40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை – நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு,
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.16  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  பிரதமர்  நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (15.2.2026) எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் குறித்து இக்கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கடித விவரம் வருமாறு:

40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்!

1983 ஆம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு, ஒன்றிய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன், தமிழ்நாடு அரசு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தற்பொழுது, சுமார் 89,000 நபர்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர் என்றும், இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள் என்றும், அதிலும் சுமார் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தனது மனிதாபிமானப் பொறுப்புகளை சிறப்பாக  நிறைவேற்றி வந்தாலும், இலங்கைத் தமிழர்கள் நீண்டகாலமாக சட்டரீதியான நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும்,  பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்துவரும் போதிலும், குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் தற்போதுவரை இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரின் தலைமையில் குழு – அறிக்கை!

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரின் தலைமையில், தமிழ்நாடு அரசு ஆலோசனைக் குழு வினை அமைத்து, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வழங்கிய முக்கியப் பரிந்துரைகள் குறித்து அளித்துள்ள விவரங்கள் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில், இவ்வாலோசனை குழு அளித்த பரிந்துரை களின்படி, 30.06.1987-க்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவர்கள், தாய் அல்லது தந்தை இந்தியாவை சார்ந்தவர்கள், இந்தியரை திருமணம் செய்தவர்கள், இந்திய வம்சாவளி பின்னணியை உடையவர்கள் (அதற்கான சான்றாவணங்களை கொண்ட நபர்கள்) மற்றும் நீண்டகால விசா பெறத் தகுதியுள்ளவர்கள் எனப் பல பிரிவுகளைச் சேர்ந்த இலங்கைத் தமி ழர்கள் தற்போதுள்ள சட்டவிதிகளின் கீழ் முறைப்ப டுத்தப்படவும், அவர்களுக்கான குடியுரிமை வாய்ப்பு களை பெறுவதற்கும் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்றும்,

எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது!

2003 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் அறி முகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது ‘‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்’’ என்ற வகையை அறிமுகப்படுத்தியது. இந்த திருத்தமானது தங்களது உயிரை பாதுகாக்கும் நோக்கத்தோடு, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசினால் பாதுகாப்போடும், மாண்போடும் நடத்தப்படக்கூடிய தமிழ் சொந்தங்களுக்கு எதிர்பாராத, எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும்,

1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிர்வாக அறிவுறுத்தல்கள், நமது பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் வசித்து வரும் இலங்கைவாழ் தமிழர்களிடம் இருந்து பெறப்படும் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்ப தில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்சொந்தங்களுக்கு சட்ட ரீதியான நீண்ட கால தீர்வுகளுக்கு தடையாகவே உள்ளதாகவும்,  சமீபத்திய ஒன்றிய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாக குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணை, 2025 (Immigration and Foreigners (Exemption) Order, 2025) ஆக்கபூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசால்
வழங்கப்படவேண்டும்!

இவ்வாணையின் அடிப்படையில் ஜனவரி 9, 2015 வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை ‘‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக்’’ கருதக்கூடாது என்ற முறையான விளக்கம் ஒன்றிய அரசால் வழங்கப்படவேண்டும் என்றும், இவ்விளக்கம் மிகவும் தேவையான சட்டப்பூர்வத் தெளிவை வழங்குவதோடு இலங்கைவாழ் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வை உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், பி. உலகநாதன் மற்றும் ஒன்றிய அரசு (2019) இடையிலான வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உட்பட பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள், இத்தகைய வழக்குகளில் சட்டத்தை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற சாத்தியமான மற்றும் மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், ஒன்றிய அரசு இத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை பரிசீலித்து உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,

இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப் பங்களை பரிசீலிக்கத் தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை இரத்து செய்திடவேண்டும் என்றும்,

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட அடையாள ஆவணங்களின் அடிப்படையில், குடியுரிமை அல்லது நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு இலங்கைத் தமிழர்கள் விண்ணப்பிக்கும்போது, தற்போதைய நடைமுறையில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும்,

உரிய அதிகாரங்களை
வழங்க வேண்டும்!

மாவட்ட அளவில் உள்ள அலுவலர்களுக்கு (மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்) குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்கான உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும்,

9.1.2015 வரை இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை ‘‘சட்டவிரோதமாகக் குடியேறி யவர்களாகக்’’ கருதக்கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மரியாதையுடனும், ஒழுக்கத்துடனும், ஆழ்ந்த பண்பாட்டு உறவுகளுடனும் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள், ஒன்றிய அரசின் ஒருங்கி ணைப்புடன் ஆதரிக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகள் மூலம் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரு கின்றார்கள் என்றும், அவர்களின் நிலையை தொடர்ந்து “சட்டவிரோதம்” என வரையறுப்பது, அவர்கள் இந்தியாவிற்கு வந்த மனிதாபிமானச் சூழலையோ அல்லது அரசின் அனுமதியுடன் தங்கியிருப்பதையோ, பண்பாட்டு மதிப்பீடுகளையோ பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல முடிவினை எடுப்பீர்கள் என நம்புகிறோம்!

மேற்குறிப்பிட்ட கருத்துகள் மீது விரைவான, மனிதாபிமான அடிப்படையிலான நல்ல முடிவினை எடுப்பீர்கள் என தான் நம்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *