ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (6) தலையில் தேங்காய் உடைப்பது அறிவுக்கு உகந்ததா?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வது பல இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து ஒரு விரிவான நிகழ்வையும், அது சார்ந்த மருத்துவரின் கருத்தையும், இச்செயல் சரியா? என்பதையும் பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு கீழே தெளிவாகக் காண்போம்.

திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டம், மகாதான புரம்  மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் ஓர் அதிர்ச்சியூட்டும் ஆபத்தான அறிவுக்குப் பொருந்தாத வேண்டுதல் நிறைவேற்றப்படுகிறது.

திருவிழாவின் இரண்டாம் நாள் ஆண்களும் பெண்களும் வயதானவர்களும், வாலிபர்களும் அதிகாலையிலேயே காவிரியில் குளித்துவிட்டு வந்து கோயிலுக்கு முன்னால் அமர்ந்து கொள்கிறார்கள்.

அம்மன் முன்பாகத் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதே இந்த வேண்டுதல். பூசாரியின் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும் என்பது அய்தீகம்.

“பூசாரிகளே! சீக்கிரம் குளிச்சிட்டு வாருங்கள், இங்கு தாசில்தார் மற்றும் பெரிய போலீஸ் ஆபீசருங்க எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்காங்க” என்று அறிவிப்பு விடுகிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

வாட்டசாட்டமான நான்கு இளைஞர்கள் புடைசூழ சாமியாடியபடியே வருகிறார் பெரியசாமி என்னும் பூசாரி.

பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் ஒரு பகுதியிலிருந்து தலையில் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கிறார் பூசாரி. முன்னால் செல்லும் இரு இளைஞர்கள் தேங்காய் உடைக்கப்படப்போகும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

அந்தப் பக்தர் கண்களை மூடிப் பல்லைக் கடித்தபடி இருக்கும் நிலையில், பூசாரி சாமியாடியபடியே கையிலிருக்கும் தேங்காயை எடுத்து ‘மடேர்’ என்று தலையில் அடிக்கிறார். சிதறிப்போய் விழும் தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கிய படியே எழுந்து கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்தப் பக்தர் போக, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்கிறார் இன்னொருவர்.

இப்படியே சளைக்காமல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காயை உடைக்கிறார் பூசாரி, தேங்காய் உடையாமல் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தால் இரண்டாவது முறையாக தேங்காய் உடைக்கப்படுகிறது.

ரத்தம் வருவது கண்டு பதறியபோது. “அது ஒண்ணுமில்லை; தெய்வக் குத்தம்தான் காரணம்; இல்லைன்னா அவுங்க சுத்தமா வந்திருக்க மாட்டாங்க” என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.

வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இளைஞர் மூவர் இருந்தனர். அவர்களை விசாரித்தபோது.

”நாங்க மூணு பேரும் பெங்களூர்ல ஒரு ‘ஸாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட்’ கம்பெனி வச்சிருக்கோம். போன மாசம் அமெரிக்காவில் ஒரு கம்பெனிக்கு ‘கொட்டேஷன்’ கொடுத்திருக்கோம், அந்த ‘ஆர்டர்’ எங்களுக்கே கிடைக்கணும்னு அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டுத்தான் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ள இங்கே வந்திருக்கோம்” என்றனர்.

இப்படித் தலையில் தேங்காய் உடைப்பதால் பின்னால் ஏதும் பாதிப்பு வருமோ என்கிற சந்தேகத்துடன் திருச்சியில் பிரபல மருத்துவர் வ.ஜெயபாலைச் சந்தித்துக் கேட்டபோது, “இப்படி தேங்காய் உடைக்கிறது மட்டுமில்லை; தீ மிதிக்கிறது, அலகு குத்தறது, அங்கம் புரள்வது எல்லாமே ‘வில்பவர்’தான். கடவுள்மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையால் அந்த ‘வில்பவர்’ அவங்களுக்குக் கிடைக்கிறது. கராத்தே வீரர்கள் செங்கல் உடைப்பதும், சர்க்கஸ்காரர்கள் ‘டியூப் லைட்’ மீது புரள்வதும் கூட இதன் அடிப்படையில்தான் எனவே, அது வேண்டுதலாகட்டும் அல்லது நாம் செய்யும் எந்தவொரு காரியமாகட்டும் முழு ஈடுபாடும் மன உறுதியும் நிச்சயம் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்குத் தலையில் ரத்தம் வருவது கூடத் தோல் காயந்தான், மண்டை ஓட்டில் எந்தப் பாதிப்பும் இருக்காது” என்றார் அவர்.

