தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் பாஜக தலைவர்களுக்குத் தொற்றிகொண்டது. 4 ஆண்டுகளாக இந்தப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்காத மோடி அமித்ஷா கூட்டணிக்கு தற்போது தமிழ்நாடு பக்கம் காற்று அடிக்கத் தொடங்கி உள்ளது
ஆனால் அவர்கள் இங்கு வந்தால் எந்த ஒரு பலனும் ஏற்படாது என்பதால் வருகையை உறுதி செய்யாமல் தேதியை தள்ளிப்போட்டுக்கொண்டே உள்ளனர்.
அமித்ஷா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மதுரை வருவதாக இருந்தது – நாளிதழ் செய்திகளின்படி!
ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரம் அவ்வளவாக பலனளிக்கவில்லை; ஆகவே சிறிது நாள் ஆகட்டும் என்பதால் அவர் புதுக்கோட்டைக்கு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வந்தார்
மதுரைக்குச் சென்று குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும், நாளிதழில் செய்திகள் வந்தன. ஆனால் அந்தத் திட்டம் தங்களுக்கு பலனளிக்காது என்பதால் அவர் புதுக்கோட்டைக்கு மட்டும் சென்று பொங்கல் வைத்துவிட்டுத் திரும்பி விட்டார்.
அதேபோல் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆம் தேதி என மூன்று நாள்கள் மோடி தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாட இருக்கிறார் என்று ஆயத்தங்கள் ராமேசுவரத்தில் நடந்தன. மேலும் தென் மாவட்டங்களிலும் ஒரு நாள் அவர் விவசாயிகளுடன் உரையாடும் திட்டமும் இருந்தது. குறிப்பாக மொழிபெயர்ப்புச் செயலி ஒன்றை உருவாக்கி, அவர் பேசுவதைத் தமிழில் வருவது போன்று சோதனை பார்க்கும் திட்டம் இருந்தது. மேலும் மதுரைக்குச் செல்வதாகவும் அல்லது தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தை அவர் இருக்கும் பகுதிக்கு அழைப்பதாகவும் திட்டம் இருந்தது
ஆனால் அமித்ஷா வந்து சென்ற பிறகு தமிழ்நாட்டிற்குப் பொங்கல் விழா அன்று போய் எந்தப் பலனும் இல்லை என்று அறிக்கை கொடுத்து விட்டார். இதனால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அதன்பிறகு பொங்கல் முடிந்து ஜனவரி 28ஆம் தேதி மதுரையில் ஒரு நாள் பொதுக்கூட்டம் வைப்பதாக இருந்தது; இதற்காக மதுரை பாண்டிகோவில் பகுதியில் இடமும் முடிவு செய்யப்பட்டு அவர்கள் பாணியில் பூமி பூஜை செய்து பந்தக்காலும் நட்டார்கள்
ஆனால் மதுரை நிகழ்ச்சி எந்த ஒரு பயனும் அளிக்கப் போவதில்லை. திருப்பரங்குன்றம் விவகாரமும் கைவிட்டுப் போய்விட்டது என்று அறிக்கை சென்று விட்டதால், மதுரை முயற்சியையும் ரத்து செய்துவிட்டு சென்னை மதுராந்தகத்தில் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
ஆனால் அவர் தமிழ்நாட்டில் வந்து சென்றது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருந்தும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வண்டியைத் திருப்பி உள்ளார். 02.02.2026 – அன்றிலிருந்தே மோடி பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் தமிழ்நாடு வருகிறார் என்ற செய்திகள் வந்தன.
இந்த நிலையில் கடந்த 12.2.2026 அன்று அவர் பிப்ரவரி இறுதியில் அதாவது 27 ஆம் தேதி அவரது தமிழ்நாடு வருகை உறுதி செய்யப்பட்டது.
மீண்டும் அவரது வருகை மார்ச் மாதம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
எல்லாம் அறிவிப்புகளோடு சரி!
அதுவும் என்னாகுமோ என்பது கேள்விக்குறிதான்!
கெஜ குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. பருப்பு வேகப் போவதில்லை.
தமிழ்நாட்டு மண்ணின் அடி நீரோட்டம் மிகவும் வித்தியாசமானது! ஒரு நூற்றாண்டுக் காலம் தந்தை பெரியார் என்ற சிந்தனை நன்றாக உழுது இந்த மண்ணைப் பக்குவப்படுத்தியுள்ளது.
பார்ப்பனீயம் எந்த வேடம் தரித்து, கழைக் கூத்தாடினாலும், சல்லிக் காசுக்குப் பயன்படப் போவதில்லை. பிஜேபி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சியின் விளம்பர முத்திரையாகவும் கூடப் பெரியார் இருக்கத்தான் செய்வார்!
பெரியார் என்ற பிம்பத்தை உடைக்கலாம் என்று கூலிகளைத் தயார் செய்கிறார்கள்.
அந்தக் கூலிகளும் அடையாளம் காணப்பட்டு அவமானப்படுவது தான் மிச்சம்! மீண்டும் மீண்டும் சொல்கிறோம் – இது பெரியார் மண்! தென்றலாகவும் இருக்கும். தேவைப்பட்ட நேரத்தில் எரிமலையாகவும் வெடிக்கும் – எச்சரிக்கை!
