு’ ஏற்படுகிறது; மெட்ரோ திட்டங்களுக்காக முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்கிறது. சாலையில் அதிக பேருந்து மற்றும் வாகனப் புழக்கம் அதிகரிப்பதால் நேர விரயம் ஏற்படுகிறது; பொதுப் போக்குவரத்தில் ரயில் பயன்பாடு குறையும் போது, கார்பன் வெளியேற்றம் தொடர்பான சிக்கல்கள் எழுகின்றன’’ என்று தன் வாதத்தில் கூறுகிறார்.
பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியிலோ இருக்கும் மாநிலங்களில் (ஆந்திரா, டில்லி) – இதே போன்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, பிரதமர் மோடி குறிப்பாகத் தமிழ்நாட்டை மட்டும் விமர்சிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
‘இலவசம்’ என்பதற்கும் ‘சமூக நலத்திட்டம்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசு எப்போதும் சமூக நலத் திட்டத்தில் முன்னணியில் இருக்கிறது. இதைச் சிதைப்பதன் மூலம் மாநில அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிக்க மோடி முயல்கிறார்.
தென்னிந்தியாவில் பா.ஜ.க. காலூன்ற நினைக்கும் முக்கிய மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால், இங்குள்ள மக்களைக் கவரும் திட்டங்களின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்க முயன்றால் அவர்கள் அதில் தோல்வி அடைவார்கள்.
ஒரே திட்டத்தை ஆந்திராவில் கூட்டணி அரசு செய்யும் போது அமைதியாக இருப்பதும், தமிழ் நாட்டில் செய்யும்போது ‘பொருளாதாரப் பேரழிவு’ எனச் சித்தரிப்பதும் அரசியல் முரண்பாடு தானே!
தொடக்கத்தில் இலவசங்கள் அளிப்பது குறித்து ‘சண்டமாருதம்’ செய்தார். ஆனால், பீகாரில் பிஜேபி – அய்க்கிய ஜனதாதளத்தோடு (நிதிஷ்குமார்) தேர்தல் கூட்டணி வைத்த திரு. நரேந்திர மோடியின் பிஜேபி என்னென்னவெல்லாம் செய்தது! திடீர் என்று ‘முக்கிய மந்திரி மஹிலா ரோஜ்கர் யோஜனா’ என்ற பெயரில் பேரவைத் தேர்தலுக்கு முன்பு 75 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.பத்தாயிரம் வழங்கப்பட்டதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது – என்பதை பிரதமர் மோடி விளக்குவாரா? 2025 செப்டம்பர் 26 அன்று இதே பிரதமர் மோடிதானே தொடங்கி வைத்தார்! இலவச மின்சாரம்,வேலை கிட்டாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் – இவை எல்லாம் பிரதமர் மோடி கூறும் குற்றப் பத்திரிகையில் இடம் பெறாதா?
‘‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லும் வழக்கு மொழிதான் நினைவிற்கு வருகிறது.
‘பி.எம்.கேர்ஸ்’ நிதியின் பின்புலம் என்ன? அதைப்பற்றி எல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்விக் கேட்கக் கூடாதாம்! நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல; பிஜேபி என்னும் பாசிச ஆட்சி! அவர்கள் வைத்ததே சட்டம். அதிக ஆட்டம் ஆபத்து– மக்கள் விரைவில் விழிப்பர் – பாடம் கற்பிக்கவும் செய்வர்! இது கல்லின் மேல் எழுத்தாகும்!