(‘தமிழன் எஸ்ஸ்பிரஸ்’ வார இதழில் 4-10. செப்டம்பர் 1996. 21ஆம் பக்கத்தில் வெளியான செய்திக் கட்டுரையின் பகுதியே மேலே உள்ளது)

‘இது ஒரு விநோத வேண்டுதல்’ என்று ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ தலைப்பிட்டிருக்கிறது. இது விநோத வேண்டுதல் இல்லை: விபரீத வேண்டுதல். நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாகவேதான் வாழ்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் வேண்டுதல்.

இரண்டுபேர் தலையை அமுக்கிப் பிடிக்கிறார்களாம். ஓங்கித் தலையில் அடித்துத் தேங்காயை ஒருவன் உடைக்கிறானாம். நினைக்கவே அதிர்ச்சியாக, வேதனையாக. அருவெறுப்பாக ஏன் வெட்கமாகக்கூட இருக்கிறது. இந்த அறிவியல் காலத்தில் இப்படியும் அறிவற்ற செயலா? வினா எழுகிறது.

ஆனால். ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு இது விநோதமாக இருக்கிறது! வேதனைப்படவில்லை. அதிர்ச்சி அடையவில்லை.

காட்டுமிராண்டிச் செயல் என்று கண்டனம் தெரிவிப்பார்கள் என்று கட்டுரையைப் படித்தால். ஒரு டாக்டரின் பேட்டியைப் போட்டு. அது அறிவுக்கு உகந்த செயல் என்பதாக முடிக்கின்றனர்.

‘வில்பவர்’ பற்றி டாக்டர் கூறி இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்துகிறார்.

‘வில்பவர்’ என்றால் என்ன? விளக்கம் தருவரா டாக்டர். கராத்தே வீரன் செய்வதை இதில் வந்து ஒப்பிடுகிறார்.

கராத்தே வீரன் பயிற்சியில் தன் சக்தியை, மனதை ஒருமுனைப் படுத்தி அக்காரியங்களைச் செய்கிறான். அவ்வாறு ஒருமுனைப் படுத்தும் ஆற்றலைப் பல ஆண்டு பயிற்சிக்குப் பிறகு பெறுகிறான்.

இதில் கடவுள் சக்திக்கோ, மாய மந்திரங்களுக்கோ வேலையில்லை. ஆனால், தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கிறவன் எந்தப் பயிற்சி மேற்கொண்டான்?

அவன் தலையை இரண்டுபேர் அமுக்கிப் பிடித்துத்தான் தேங்காய் உடைக்கிறார்கள் என்பதிலிருந்தே அவன் தன்னை ஒரு நிலைப்படுத்த முடியாதவன் என்பது அர்த்தமாகிறது. அப்படிப்பட்ட பக்தன் தலையில் தேங்காய் அடித்தால் பாதிப்பு வராமல் எப்படியிருக்கும்?

‘இரத்தம் ஒழுகினால் கூட மண்டை ஓட்டில் எந்தப் பாதிப்பும் வராது’ என்று உத்திரவாதம் கொடுக்கிறார். இவர் என்ன டாக்டரா அல்லது கோயில் புரோக்கரா?

தேங்காய் உடையாமல் இரத்தம் வந்தாலும் கூட, அதே தலையில் மறுபடியும் அடித்து உடைக்கிறானாம்! எவ்வளவு கொடுமை!

மண்டை உடைந்தால் அது தெய்வக் குத்தமாம்: சுத்தமாக வந்திருக்க மாட்டார்களாம். ‘ஓர் அறிவியல் மேதை’ விளக்கம் அளித்தானாம் இப்படி! அதையும் பத்திரிகையில் வெளியிடுகிறார்கள்.

