சென்னை, பிப்.15– நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங் களிலும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, 2026ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தகுதியுள்ள நபர்கள் இணையம் மூலம் 18ஆம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம். ஏப்ரல் 10ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங் களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் செய்யலாம்.
இதையடுத்து, தகுதித் தேர்வின் தாள் 1- ஜூலை 4ஆம் தேதி காலையிலும், தாள் 2- தேர்வு ஜூலை 5ஆம் தேதி காலையிலும் நடக்கும்.
இந்தத் தேர்வுகள் குறித்த இதர விவரங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் விவரங்கள் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளம் http://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
