சென்னை, பிப். 16- “பார்ப்பனரல்லாத ஆண்களும், எல்லா பெண்களும் படிக்க கூடாது என்று இருந்த சமூகத்தில்தான் இன்றைய மணமகளாக இருக்கக்கூடிய அமிர்தவர்ஷினி – அகிலன் இருவரும் மிகச் சிறப்பாக படித்திருக்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் இணை ஏற்பு விழாவில் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் உரையாற்றினார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் – முனைவர் லதா தமிழ்ச்செல்வன் ஆகியோரின் மகன், அகிலன் – அமிர்தவர்ஷினி இணையேற்பு விழா, 15.02.2026 அன்று, காலை 10:30 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் – மேயர் இராமநாதன் மய்யத்தில் அமைந்துள்ள, வள்ளியம்மை அரங்கத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், மணமகனின் தந்தை முனைவர் சி.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், முனைவர் அரசு செல்லையா, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மருத்துவர் எழிலன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார்.
கழகத் தலைவர் குறித்த நேரத்திற்குள் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். அவரை இரு இல்லத்தின் சார்பில், மணமக்களின் பெற்றோரும், தென் சென்னை மாவட்ட கழக சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் இணைந்து வரவேற்றனர். மணமக்களின் உறவினர்கள் கழகத் தலைவரை அணுகி தங்களை அறிமுகம் செய்துகொண்டும், அவரது நலம் விசாரித்தும் மகிழ்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, மணமக்களின் பெற்றோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்புவதை அறிந்து கொண்டு அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து, அவர்களின் விருப்பப்படியே, முதலில் இணையேற்பு விழாவை சுயமரியாதைத் திருமண ஒப்பந்த உறுதிமொழியை கூறி, நடத்தி வைத்தார். அதன்பிறகு, மணமகளின் பெற்றோர் இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண முறையை ஏற்றுக் கொண்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, சுயமரியாதை திருமண முறை என்பது இந்த சமூகத்தில் பெண் அடிமைத்தனத் தையும், ராகு கால அச்சத்தையும் வீழ்த்தியுள்ளது என்பதை விவரித்தார். பொதுவாக கழகத் தலைவர் இதுபோன்ற சமயங்களில் மற்றவர்களை எடுத்துக்காட்டுக்கு சுட்டிக்காட்டுவதை விட தனது திருமணத்தையே எடுத்துக் காட்டாக்கிப் பேசுவதுதான் வழமை. அதையே இங்கும் எடுத்தாண்டார். திருச்சியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் இருவரும் இருந்து, தனது திருமணத்தை நடத்தி வைத்ததையும், அது கொழுத்த ராகு காலத்தில் நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டி, தன்னுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றும், எனது இணையரும் இங்கே வருகை தந்திருக்கிறார். ஆகவே அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தன்னம்பிக்கை பெறும் வகையில் உரை நிகழ்த்தினார்.
மணமக்களின் கல்வித் தகுதியை அழைப்பிதழில் பார்த்துவிட்டு, 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை சுட்டிக்காட்டி பெருமிதப்பட்டார். மேலும் அவர், “நான் பொதுவாக மணமக்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஆலோசனைதான்” என்று சொல்லிவிட்டு, ”நீங்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டத் தவறாதீர்கள் என்பதுதான் அந்த ஆலோசனை” என்று கூறி தமது உரையை பலத்த கைதட்டல் களுக்கிடையே நிறைவு செய்தார்.
நன்கொடை
அதைத் தொடர்ந்து, பெரியார் உலகத்திற்கு ரூ. இரண்டு லட்சம் நன்கொடையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மணமக்கள் வழங்கினர். தொடக்கத்தில் மணமகனின் தந்தை சி.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மணமகளின் தந்தைபாலசுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறி மணவிழாவை நிறைவு செய்தார்.
நிகழ்வில் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிட நிதி தலைவர் சீதாராமன், எமரால்டு ஒளிவண்ணன், நல்லினி ஒளிவண்ணன் குடும்பத்தினர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், காவியா, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ராமு, கோவி.கோபால், கழக இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், வடசென்னை இளைஞரணித் தோழர் கார்த்திக், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, உடுமலை வடிவேல், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், பவானி, கி.மணிமேகலை மற்றும் இரு இல்லத்தார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின் உரையைக் கேட்டுப் பயன்பெற்றனர்.