கருணை வடிவான கடவுள் என்கிறார்கள். அது இப்படிப்பட்ட செயலை ஏற்குமா? நன்மை வேண்டி இப்படிப்பட்ட கொடிய வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தனுக்கு அக்கடவுள் தண்டனை கொடுக்குமா? அப்படியென்ன பிரேமானந்தா செய்யாத தவறை அவன் செய்துவிட்டான்?

மண்டை உடைந்தவர்கள் குற்றம் செய்தவர்கள்; உடையாதவர்கள் நல்லது செய்தவர்களா?

இப்படி ஒரு கொடூரப் பிரார்த்தனை தேவையா?’

என்று கண்டிப்பதற்குப் மாறாக, அதில் ஒரு மகத்துவம் இருப்பதாகக் காட்ட முயலும் பத்திரிகையும், தன் அரைவேக்காட்டுத்தனத்தால் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிய மருத்துவரும் கண்டனத்துக்கு உரியவர்கள்.

நரம்பியல் வல்லுநர்களைக் கொண்ட ஒரு கூட்டத்திற்குத் ஏற்பாடு செய்யட்டும். அப்போது அவர்கள் முடிவு சொல்லட்டும் இது காட்டுமிராண்டிச் செயலா, கடவுள் சக்தியா? அல்லது வில்பவரா? என்று மருத்துவர் வல்லுநர் கூட்டத்தில் தன் கருத்தை நிலைநாட்டுவாரா?

அலகு குத்துவது, அக்கினி மிதிப்பது எல்லாம் ‘will power’ என்கிறார். அந்தச் சக்தியால் நீறு நீக்காத, மேடுபள்ளமான நெருப்புப் பரப்பில், நிலையாக நெருப்பில் நிற்க யாராலாவது முடியுமா?

ஒரு கரண்டி நெருப்பை உள்ளங்கையில் ஏந்த முடியுமா?

டாக்டர் என்பவர் தன் தொழிலைப் பார்க்க வேண்டும். தனக்குத் தொடர்பில்லாத தனக்கு முழுமையாகத் தெரியாத விஷயங்களில் கருத்துக் கூற வருவது விளம்பர ஆசையின் விளைவு என்பது மட்டுமல்ல; விரும்பத்தகாததும் ஆகும்.

இதை வெளியிடுகின்ற பத்திரிகையும் நரம்பியல் வல்லுநர்களிடம் கருத்தறிந்து போட வேண்டும்.

இதைவிடக் கொடுமையான இன்னொரு வேண்டுதல் திருப்பதியில் நடந்தது. 14.9.1996 அன்று ‘தினத்தந்தி’யில் வந்த செய்தியைக் கீழே தருகிறேன்.

”திருப்பதியின் அடிவாரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு 30 வயது வாலிபர் ஒருவர் முழங்காலாலேயே படி வழியே கடந்து சென்று சாமியைத் தரிசனம் செய்தார்”

படிகளில் அவர் முழங்காலால் சென்றபோது. அவர் முழுக்கால் சட்டை தேய்ந்து கிழிந்ததால், காலிலிருந்து இரத்தம் கொட்டியது இருந்தாலும் அவர் சோர்ந்து விடாது மற்றொரு பக்தர் கொடுத்த துணியை முழங்காலில் கட்டிக்கொண்டு. தொடர்ந்து முழங்காலாலேயே சென்று கோயிலை அடைந்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி அருகேயுள்ள திருவகனஜம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது தந்தையின் முழங்கால் வியாதி குணமடைய இப்படி வேண்டுதலாம்”

இப்படிப்பட்ட வேண்டுதல்கள் அர்த்த முள்ளவையா? அறிவுக்கு உகந்தவையா? கடவுள் இதையெல்லாம் விரும்புகிறதா? சிந்திக்க வேண்டும்.

சிறப்புக் கட்டுரை

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா?

வெறுங்காலால் நெருப்பின் மீது நடப்பதாகக் கூறுகின்றவர்கள் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடிவதில்லையே ஏன்?

