சென்னை, பிப்.15– சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து நரம்போட்டமான சர்தார் படேல் சாலையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு கட்டப்பட்ட புதிய ‘எல்’ வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) காலை 10 மணியளவில் திறந்து வைத்தார்.
அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் 3.2 கி.மீ நீளம் கொண்ட சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை, சென்னை அய்.அய்.டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா போன்ற முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 61 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
வடிவம் மற்றும் நீளம்: 652 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் ‘எல்’ (L) வடிவில் இருவழிச் சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலை (OMR) நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்த முடியும்.
தடையற்ற பயணம்
இந்த பாலத்தின் மூலம் அடையாறில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் எந்தவித சிக்னல் தடையும் இன்றி பயணிக்க முடியும். அதேபோல், கிண்டி-அடையாறு மற்றும் OMR-கிண்டி இடையேயான போக்குவரத்தும் சீராகும்.
பாதுகாப்பு வசதிகள்
வளைவுகளில் வாகனங்கள் எளிதாகத் திரும்பும் வகையில் ‘குறுக்கு வெட்டு சாய்வு’ (Superelevation) முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பைக் கருதி 30 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் மற்றும் இரவு நேரப் பயணத்திற்காக நவீன மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் மூலம், மத்திய கைலாஷ் சந்திப்பில் தினசரி சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இனி நெரிசலின்றி நிம்மதியாகப் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
