விசாகப்பட்டினம்: இந்திய நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) 54ஆவது நிறுவன நாள் மற்றும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, விசாகப்பட்டினம் மாவட்ட பொது நூலகத்தில் நடைபெற்றது.
இந்திய நாத்திக சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜே. ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், “இந்திய அரசியலமைப்பு – தற்போதைய சூழல்” என்ற தலைப்பில் தலைவர்கள் உரையாற்றினர்.
பெரியாரியப் பாதையில்
எழுத்தாளரும், ‘லீடர்’ நாளிதழின் ஆசிரியருமான வி.வி. ரமணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “ஜெய கோபால் அவர்கள் பெரியாரின் கொள்கையை ஏற்று, அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் வாழ்நாள் முழுவதும் நின்று மக்கள் உரிமைகளுக்காக போராடினார். அவர் தனது குடும்பத்தையே பெரியாரிய இயக்கத்தில் ஈடுபடுத்தியது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்,” எனப் புகழாரம் சூட்டினார்.
மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அவர் உருவாக்கிய ‘அறிவியல் மாணவர் கூட்டமைப்பு’ (Scientific Students Federation) சமூக மாற்றத்திற்கு முக்கியப் பங்காற்றியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.வி. சத்தியநாராயண மூர்த்தி பேசுகையில்: இந்திய அரசியலமைப்பை ஆட்சி யாளர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்து, மக்களின் உரிமைகளை நசுக்குகின்றனர். அரசியலமைப்பை எதிர்த்த சக்திகளே இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, சட்டங்களை மாற்றியமைப்பதோடு கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்துகின்றனர்.
மக்களாட்சியின் நான்காவது தூணான ஊடகங்கள் இன்று ஆளும் தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவது கவலைக்குரியது.
ஆந்திர மாநில நாத்திக சங்கத் தலைவர் சிறீராமமூர்த்தி ஆகியோர் பேசுகையில், நாத்திக சங்கம் என்பது மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மட்டும் செயல்படுவதல்ல, அது மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடும் இயக்கம் என்று தெளிவுபடுத்தினர். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆந்திர மாநில பீம் சேனா அமைப்பின் தலைவர் ரவி சித்தார்த்தா கூறும் போது நாட்டை மதவாத நாடாக மாற்ற நடக்கும் சதித்திட்டங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்
அகில இந்திய முற்போக்கு அமைப்பைச்சேர்ந்த கே. வெங்கடேஸ்வரலு தனது உரையில் ஜாதிய அமைப்பு மற்றும் மனுஸ்மிருதி குறித்து ஆழமான புரிதல் கொண்ட ஜெயகோபால், அவற்றை எதிர்த்துப் போராட மக்களைத் தயார்படுத்தினார்.
ஒற்றுபட்ட மகளிர் உரிமை யு. எம்.எஸ் அமைப்பின் சார்பில் பேசிய டி. லலிதா பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் திணிக்கும் மக்கள் விரோதச் சித்தாந்தங்களை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
இந்நிகழ்வில் அறிவியல் மாணவர் கூட்டமைப்புத் தலைவர் வேதாந்த மவுரியா, தலித் உரிமைப் போராட்டத் தலைவர்கள் மற்றும் தெலங்கானா மாநில இந்திய சட்ட வல்லுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சைனி நரேந்தர், வழக்குரைஞர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆர்.எஸ். முரளி நன்றி உரையாற்றினார்.