வெறுங்கையில் நெருப்பை ஏந்தினால் நெருப்பு ஒரே இடத்தில் (உள்ளங்கையில்) நிலைத்து நிற்கிறது. அதனால், நெருப்பு கையைச் சுட்டுப் புண்ணாக்கும். ஆகையால்தான் நெருப்பை வெறுங்கையில் ஏந்த யாரும் முன் வருவதில்லை. ஆனால் தீ மிதிப்பது அப்படி அல்ல.

தீ மிதி தத்துவம்:

நெருப்புக் குழியில் இறங்கும்போது நெருப்பில் எந்த இடத்திலும் கால்கள் நிலைத்து நிற்பதில்லை. இடம் மாறிக் கொண்டேயிருக்கிறது. விரைந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆகையால் கால் சூடு ஏறுவதற்கோ, கால் புண்ணாவதற்கோ வாய்ப்பில்லை. தீ மிதிக்கும்போது. அதிக அளவில் பரப்பப்பட்டுள்ள நெருப்பில்தான் நடப்பார்கள். நெருப்பு அதிக அளவில் பரப்பப்பட்டிருப்பதோடு. சமமாகப் பரப்பப்படுதல் என்பது சுடாமல் இருப்பதற்கு உதவும்.

ஆணிச் செருப்பு: காவடி எடுக்கும்போது சிலர் ஆணிச் செருப்பில் ஏறி நடப்பார்கள். ஆணிச் செருப்பு என்பது மரத்தால் செய்யப்பட்ட செருப்பில். ஆணிகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும். ஆணிகள் மேல் முனை கூராக இருக்கும். அதாவது கால் வைக்கும் பரப்பு, கூரிய ஆணிகளை நெருக்கமாகக் கொண்டதாக இருக்கும்.

மேலும், கூர்முனைகள் அனைத்தும் ஒரே மட்டமாக உயரம் குட்டை இல்லாமல் இருக்கும். நெருக்கமாகவும் இருக்கும். அந்த ஆணிச் செருப்பைக் காலில் அணிந்து கொண்டு நடக்கும்போது காலில் ஆணி குத்துவதில்லை. காரணம் ஆணிகள் கூர்மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமபரப்பிலும் நெருக்கமாகவும் அதிக அளவிலும் இருப்பதுதான். தனியாக ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் அது காலில் ஏறிவிடும்.

காரணம் ஒரே ஒரு கூர் ஆணி மட்டும் நீட்டிக்கொண்டு இருந்தால் நமது எடை முழுக்க ஒரே ஆணியில் அமுக்கக் காலினுள் ஆணி ஏறிவிடும். சம உயரத்தில் நிறைய ஆணிகள் இருக்கும்போது நமது எடை எல்லா ஆணிகளிலும் சமமாகப் பகிர்ந்து போகிறது. எந்த ஓர் ஆணியிலும் கால் ஆழப் பதிவதில்லை. ஏதாவது ஓர் ஆணி நீட்டி நின்றாலும் காலில் ஏறிவிடும். ஆணிகள் சமப்பரப்பில் இருப்பதால் காலில் ஏறுவதில்லை. மற்றபடி ஆணி குத்தாததற்குக் கடவுள் அருள் ஏதும் காரணம் இல்லை.

தீ மிதிக்கும் இத்தத்துவம் பொருந்தும். ஒரு தனி நெருப்புத் துண்டு தரையில் கிடக்கும்போது அதை மிதித்தால் காலைச் சுட்டுவிடும்; புண்ணாகி விடும். ஆனால் அதிகப் பரப்பில் நெருப்புத் துண்டுகள் பரப்பப்படும்போது கால் எந்த ஒரு நெருப்புத் துண்டிலும் ஆழப் பதிவதில்லை, அதனால் சுடுவதில்லை. ஒரே இடத்தில் கால் நிலைத்து நின்றால் அதிக நெருப்புப் பரப்பப்பட்டிருந்தாலும் சுட்டுவிடும். எனவே. விரைந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

அடுப்படியில் பெண்கள் நெருப்புத் துண்டை விரலால் எடுத்துப் போடும்போது தணலாக இருக்கும் நெருப்பைத்தான் எடுத்துப் போடுவார்களே தவிர, நீறுபூத்த நெருப்பை (மேலே சாம்பல் படிந்த நெருப்புத் துண்டை) விரலால் எடுக்க மாட்டார்கள். காரணம் என்ன?

நீறு பூத்த நெருப்பின் மீது உள்ள வெண்ணிற மென்மையான சாம்பல் அதிகச் சூட்டுடன் இருக்கும். அதைத் தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும். இது விரலைச் சுட்டு கொப்பளிக்கச் செய்து விடும். நீறுபூத்த நெருப்பை விரைவாக விரலால் எடுத்துப் போட்டாலும் சுட்டு விடும். எனவே,நீறுபூத்த நெருப்புத் துண்டை விரலால் எடுக்க முடியாது. நீறுபடியாத தணலான நெருப்புத்துண்டை விரலால் எடுக்க முடியும்.

தீ மிதிப்பதும் இந்த அடிப்படையில்தான் செய்யப்படுகிறது.தீ மிதிப்பதற்கு முன்பு தீக்குழியில் சில ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். சமமாக வெட்டப்பட்ட ஒரு குழியில் (குழியின் ஆழம், குறைவாகக் கூட இருக்கலாம்) விறகுக் கட்டைகளைப் போட்டு எரிப்பர். கட்டைகள் நன்றாக எரிந்து தணலாக மாறிய பிறகு, அவற்றை அடித்து நொறுக்கிச் சமப்படுத்துவார்கள். அதாவது நெருப்பின் மேல்மட்டம் மேடுபள்ளம் இல்லாமல் சமப்படுத்தப்படும். பிறகு முறத்தால் விசிறி நெருப்பின் மீதுள்ள சாம்பலை அகற்றுவார்கள்.

சாம்பல் அகற்றப்பட்டு. நெருப்புத் தணலாகச் சமபரப்பில் இருக்கும் நிலையில், பக்தர்கள் அதன்மீது விரைந்து வேகமாக நடந்து செல்வார்கள். இதனால் காலில் அதிகச்சூடு ஏறுவதில்லை.

ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து நடக்க வேண்டியது கட்டாயமாகும். ஒரு நெருப்புத் துண்டை உள்ளங்கையில் போட்டு. இந்தக் கைக்கும் அந்தக் கைக்கும் விரைவாய் மாற்றினால் நெருப்புச் சுடாது. அது ஒரே கையில் நிலையாக இருந்தால் சுட்டுவிடும். எனவே. நெருப்பில் விரைந்து நடக்க வேண்டும். விரைவாய் நடந்தால் சுடாது.

மென்மையான சாம்பலை நீக்காமலும் நெருப்பைச் சமமாகப் பரப்பாமலும், மெதுவாக நெருப்பில் நடந்தும் யாரும் தீ மிதிக்க முடியாது.

தீமிதிக்கின்ற சிலர் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, தீ மிதிக்கின்றனர். சில நேரங்களில் தடுமாறி தீயில் வீழ்ந்து உடலில் பலத்த தீக்காயங்களும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கும தீக்காயம் ஏற்படுகிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை! குற்றம். ஆன்மிகம் அறிவைக் கெடுக்கிறது என்பதற்கு இது சரியான சான்று அல்லவா?

இப்படி தீ மிதிக்கிறேன், அலகுக் குத்திக் கொள்கிறேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு, அறிவுக்கும், உடல் நலத்திற்கும் கேடான காரியங்களை ஆன்மிகத்தின் பெயரால் செய்வது அறிவுக்கு அழகா?

இப்படிச் செய்வதற்குப் பதில், பத்து ஏழைக்கு உணவளிக்கிறேன், இரண்டு பிள்ளைகளுக்குக் கல்விச் செலவை ஏற்கிறேன், ஊரைத் தூய்மை செய்கிறேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு அப்பணிகளைச் செய்யலாம் அல்லவா? அதுதானே நலம் தரும், நன்மை தரும்?

எனவே, ஆன்மிக வழியில் கண்ணை மூடிக் கொண்டு அறிவிழக்காமல், அறிவோடு வாழ்வது தானே சரியாகும்! சிந்தியுங்கள்!

எனவே, தீ மிதிப்பது கடவுள் சக்தியால் அல்ல. அது அறிவியல் காரணங்களின்படி தான் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *