திருவாரூர், பிப்.16- ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்க உற்பத்தி பொருட்களான பால், சோளம் போன்றவற்றிற்கு வரிவிலக்கு அளிப்பதும், இந்தியப் பொருட்களுக்கு வரி விதிப்பதும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் செயல் என குற்றம் சாட்டி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று (15.2.2026) ஒப்பந்த நகல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
அய்க்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள், ஒன்றிய அரசு உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஒன்றிய அரசு அமெரிக்காவோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வேளாண் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு 18 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்காவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யக்கூடிய பால், சோளம் உள்ளிட்ட வேளாண் உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டில் வரியில்லாமல் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் அழிவுப்பாதைக்கு செல்ல நேரிடும். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்படுவார்கள்.
எனவே, உடனடியாக ஒன்றிய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் ஏற்க முடியாது.
எனவே, இதனை கண்டிக்கும் வகையிலும், திரும்ப பெற வலியுறுத்தியும் வர்த்தக ஒப்பந்த நகலை இந்தியா முழுமையிலும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் இந்தியா – அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என தேசியக்குழு அறைகூவல் விடுத்தது.
அதனை ஏற்று தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் ஒப்பந்த நகளை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிரான இந்தியா – அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை விவசாயிகள் தீயிட்டு கொழுத்தினர். ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழுக்கமிட்டனர்.
இந்நிகழ்வில் அய்க்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமுகுடி, நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனிராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகள் ஒன்றிய அரசின் இந்திய அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினர்.
