திருவள்ளூர், பிப். 16- “கீழடி அகழாய்வுக்குப் பிறகு மேலும் பல அகழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண் டிருப்பதால், தமிழ்நாட்டின் பெருமை வெளிவந்து கொண் டிருக்கிறது” என, இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
திருவள்ளூரில் பொது நூலகத் துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்தும், திருவள்ளூர் மாவட்டத்தின் 5ஆவது புத்தகத் திருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப் புத்தகத் திருவிழாவில், நேற்று முன்தினம் (14.2.2026) இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்று, ‘அகழாய்வுகளின் மூலம் வெளிப்படும் தமிழர் தொன்மை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பின்னர், அமர்நாத் ராமகிருஷ்ணணா செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: சமீபத்திய கல்வெட்டு கருத்தரங்கில் பேசிய இரு வெளிநாட்டு அறிஞர்கள், எகிப்தியர்களின் கல்லறை களில், 8 இடங்களில் 30 தமிழ் கல்வெட்டுகள் கிடைத் துள்ளதாகவும், இந்தக் கல்வெட்டுகள், கோயில்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் போன்று இருந்ததாகவும் தெரிவித்துள் ளனர். இதன் மூலம், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எகிப்தில் வாணிகம் செய்தது உறுதியாகியுள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துக் கொடுத்து விட்டேன். விரைவில் அதனை ஒன்றிய அரசு வெளியிடும் என நம்புகிறேன். அந்த அறிக்கை வெளியானால் ஆய்வுலகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆய்வறிக்கையில் திருத்தங்கள் செய்ய முடியாது எனக் கூறி கொடுத்துள்ளேன். இதுவரையில் தொல்லியல் என்பது என்னவென்று தெரியாத நிலையில், கீழடி அகழாய்வுக்குப் பிறகு பல அகழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், தமிழ்நாட்டின் பெருமை வெளிவந்து கொண்டிருக்கிறது. அகழாய்வுப் பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பாக்கம், குடியம், பட்டறைபெரும்புதூர் ஆகிய இடங்களில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளும்போது பல தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
